அதிகாரப் பகிர்வு, மாகாண சபைத் தேர்தலுக்கு வலியுறுத்து; பிரிட்டன் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளரிடம் சுமந்திரன், சாணக்கியன் தெரிவிப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய இராச்சியத்தின்(பிரிட்டன்) வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸை , இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் இணைந்து சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது அதிகாரப் பகிர்வு, நீண்டகாலமாக நடத்தப்படாமல் நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதன் அவசியம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் பாதுகாப்பு, இடைநிலை நீதி, ஜனநாயக மற்றும் நல்லாட்சிச் சீர்திருத்தங்கள், சட்டத்தின் ஆட்சி, நல்லிணக்க முயற்சிகள் மற்றும் இலங்கையில் அனைத்து மக்களுக்கும் நீதியான, கண்ணியமான மற்றும் நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான அவசியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆழமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகள், அவர்களது அடிப்படை உரிமைகள், சமத்துவம், கண்ணியம் மற்றும் நிலையான சமாதானத்தை உறுதிப்படுத்தும் அரசியல் கட்டமைப்பின் அவசியத்தையும் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துதல், அரசியல் பொறுப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார மீட்சியுடன் இணைந்த நிலையான அரசியல் முன்னேற்றம் நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என்பதையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் குழுவினர் எடுத்துரைத்தனர்.
ஜனநாயகம், மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லாட்சி மற்றும் நீதியுடனும் நிலைத்தன்மையுடனும் கூடிய அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்காக ஐக்கிய இராச்சியம் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் அர்ப்பணிப்பையும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் உயர்வாகப் பாராட்டிய இலங்கை தமிழ் அரசுக் கட்சி குழுவினர், இத்தகைய தொடர்ச்சியான சர்வதேச ஒத்துழைப்பும் ஈடுபாடும், இலங்கையில் நிலையான சமாதானம், நல்லிணக்கம் மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட நீடித்த அரசியல் தீர்வை நோக்கிய முன்னேற்றத்திற்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என வலியுறுத்தினர்.
![]()