இலங்கை

நயினாதீவு பெருந்திருவிழா காலத்தில் தொடர் மின் வெட்டு – மக்களுடன் பக்தர்களும் பெரும் அவதி!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வரும் நிலையில், நயினாதீவில் மின்சார சபையால் ஏற்படுத்தப்படும் தொடர் மின்வெட்டு காரணமாக ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுடன் உள்ளூர் மக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

​குறிப்பாக கடந்த இரு நாள்களாக இரவு நேரங்களில் அதிக நேர மின்வெட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது.

ஆனால் அண்மையில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், நயினாதீவு பெருந்திருவிழா காலத்தில் எவ்வித தடையுமின்றி 24 மணித்தியாலமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்தது.

​ஆயினும், வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு முற்றிலும் மாறாக, தற்பொழுது நாளாந்தம் பல தடவைகள் மின்சார சபையினால் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக ஆலய சூழல் பகுதியில் அதிக தடவை இந்த மின்வெட்டு ஏற்படுத்தப்படுகின்றது.

இது குறித்து மக்கள் துறைசார் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போது, உயர் அழுத்தம், மின்சார உற்பத்தி போதாது என்ற வழக்கமான காரணத்தையே அவர்கள் பதில்களாகக் கூறி வருகின்றனர்.

இன்றைய அரசும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் மக்களுக்கு சொல்வது ஒன்றாகவும், களத்தில் செய்வது வேறொன்றாகவும் இருக்கின்றது.

​இதேவேளை நயினாதீவு பெருந்திருவிழாவை முன்னிட்டு உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி நயினாதீவுக்கு வருகை தருகின்றனர்.

இவ்வாறானதொரு மக்கள் நெரிசல் மிக்க சூழலில், இரவு நேரங்களில் மின்சாரம் தடைப்படுவது பெரும் அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.

​மின்வெட்டைச் சாதகமாகப் பயன்படுத்திபக்தர்களின் நகைகள் மற்றும் உடைமைகள் திருடப்படும் சம்பவங்களும், புனித பூமியின் பாரம்பரியத்திற்கும் கலாசாரத்திற்கும் இழுக்கு ஏற்படுத்தும் வகையிலான சீரழிவுகள்போன்ற அசம்பாவிதங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிந்தனர்.

​எனவே தீவுப்பகுதிக்கான பாதுகாப்பு மற்றும் பக்தர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, எஞ்சிய திருவிழா நாட்களிலாவது எவ்வித தடையுமின்றி தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்ய அரசு மற்றும் மின்சார சபை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினாதீவு மக்களும் பக்தர்களும் அவசர கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button