இலங்கை

வடக்கு கிழக்கில் வெற்றி கிட்டாது; பொதுஜன பெரமுன கூறுகிறது

உரிய காலத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தம்மால் வெற்றி பெற முடியும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு இன்னும் ஏற்படவில்லை என்றும், குறைந்தது ஐந்து சபைகளிலாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நேரடியாக ஆட்சி அமைக்கும் பலத்தைக் கொண்டுள்ளது என்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவது மற்றும் அதில் பொதுஜன பெரமுனவின் தற்போதைய செல்வாக்கு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய பிரதான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய திசைகாட்டி அரசானது மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ளக் கடுமையாக அஞ்சுகின்றது. ஒருவேளை இப்போது தேர்தல் நடத்தப்பட்டால், தங்களது வாக்கு வங்கி சரிந்து மீண்டும் பழையபடி 3 சதவீதத்திற்கே வீழ்ச்சியடைந்து விடுவோம் என்ற பயம் அரசுக்குள் நிலவுகின்றது.

இதனால்தான், மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் அரசாங்கம் பல்வேறு காரணங்களைக் கூறித் திட்டமிட்டபடி இழுத்தடித்து வருகின்றது. எவ்வாறாயினும், நாட்டில் எப்போது தேர்தல் நடத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அதில் தனித்தோ அல்லது கூட்டணியாகவோ நிச்சயம் போட்டியிடும்.

எனினும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளின்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பகுதிகளில் எம்மால் முழுமையாக வெற்றிபெற முடியும் என்ற அதீத நம்பிக்கை இன்னும் எமக்கு ஏற்படவில்லை என்பதை நாம் யதார்த்தமாக ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஆனால், தற்போதைய நாட்டின் அரசியல் நிலைவரங்களின்படி, ஏனைய மாகாணங்களில் உள்ள சபைகளில் குறைந்தது ஐந்து சபைகளிலாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நேரடியாக ஆட்சி அமைக்கும் பலத்தைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, எமது தலைமையிலான பலமிக்க கூட்டணியே வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் அமோக வெற்றி பெறும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button