கிளிநொச்சி கிராஞ்சி பிரதேசத்தில் தென்னந்தோட்டங்களை அழித்து காற்றாலை மின் திட்டம் வேண்டாம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரமாக உள்ள தென்னந்தோட்டங்களை அழித்து காற்றாலை மின் திட்டத்தை அமைக்கும் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும், அந்தத் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுப்பதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற இலங்கை மின்சார சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது சிறீதரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இயற்கையின் வழியிலும், நீர் மின்சாரம் ஊடாகவும் நாட்டுக்கு தேவையான மின்சார தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இருந்தபோதும் சில இடங்களில் இயந்திரங்கள் மூலம் மின்சாரம் வழங்கும் செயற்திட்டங்கள் இடம்பெறுகின்றன. அத்துடன் சூரிய சக்தி, காற்றலை ஊடாக மின்சாரத்தை சேமிக்கும் செயற்பாடுகளும் நடக்கின்றன.
இப்போது கிளிநொச்சி மாவட்டத்தில் கிராஞ்சி, வலைப்பாடு, பேரவில் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பகுதி கிளிநொச்சியின் மேற்கு பகுதியில் தனியான தீவு போன்று மலைபோல கட்சியளிக்கும் பிரதேசங்களாகும். அந்த இடங்களுக்கு போக்குவரத்து பாதைகளும் கிடையாது. தென்னந்தோட்டங்களுக்கு பிரபலமான இடமாகும். இங்கு கிராஞ்சி கிராம அலுவலகர் பிரிவில் 2000 ஏக்கர் பகுதிகளில் காற்றாலை மூலம் மின்சாரம் பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. இதன்படி அங்கு பல நூற்றுக் கணக்கான குடும்பங்ளில் தென்னந்தோட்டங்கள் அழிக்கப்படுகின்றன. தென்னம்பிள்ளைகளை அழித்துதான் காற்றாலைகளை அமைக்க வேண்டுமா? இது தொடர்பில் அந்த மக்கள் அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் இதுவரையில் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
அங்கு தரிசு நிலங்கள் உள்ளன. அவற்றில் காற்றாலைகளை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு அல்ல. ஆனால் அவர்களின் வாழ்வாதரமான தேன்னந்தோட்டங்களை அழித்து அவர்களை அங்கிருந்து வெளியேற செய்து மின்சாரத்திற்காக காற்றாலைகளை அமைப்பது அந்த மக்களுக்கு இழைக்கும் மிகப்பெரிய குந்தகமாகும். இதனால் வலுச் சக்தி அமைச்சர் இந்த விடயத்தை கருத்திற்கொள்ள வேண்டும். குறித்த பிரதேசத்தில் செய்யும் திட்டத்தை நிறுத்தி தரிசு நில பகுதிக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
இதேவேளை கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தமது பிரச்சினைகள் தொடர்பில் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். அவர்கள் ஒரு ஏக்கரில் உற்பத்திக்காக இரண்டு இலட்சத்து 12 ஆயிரம் 700 ரூபாவை செலவிட வேண்டியுள்ளது. ஒரு ஏக்கரில் 1750 கிலோ நெல்லையே உற்பத்தி செய்கின்றனர். அவற்றை கிலோவொன்றை 120 ரூபா அடிப்படையில் இரண்டு இலட்சத்து 10ஆயிரம் ரூபாவுக்கே விற்க முடிகின்றது. அப்படியாயீன் மேலதிகமாக 2700 ரூபா மேலதிக செலவை செய்ய வேண்டியுள்ளது. இதனால் 135 ரூபாவுக்கு நெல் கிலோவை விற்கக்கூடியதாக உத்தரவாத விலையை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
![]()