பயங்கரவாதத் தடைச் சட்ட நீக்கம் ; உடனடியாகச் செய்ய கொத்து ரொட்டியல்ல

உடனடியாக செய்வதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் ஒன்றும் கொத்து ரொட்டியல்ல. ஆனாலும் ஜனாதிபதி கூறியுள்ளதுபோல் எதிர்வரும் இரண்டு மாதங்களில் அதற்கு தீர்வு காணப்படும் என நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
இன்றைய தினமும் (நேற்று வியாழக்கிழமை ) சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலகக் குழு தலைவரான ஹரக் கட்டாவிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் சட்டத்தரணி மற்றவர் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளரான சரித்த அபேசிங்க. இவர்கள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போதைப் பொருளுக்கு எதிராக போராடுகின்றார். இவ்வாறான நிலையில் சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள சட்டத்தை இங்கு கொண்டு வர வேண்டும். மரண தண்டனையை கொண்டு வர வேண்டும் என்று அவர் அடிக்கடி வலியுறுத்தினார். அந்த வகையில் சரித்த அபே சிங்கவையும் தூக்கிலிட வேண்டுமென்றா அவர் கூறுகின்றார்?
குறைந்தபட்சம் எதிர்க்கட்சித் தலைவரின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமா? .பேச்சுகளுக்குப் பதிலாக செயலில் காட்டுவதையே நாம் எதிர்பார்க்கின்றோம். எதிர்க்கட்சித் தலைவர் ஒழுக்கமிக்க அரசியலுக்கு முதலிடம் கொடுப்பவர் என்பதால் நாம் அதனை எதிர்பார்க்கின்றோம்.
நாம் பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிப்பது தொடர்பில் தெரிவித்துள்ளோம். அதனை நாம் நிறைவேற்றுவோம். 79 ஆம் ஆண்டிலிருந்து அது தொடர்பில் வெறும் பேச்சுக்கள் மாத்திரமே முன்வைக்கப்பட்டன. எனினும் கடந்த ஒன்றரை வருடங்களாக நாம் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஜனாதிபதி அது தொடர்பில் சபையில் தெரிவிக்கையில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் அதற்கு தீர்வு காணப்படும் என குறிப்பிட்டுள்ளார். அது மிகவும் கவனமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம். எனினும் நாம் அதை நிறைவேற்றுவோம்.
எதிர்க்கட்சி அதனை கொத்துரொட்டி போன்று நினைக்கிறது. அவ்வாறி ல்லை.அது மிக முக்கியமான விடயம் அதற்கு ஏற்ப நாம் அதனை கையாளுவோம். நிகழ்நிலை சட்டமும் அவ்வாறுதான். எதிர்க்கட்சி நினைப்பது போல் அவற்றை உடனடியாக மேற்கொள்ள முடியாது.பொறுமையுடன் பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டியுள்ளது.நாட்டு மக்கள் புத்திசாலிகள். அதற்காகத்தான் இத்தகைய விடயங்களை மேற்கொள்வதற்காக அவர்கள் எம்மை ஆட்சிக்கு கொண்டு வந்துள்ளனர் என்றார்.
![]()