இலக்கியச்சோலை

பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 11 … செங்கதிரோன்

‘மண்ணில் புதையும் மத்தளம்’ சிறுகதைகள் 1976 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் ஆரம்பிக்கப்பெற்ற கதிரவன் கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழா காலத்தில் ‘ஊர் இருந்து உலகம் வரை’ எனும் கருப்பொருளில் 50 ஆண்டுகள் 50 நிகழ்வுகள் எனும் திட்டம் செயற்படுத்தப்பெற்று வருகிறது.

அதன் ஒரு நிகழ்வாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள (திருகோணமலை) வெளியீடாக கதிரவன் த. இன்பராசாவின் ‘மண்ணில் புதையும் மத்தளம்’ (சிறுகதைகள்) நூலின் வெளியீட்டு நிகழ்வு 08.02.2026 அன்று கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் இணைப்பாளர் பாலமீன்மடு இரா. கலைவேந்தன் தலைமையில் மட்-புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நூலுக்குக் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.கே.குணநாதன் வழங்கியுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் செயற்பாடுகள் கலை இலக்கியவாதிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் வழங்குபவையாகத் திகழ்கின்றன. அந்த இலைமறைகாயாக உறங்குநிலையில் இருக்கும் கையெழுத்துப் பிரதிகளை அச்சுருவாக்கி இலக்கிய உலகில் உலாவர விடுதல் என்னும் செயற்பாடு பாராட்டத்தக்கதாகும். நூல்கள் எதிர்கால ஆவணமாக அமைவதோடு இளம் சந்ததியினரை வாசிப்புப் பழக்கத்திற்குத் தூண்டும் வகையிலும் அமைதல் தேவையாக உள்ளது’ எனப் பதிவிட்டுள்ள கூற்று மனம் கொள்ளத்தக்கதாகும்.

08.02.2026 அன்று நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் மூ.கோபாலரத்தினம், எழுத்தாளர் தாந்தியன் சிதம்பரப்பிள்ளை (அவுஸ்திரேலியா) ஆகியோர் சகிதம் முதன்மை அதிதிகளிலொருவராகக் கலந்து கொண்டிருந்த இப்பத்தி எழுத்தாளர் கண்ணகி கலை இலக்கியக்கூடல் தலைவர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் இந்நூலுக்கு வழங்கியிருந்த மதிப்பீட்டுக் குறிப்புகள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

‘மண்ணில் புதையும் மத்தளம்’ – மதிப்பீட்டுக் குறிப்புகள்

மட்டக்களப்பு, புதுகுடியிருப்பில் கதிரவன் கலைக் கழகத் தலைவராக – ‘கதிரவன்’ சஞ்சிகையின் ஆசிரியராக – வீதி நாடகப் பிரதியாக்கம், நெறியாள்கை, நடிப்பு என அனைத்து ஆற்றல்களுமே கைவந்த கலைஞராக – கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் தலைவராக – பட்டிமன்ற நடுவராக – கண்ணகி கலை இலக்கியக் கூடலின் இணைப்பாளராக – மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கச் செயற்பாட்டாளராக – ஈழத்தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் மட்டக்களப்புப் பிராந்தியச் செயலாளராக அறியப்பெற்ற கதிரவன் த.இன்பராசா அவர்களை ‘மண்ணில் புதையும் மத்தளம்’ எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் ஈழத்திலக்கியப் பரப்பில் ஒரு சிறுகதையாளராகவும் அடையாளப்படுத்துகிறது.

இச்சிறுகதைத் தொகுப்பு நூலில் பதினாறு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.

ஆலம்பழம்

காண்டீபனின் (பத்து வருடம் காதலித்துத் திருமணம் செய்த) மனைவி தேவிகா மூன்றரை வருட கால இல்லற வாழ்க்கையின் பின் பிறழ்வான நடத்தையுடையவளாகிறாள். காண்டீபனின் தங்கையின் கணவர் சுந்தருடன் தகாத உறவு வைத்தது மட்டுமல்ல அவனுடன் பகிரங்கமாகவும் ஊடாடித் திரிகிறாள். விவகாரம் நீதிமன்றம் போய் காண்டீபன் தனது பிள்ளை “பூஜா” வுக்குப் “பிள்ளைச் செலவு” கட்டுகிறான். ஆனால் சமூகம் நடந்த உண்மை தெரியாமல் காண்டீபனை மனைவிமீது நம்பிக்கை இல்லாத சந்தேகப் பேர்வழியாக அர்த்தப்படுத்துகிறது. குடும்பப் பிறழ்வொன்றினை – சம்பவமொன்றினை இக்கதை சுட்டுகிறது. கதையின் தலைப்பான ‘ஆலம்பழம்’ இங்கு குறியீடாக அமைகிறது.

