செம்மணிப் புதைகுழிக்கு எப்போது நீதி கிடைக்கும்?; எத்தனை நாட்கள் காத்திருப்பது? – சாணக்கியன் கேள்வி

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக காத்திருப்பது? முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும். செம்மணி தொடர்பான உறவுகளின் போராட்டத்தை அரசியல் என்று கருத வேண்டாம். அது அவர்களின் ஆதங்கம் ,எதிர்பார்ப்பு என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யுமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27/2 இல் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர்களான அலி சப்ரி, விஜயதாஸ ராஜபக்ச ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வந்து மக்களை சந்தித்து வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவையும் கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகைத் தந்திருந்தார். செம்மணி மனிப் புதைகுழிப் பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
இதன்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்தப் போரட்டத்தின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது என்று குறிப்பிடக் கூடாது. அது பாதிக்கப்பட்ட மக்களின் ஆதங்கம், எதிர்பார்ப்பின் வெளிப்பாடு.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு தற்போது தான் முழுமையான பதில் அளிக்கப்பட்டுள்ளது . அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்கியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இதுவரையில் 412 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 409 எலும்புக்கூடுகள் முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு வேண்டுகின்றோம்.இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக காத்திருப்பது.1996 ஆம் ஆண்டுக்கு முன்னரும் இந்தப் பகுதியில் மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. கடற்படையின் அதிகாரிகள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
![]()