வெனிசுவேலா நிலநடுக்கம் : மக்கள் மத்தியில் எதிர்ப்பைச் சந்தித்த இடைக்கால ஜனாதிபதி

வெனிசுவேலாவில் அடுத்தடுத்து தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களால் தலைநகர் காரகாஸ் கடுமையான பேரழிவைச் சந்தித்துள்ள நிலையில், அங்கு நிலவரங்களை நேரில் பார்வையிடச் சென்ற நாட்டின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸிற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துக் கூச்சலிட்டுள்ளனர்.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்துள்ள காரகாஸின் குடியிருப்புப் பகுதி ஒன்றிற்கு ஜனாதிபதி சென்றபோது, அங்குத் திரண்டிருந்த உள்ளூர்வாசிகள் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்துக் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வெனிசுவேலாவில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் கடுமையான பொருளாதார வீழ்ச்சி மற்றும் பலவீனமான உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் பெரும் தொய்வைச் சந்தித்துள்ளதே மக்களின் இந்த கோபத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த நூற்றாண்டின் மிக மோசமான இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்துள்ள வெனிசுவேலாவில், 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் பதிவான இந்த இரட்டை நிலநடுக்கங்களால் இதுவரை 920இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50,000இற்கும் அதிகமான மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி மாயமாகியிருக்கலாம் என ஐநா சபை அஞ்சுகிறது.
போதிய நவீன மீட்புக் கருவிகள் மற்றும் அம்பியூலன்ஸ் வசதிகள் இல்லாததால், பாதிக்கப்பட்ட மக்களின் உறவினர்களே வெறும் கைகளால் இடிபாடுகளைத் தோண்டித் தங்களுக்கு வேண்டியவர்களைத் தேடி வருகின்றனர்.
அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தங்களின் மீட்புக் குழுக்களை அனுப்பத் தொடங்கியுள்ள போதிலும், நாட்டின் தற்போதைய மோசமான உள்நாட்டுச் சூழல் காரணமாகத் தங்களுக்கு விரைவாக உதவி கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் அந்நாட்டு மக்கள் கொதித்தெழுந்துள்ளனர்.
![]()