கூடாத கூட்டம் கூடாத

மாணவனாக இருந்தபோதே (ஆழிப் பேரலையால் தன் பெற்றோரைப் பறிகொடுத்துத் தாய்மாமன் தயவிலே படித்துக் கொண்டிருக்கும்) மாதவன் சக மாணவனும் கூடா நண்பனுமான துஜாந்தின் கூட்டால் குடிப்பழக்கத்தை நாடி அதன் விளைவாக ஊரில் சாராயம் விற்கும் (முன்பு தன் புருசனையே கோடரியால் கொத்திப் பிளந்து கொன்றவளான) சண்டித்தனத்திலும் சளைக்காத இராசம்மாவின் முப்பத்தொரு வயது முதிர் கன்னியைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. ஏற்கெனவே அவள் (வனிதா) துஜாந்துடன் தொடர்பிலிருந்தவள். இவ்வாறு துஜாந்தன் திட்டமிட்டு மாதவனை மாட்டிவிட்டவன்.

இப்போது வேலையற்றிருக்கும் மாதவனை வெளிநாடு சென்று உழைத்து வரும்படி இராசம்மாவும் மகள் வனிதாவும் மாதவனை வற்புறுத்துகின்றனர். வனிதாவிற்குத் துஜாந்துடனான தொடர்பு திருமணத்தின் பின்பும் இரகசியமாகத் தொடர்கிறது. இத்தகைய சூழ்நிலையிலும்கூட மாதவன் வெளிநாடு செல்லத் தீர்மானிக்கின்றான். ஆனால் அவனது குழந்தை அதைத் தடுக்கிறது. கூடா நண்பர்களுடனான கூட்டம் ஒருவரின் வாழ்வைச் சீரழிப்பதற்கு ஏதுவாகிறது என்பதை எடுத்துக்காட்டும் கதை.

காதலர் தினம்

தீபன் மீது திவ்யாவுக்கு இருந்த காதல் ஆழமற்றது என்பதை எடுத்துக்காட்டும் கதை. பள்ளிக் காதல் பாடசாலையோடு மட்டும்தான் என்பதும் சூசகமாகச் சுட்டப்படுகிறது. தீபனுக்கும் திவ்யாவுக்கும் இடையில் காதல் தூதனாக வந்த குமார் திவ்யாவின் புதிய காதலனாகி விடுகின்ற சம்பவம் நிகழ்ந்து விடுகிறது. தீபனும் திவ்யாவும் சந்தித்துக் கொள்வதற்கு தனது வீட்டில் இடம் கொடுத்த புஷ்பாவே திவ்யா – குமார் இரகசியச் சந்திப்பிற்கும் இடம் கொடுக்கிறாள் என்பது கதையின் முரண்நகை.

கைக்குழந்தை

போராளியாகவிருந்து சிறை சென்று மீண்டு தனது இருபத்தெட்டு வயதிலே சாந்தி மீது காதல் வசப்பட்டு அவளைத் திருமணம் செய்து உழைப்புக்காக வெளிநாடு சென்று மனைவி கேட்பதெல்லாம் அனுப்பி மீண்டும் தாய் நாட்டிற்கு வந்து பழைய மேசன் வேலையைத் தொழிலாகக் கொண்டிருந்த சுந்தருக்கு ஒரு நாள் தனது மனைவி சாந்தி தொலைதூரத்தில் உள்ள அவளது சொந்த ஊரில் வேறு ஒருவருடன் தாம்பத்தியம் சுகிப்பதை நேரில் காணுகின்றபோது யாருக்கு அதிர்ச்சி….? சுந்தருக்கா அல்லது சாந்திக்கா அல்லது சாந்தியின் புதிய கணவனுக்கா என்ற வினாவோடு கதை நிறைவுறுகிறது.

அலரி

சந்திரனைக் காதலித்துப் பள்ளிப்படிப்பை வீணாக்கிய நிலா திருமணத்திற்கு முன்பே கர்ப்ப முறுகிறாள். முடிவில் சந்திரன் அவளை ஏமாற்றிவிட்டு வெளிநாடு (துபாய்) சென்று விடுகிறான். நிலா தற்கொலைக்கு ஆயத்தமாகிறாள் இங்கே கதையின் தலைப்பான ‘அலரி’ நிலாவை வா வா என்று அழைப்பதாகக் கதை முடிகிறபோது அவள் தற்கொலை செய்யப் போகிறாள் என்பதையே வாசகனால் ஊகிக்க முடிகிறது. நல்ல உத்தி.

