எப்போதும் துணையாக இருந்திடுவாய் முருகா!… கவிதை… ஜெயராமசர்மா

சந்தமொடு சிந்து செந்தமிழில் பாட
தந்தருள வேண்டும் செந்தில் முருகையா
உந்தனடி தொழுது உரத்த குரலெடுத்து
சந்தததும் பாட வைத்திடுவாய் முருகா
நீல மயிலேறி நீயிருக்கும் காட்சி
கானக் குறவள்ளி கையணைக்கும் காட்சி
தேவமகள் தெய்வானை சேர்ந்தணையும் காட்சி
செப்பும்வகை பாட்டெழுத செய்திடுவாய் முருகா
அருணகிரி புகழ்பாட வைத்த முருகையா
அடியேனும் உனதுபுகழ் பாடிவிட வைப்பாய்
குமரகுருபரர் தமிழைக் கொட்டிவிடச் செய்தாய்
குமரையா உனைப்பாட அருள்புரிவாய் ஐயா

செந்தமிழே நீயென்று செப்புகிறார் கந்தா
உந்தனது நினைப்புடனே இருக்கிறேன் ஐயா
அந்தமிலா ஆனந்த அருளூற்றே கந்தா
அடியேனைத் தமிழ்பாட வைத்திடுவாய் ஐயா
எப்போதும் என்னேரம் என்நாவில் உன்நாமம்
செப்பாமால் ஒருபோதும் இப்புவியில் வாழேன்
தப்பாமல் உனைநானும் தமிழெடுத்துப் பாடிவிட
எப்போதும் துணையாக இருந்திடுவாய் முருகா !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழிமொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()