இலங்கை

வட,கிழக்கில் இராணுவத்தினரே போதைப் பொருள் வர்த்தகம்; மாணவர்களே அவர்களின் இலக்கு

வடக்கு,கிழக்கில் அதிகளவில் போதைப் பொருள் வர்த்தகத்தை இராணுவத்தினரும் இராணுவத்தினரோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களுமே முன்னெடுக்கின்றனர்.பாடசாலை மாணவர்களே இவர்களின் இலக்கு என தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போதைப்பொருள் அச்சுறுத்தலினை எதிர்த்துப் போராடுதல் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

கடந்த கால ஆட்சியாளர்களினால் போதைப்பொருள் வர்த்தகம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளினால், கைதுகளினால் ஆரம்பத்தில் போதைப்பொருள் வர்த்தகம் குறைவடைந்திருந்தபோதும் தற்போது அது மீண்டும் தலைவிரித்தாடுகின்றது.

வடக்கு,கிழக்கு மாகாணங்களில்தான் போதைப்பொருள் வர்த்தகம் அதிகளவில் நடக்கின்றது. யுத்தத்திற்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கு,கிழக்கில் போதைப் பொருள் என்பது மிக மிக அரிது. எனெனில் விடுதலைப்புலிகளிடம் மிகக் கட்டுக்கோப்பான ,கட்டுப்பாடான நிர்வாகம் இருந்தது.

ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கு,கிழக்கில் அதிகளவில் போதைப் பொருள் வர்த்தகத்தை இராணுவத்தினரும் இராணுவத்தினரோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களும் பேரினவாத குழு அரசியலோடு சேர்ந்து செயற்படுகின்றவர்களுமே தீவிரமாக முன்னெடுத்துள்ளனர் .வடக்கு,கிழக்கு தமிழர்களின் கலாசாரத்தை,பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக,தமிழரின் இருப்பை கேள்விக்குறியாக்க வேண்டும் என்பதற்காக சீரழிக்க வேண்டும் என்பதற்காக போதைப்பொருள் வர்த்தகம் திட்டமிடப்பட்ட முறையில் வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போதைய ஆட்சி இதனை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை,தற்போது கூட வடக்கு,கிழக்கில் மாணவர்களிடையில் ,அவர்களை முக்கிய இலக்காகக் கொண்டு இந்த போதைப் பொருள் வர்த்தகம் நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.ஒவ்வொரு பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு இந்த போதைப் பொருள் வர்த்தகர்கள் போதைப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்காக ஒவ்வொரு பாடசாலைகளிலும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு குழுவை அல்லது ஒரு பொறிமுறையை அமைத்து இந்த மாணவர்களுக்கான போதைப்பொருள் வர்த்தகத்தை தடுக்க வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button