ஒரு புள்ளியால…

தனது மகன் சந்திரனை ஓடியோடிப் படிப்பிக்கும் அவன் பரீட்சையில் ஒரு புள்ளியால் தவறி விடுவதைப் பொறுத்துக் கொள்ளாத ஆத்திரத்தில் மகனைத் தாறுமாறாகத் தாய் சுஜாதா அடித்துவிட மகன் வீட்டைவிட்டு ஓடி விடுகிறான். தந்தை திருக்குமரன் மகனைத் தேடிப்போய் அழைத்து வருகிறான். சுஜாதா ஒரு தாயாக அமைதி அடைவதைக் கண்டு திருக்குமரன் ஆனந்தமடைவதுடன் மகன் சந்திரன்மீதும் பரிவு ஏற்படுகிறது. தாய், தந்தை பிள்ளைப் பாசத்தை உளவியல் ரீதியாகச் சித்தரிக்கும் கதை.

பாசம்

தனது வயோதிபக் கணவனைத் தாய்நாட்டில் தனியே விட்டுவிட்டு வெளிநாட்டிலுள்ள மருமகளின், (மகனின் மனைவி) மகளின் பிள்ளைப் பேறு பார்க்கவும், பிள்ளை வளர்க்கவும் சென்றுவிட கணவன் தாய்நாட்டில் இறந்து விடுகிறான். மரண வீட்டிற்கும் வர முடியல்ல. செல்வமாக வாழ்ந்தும் இறுதியில் மகிழ்ச்சியற்ற நிலைமை. “பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு” எனும் பழமொழியை மெய்ப்பிக்கிறது இக்கதை.

சுடுகாடு சிரித்தது

வயது போன காலத்தில் பெற்றோரைப் புறக்கணிப்பவர்களுக்குப் பாடம் புகட்டும் கதை. தங்கராசாவின் தகரப் பெட்டிக்குள் இருப்பது என்ன என்ற மர்மத்துடனே கதை நகர்த்தப்படுகிறது. கதையின் முடிவு கற்பனையாக இருந்தாலும்கூட தகரப் பெட்டிக்குள் இருக்கும் மர்ம முடிச்சவிழ்வது வாசகர் எதிர்பாராத ஒன்று. கதையின் எடுப்பும், தொடுப்பும், முடிப்பும் நன்றாக அமைந்துள்ளன.

சமூகம்

கணவனை இழந்துவிட்ட இளம் விதவைத்தாய் தனது மூப்படைந்த தாயாரையும், இரண்டு பிள்ளைகளையும் கவனிப் பதற்காகப் போடும் வேசமும் அவளது கதையும் சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டைக் காட்டுகிறது கதையின் உள்ளடக்கம் நன்று “சமூகம்” எனும் கதைத் தலைப்பு இதுதான் சமூக யதார்த்தம் என்பதை உணர்த்துகிறது.

சட்டம்

போதை வஸ்து வியாபாரிகளை வளரவிட்ட சட்டம்தான் அந்தப் போதை வஸ்துப் பழக்கத்தால் களவில் ஈடுபட்ட மாணவனொருவனைத் தண்டித்த அதிபர்மீதும் பிரயோகிக்கப்பட இருந்ததை நுட்பமாகச் சொல்லும் இக்கதை சட்டத்தின் பலவீனத்தை எடுத்துக் கூறுவதுடன் பெற்றோர்களையும் வழிப்படுத்துகிறது. சமகாலப் பிரச்சனை ஒன்றைச் சுட்டிக்காட்டும் இக்கதை காலத்திற்கு ஏற்புடையதாகும்.

குழந்தை பிறந்து நான்கு நாள்

நமது கண் முன்னே நடக்கின்ற ஒரு கொடுமையை “நமக்கேன் வீண் வம்பு” எனக்கண்டும் காணாமல் நடப்பதைத் தவிர்த்து கொடுமையைத் தடுக்க நம்மால் ஆனதைச் செய்ய வேண்டும் எனும் சமூகப் பொறுப்பை வலியுறுத்தும் கதை.

வெண்கலவிருது

சமூகத்தில் கலைஞர்கள் கௌரவிக்கப்படுவது மட்டுமல்ல கவனிக்கப்படவும் வேண்டும் என்பதை நாசூக்காக எடுத்துச் சொல்லிக் கலைஞர்களின் வாழ்வின் யதார்த்தத்தைக் கூறும் கதை.

கண்ணீர் அஞ்சலி

வசதியாகவும், பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்று வாழ்ந்த கலைஞர் ஒருவன் பின்னாளில் சொந்தப் பிள்ளைகளாலும், ஊர் மக்களாலும் கவனிக்கப்படாது வாழும் சூழலில் தனக்குத் தானே “அஞ்சலிக் கவிதை” எழுதி வைத்திருக்கிறார். தனது மரணத்தின்போது எவரும் தனக்கு அஞ்சலிக் கவிதை எழுத மாட்டார்கள் என்ற எண்ணத்தில் கலைஞர் ஒருவரின் மறுபக்க வாழ்வியல் கோலமொன்றைக் கூறும் கதை.

