உலகம்

டிரம்பிற்கு எதிராக அமெரிக்க பிரதிநிதிகள் சபை கடுமையான தீர்மானம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளும் எதிர்கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட தீர்மானம் ஒன்றை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியுள்ளது.

இது ஜனாதிபதியின் போர்க் கொள்கைக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட ஒரு கடுமையான அரசியல் அழுத்தமாகக் கருதப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பமான இந்த ஈரான் போர் தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்தின் மீதான தமது அதிருப்தியை வெளிப்படுத்தி, ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்தனர்.

இதற்கமைய, இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக 208 வாக்குகளும் அளிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்றத்தின் அனுமதியின்றி ஜனாதிபதி பயன்படுத்தும் போர்க்கால அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பிரதிநிதிகள் சபை மேற்கொண்ட நான்காவது முயற்சி இதுவாகும்.

இருப்பினும், இந்தத் தீர்மானம் சட்டமாக மாற வேண்டுமாயின், குடியரசுக் கட்சியின் பெரும்பான்மையைக் கொண்ட அமெரிக்க செனட் சபையின் அங்கீகாரத்தையும் இது பெற வேண்டும்.

செனட் சபையில் இது நிறைவேற்றப்பட்டாலும் கூட, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்துவதற்கு அது போதுமானதாக இருக்காது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், இந்தத் தீர்மானத்தை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதி டிரம்பிற்கு உண்டு.

ஜனாதிபதியின் இந்த வீட்டோ அதிகாரத்தை முறியடிக்க வேண்டுமாயின், இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை வாக்குகள் அவசியமாகும். செனட் சபை இதற்கு முன்னர் ஏழு சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் இது போன்றதொரு தீர்மானத்தை முன்வைத்த போதிலும், அது இதுவரை முழுமையான வாக்கெடுப்பிற்கு விடப்படவில்லை.

இதற்கிடையில், இரு தரப்பினருக்கும் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ள போதிலும், கடந்த நாட்களில் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், ஈரானும் அதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் நட்பு நாடான குவைத் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

எவ்வாறாயினும், வாக்கெடுப்பிற்கு முன்னர் வெள்ளை மாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி டிரம்ப், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் “மிகவும் சிறப்பாக” நடைபெற்று வருவதாகவும், இந்த வார இறுதியில் அது முடிவுக்கு வரக்கூடும் என்றும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button