இலங்கை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பிரதான சூத்திரதாரியை பாதுகாக்கவே போராட்டம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியையும், தாக்குதலுக்கு உளவு பார்த்தவர்களையும் பாதுகாக்கவே தற்போது சிலர் போராடுகிறார்கள். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தற்போது சிறந்த முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கோத்தபாய ராஜபக்சவுக்கு பயணத்தடை விதிக்கும் வரை ஆரோக்கியமாக இருந்த சுரேஸ் சலே பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னர் திடீர் நோயாளியாக மாறிவிட்டார் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த

அவர் மேலும் பேசுகையில்,

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் கோத்தபாய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கான சூழல் திட்டமிட்ட வகையில் உருவாக்கப்பட்டது. 2019.04.21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன. 2019.04.23 ஆம் திகதி தான் ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடுவேன் என கோத்தபாய ராஜபக்ச அறிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்னர் நாட்டின் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் முழுமையாக வீழ்ச்சியடைந்தது.பொருளாதார பாதிப்புக்கு இதுவும் ஒரு பிரதான காரணி . கத்தோலிக்க மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களும் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டார்கள்.முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக திட்டமிட்ட வகையில் வெறுப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறான பின்னணியில் தான் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

சுரேஸ் சலே நாடகம் தற்போது அரங்கேற்றப்படுகிறது.முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா இந்த நபர் தொடர்பில் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும், சுரேஸ் சலேவுக்கும் இடையில் தொடர்புண்டு என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக பல விடயங்கள் வெளியாகும் போது ஒரு தரப்பினர் பிரதான சூத்திரதாரியையும், தாக்குதலுக்கு உளவு பார்த்தவர்களையும் பாதுகாக்கவே போராடுகிறார்கள். இது தொடர்பில் நாடு என்ற ரீதியில் வெட்கப்பட வேண்டும். ஜனநாயக போராட்டம் எனக் கூறிக் கொண்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மறைமுகமாக இடையூறு விளைவிக்கிறார்கள். ஆனால் எக்காரணிகளுக்காகவும் விசாரணைகளை இடைநிறுத்த மாட்டோம்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழக்கு நடவடிக்கைகளுக்காக நீதிமன்றம் செல்கிறார்.அப்போது அவர் பரிவாரங்களுடன் நீதிமன்றம் செல்லவில்லை. ஆனால் ராஜபக்சக்களும் , ரணில் விக்கிரமசிங்கவும் நீதிமன்றம் செல்லும் போது பரிவாரங்களுடன் செல்கிறார்கள். சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்படவே இவர்கள் முயற்சிக்கிறார்கள்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் தற்போது சிறந்த முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கோத்தபாய ராஜபக்சவுக்கு பயணத்தடை விதிக்கும் வரை ஆரோக்கியமாக இருந்த சுரேஸ் சலே பயணத்தடை விதிக்கப்பட்டதன் பின்னர் திடீர் நோயாளியாக மாறிவிட்டார். தற்போது பல போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். வங்குரோத்து நிலையடைந்த அரசியல்வாதிகளும் அவருக்காக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். என்னதான் இவர்கள் செய்தாலும் உண்மைகள் விரைவில் வெளிவரும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button