மண்ணில் புதையும் மத்தளம்

அர்ப்பணிப்புள்ள கூத்துக் கலைஞர் ஒருவனின் வாழ்நாளில் பரிதாபத்துக்குரிய இறுதி நாட்கள் எப்படி இருந்தன என்பதை எடுத்துக் கூறும் கதை.

கடன்

அரசாங்க வைத்திய சாலையிலும், தனியார் வைத்தியசாலையிலும் ஒரே வைத்தியரால் நோயாளி ஒருவர் எவ்வாறு கவனிக்கப்படுகிறார் என்பதை – முரண்பாட்டை உணர்த்தும் உள்ளடக்கத்தைக் கொண்ட கதை.

நிதானம்

“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” எனும் திருக்குறளை நினைவுக்குட்படுத்தும் கதை. சுமாரான கதை.

மேற்கூறப்பெற்ற பதினாறு கதைகளையும் ஒரு சேர நோக்கும்போது ஒரு பொதுமை புலனாகிறது. அது என்னவெனில் கதாசிரியர் கதிரவன் அவர்கள் தனது ஊரிலும் ஊரின் சுற்றுப்புறங்களிலும் நடந்த உண்மைச் சம்பவங்களைச் சிறுகதை ஆக்கியுள்ளார் என்பதை ஊகிக்க முடிகிறது. உண்மைச் சம்பவங்கள் எனிலும் புனைவு மொழிநடையில் யதார்த்த பண்புகள் தூக்கலாக இல்லை. எனினும் அதீத கற்பனைகள் இல்லாமல் இருப்பது திருப்தி தருகிறது.

சில கதைகள் பெண்களைப் பற்றி இருப்பதால் பெண்ணிலை வாதிகளின் பார்வையில் இக்கதைகள் எவ்வாறு அணுகப்படும் என்பதும் அது பற்றிய விமர்சனங்கள் எவ்வாறு இருக்கும் என்பதும் சிந்தித்துப் பார்க்க வேண்டியதொன்றாகிறது. ஏனெனில் சமூகத்தில் நிலவும் பெண்களின் பிறழ்வான நடத்தைகளையும் இக் கதைகள் பேசுகின்றன. “ளுவசயபெந ளாழரடன ழெவ டிந ய கiஉவழைn” (புறநடையொன்று புனைவாகக் கூடாது) என்ற விடயத்தையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

கலைஞர்களின் வாழ்வியலின் யதார்த்தத்தைச் சித்தரிக்கும் “வெண்கல விருது”, “கண்ணீர் அஞ்சலி”, “மண்ணில் புதையும் மத்தளம்” ஆகிய மூன்று கதைகளும் வழமையான சிறுகதை விடயப் பரப்பிற்குப் புதியவை. வித்தியாசமான உள்ளடக்கம். பாராட்டுக்குரியது.

கதைகளில் அழகியல் அம்சங்கள் சற்று அருகிக் காணப்பட்டாலும்கூட வித்தியாசமான சில உவமைகளைச் சிலாகித்துக் குறிப்பிடலாம்.

“ஒரு புள்ளியால” கதையில் ‘மண்சட்டி பானை எல்லாம் மரண வீட்டுக்குப் போய் வந்த சோகம் அப்பிய முகம் போல் சோர்ந்து கிடந்தன’
இதே கதையின் (ஒரு புள்ளியால) கதைக்கள வர்ணனை – காட்சிப்படுத்தல் நன்றாக அமைந்துள்ளது.

“பலாமரத்தின் இலைகளும், மாமரத்தின் இலைகளும் வார் விளையாடிக் கொண்டிருக்கின்றன. பூச்சட்டியில் இருந்த பூக்கள் நீர் மகளின் வரவுக்காக தலைகளைத் தொங்கவிட்டு தரையைப் பார்த்த வண்ணம் தவம் கிடக்கின்றன….”
“மூன்று நான்கு பேர் வளைத்து நின்று தலை முடியைப் பிடித்து இழுத்து மல்லுக்கட்டினாற் போல குழப்பி விடப்பட்ட விரித்த முடியும்………”

கதைகள் யாவும் ஒரு ஒழுக்கமுள்ள – சீரிய – பண்பாட்டு விழுமியங்களைப் பேணுகின்ற சமூகக்கட்டமைப்பை அவாவி நிற்கின்றன. இது கதாசிரியரின் சமூகப் பொறுப்பையும், அக்கறையையும் வெளிப்படுத்துகிறது. இத்தகைய நூலினைத் தெரிவு செய்து வெளியிட்ட கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சேவை சிறப்பானதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button