4 சிறுவர்கள், 2 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் அகழ்வு; நேற்றும் 12 எலும்புக் கூடுகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று புதன்கிழமை 12 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் 7 எலும்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அகழ்ந்து எடுக்கப்பட்ட 7 எலும்புக் கூடுகளில் 4 மனித எலும்புக் கூடுகள் சிறுவர்களுடையதும் 2 எலும்புக் கூடுகள் குழந்தைகளுடையது எனவும் சட்டத்தரணி கைலாயநாதன் சுபாகர் தெரிவித்தார்.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 21 ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று நடைபெற்ற நிலையில் அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி கைலாயநாதன் சுபாகர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் நீதிவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா, சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், ருகுணு பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், தடயவியல் பொலிஸார் உள்ளிட்ட குழுவினர் அகழ்வு பணிகளில் பங்கேற்றனர்.
இதுவரை மொத்தமாக 339 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் 318 மனித என்புக் கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாடுகளின் எலும்புகளும் அந்த இடத்தில் காணப்பட்டது.அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும் – என்றார்.
![]()