இந்தியா

கச்சதீவுக் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த விஜய்யின் அமைச்சர்

 

சென்னை திருவான்மியூர் மீனவ பகுதியில் அமைச்சர்கள் ஸ்ரீநாத், ஆர்.குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்த போது கச்சதீவு குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர்கள் கருத்துக்கூற மறுத்துள்ளனர்

மீனவளத் துறை அமைச்சராக நடிகர் ஸ்ரீநாத்தும், செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக ஆர்.குமாரும் நியமிக்கப்பட்டனர். அமைச்சர்கள் பொறுப்பேற்றதும் ஆய்வு பணிகள், ஆலோசனை கூட்டங்கள் உள்ளிட்டவைகளை நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஸ்ரீநாத்தும், குமாரும் திருவான்மியூர் மீனவ பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது மீனவ பகுதிமக்களிடம் இருவரும் குறைகளை கேட்டறிந்தனர். வெள்ளம், மழை காலங்களில் எந்த மாதிரியான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பது குறித்தும் அவர்கள் கேட்டனர்.

இதையடுத்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்களிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அதில் மீனவளத் துறை அமைச்சர் என்ற முறை ஸ்ரீநாத்திடம் கச்சதீவு குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என கேட்டதற்கு, ‘நோ கொமெண்ட்ஸ்’ எனத் தெரிவித்தார் .

அது போல் கச்சதீவு குறித்த கேள்விக்கும் அமைச்சர் குமார் ‘நோ கொமெண்ட்ஸ்’ எனத் தெரிவித்தார். குறைந்தபட்சம் கச்சதீவு விவகாரம் குறித்து சில விஷயங்களை பேசியிருக்கலாம். கச்சதீவு பிரச்சினையால் இந்திய மீனவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், கச்சதீவை மத்திய அரசு மீட்டு தர வேண்டும் என்பதையாவது சொல்லியிருக்கலாம். ஆனால் ‘நோ கொமெண்ட்ஸ்’ என சொல்லியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூகவலைதளங்களை திறந்தாலே பல்வேறு இளைஞர்கள் இது போன்ற உணர்ச்சிமிகுந்த விஷயங்களை பேசி வரும் நிலையில் அமைச்சர்களாகியிருக்கும் இவர்கள் இப்படி பொறுப்பற்ற வகையில் பதிலளிக்காமல் சென்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக மீனவ அமைச்சராக இருக்கும் ஸ்ரீநாத், இந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றது மீனவ மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. ஒரு துறையை பெற்ற பிறகு அதில் உள்ள விஷயங்களை அலசி ஆராயாமல் இருப்பது சரியான நடைமுறையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் அமைச்சர்கள் பலர் கவனக் குறைவாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் பேசி வருவது முதலமைச்சர் விஜய்யை பாதிக்கும் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.

கோவை சிறுமி பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவிடம் கேட்ட போது, அவர் குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காமல், அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என தெரிவித்ததுடன் அவர் சிரித்ததாகவும் விமர்சனம் எழுந்தது. தான் எதற்காக சிரித்தார் என்பது குறித்தும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button