இலங்கை

வட்டுக்கோட்டை- 50 எழுச்சி மாநாடு அடுத்த மாதம்-20 ஆம் திகதிக்கு மாற்றம்!

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு வட்டுக்கோட்டை- 50 எழுச்சி மாநாடு முன்னர் அறிவிக்கப்பட்ட திகதி மாற்றப்பட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் யாழ். நகரிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இடம்பெறவுள்ளதாகவும் வட்டுக்கோட்டை- 50 எழுச்சி மாநாடு ஏற்பாட்டுக் குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

1976 ஆம் ஆண்டு மே மாதம்-14 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு வியாழக்கிழமை (14) இரவு குறித்த அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்படி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இம் மாநாட்டின் நோக்கம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைப் புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல், ஈழத்தமிழர் அரசியல் பயணத்தை மீளாய்வு செய்தல், தற்போதைய அரசியல் சூழலில் தமிழ்த்தேசிய அரசியலின் திசையை வழிப்படுத்தல் மற்றும் தமிழ்மக்களிடையே அரசியல் விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் வலுப்படுத்தலாகும்.

இந்த மாநாட்டில் தமிழ்தேசிய, சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், மாணவர்கள், இளைஞர்கள், கல்வியிலாளர்கள், சர்வதேசப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். மேற்படி வரலாற்று நிகழ்வில் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு அன்புரிமையுடன் அழைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button