வடக்கில் எமது கூட்டமைப்பை பலவீனப்படுத்த ஆளுநர் ஊடாக அரசு நடவடிக்கை எடுக்கிறதா?; சந்தேகம் எழுப்பும் செல்வம்

வடக்கில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கு ஆளுநர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்கள் எழுகின்றது என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற நச்சு போதைப் பொருட்களை ஒழித்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுத்தல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த விவாதத்தில் உரையாற்றிய அடைக்கலநாதன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாநாகர சபையின் தவிசாளர் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உதவி தவிசாளரும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவராவார். இந்நிலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதற்கான நிலைமை காணப்படுகின்றதா என்ற சந்தேகங்கள் எழுகின்றன.
ஊழல் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகையில், மன்னார் நகர சபையில் பல ஊழல்கள் நடந்து நிரூப்பிக்கப்பட்டுள்ள போதும் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு அரசாங்கமும் ஆளுநரும் முயற்சிக்கின்றனரா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோருகின்றோம் என்றார்.
![]()