முச்சந்தி

பாகிஸ்தானின் மத்தியஸ்த சவால்: அமெரிக்கா – ஈரான் போரை தடுக்குமா?….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(பாகிஸ்தான், அமெரிக்காவுடனும் ஈரானுடனும் தனித்துவமான உறவுகளைப் பேணிவரும் நாடாகும். ஒருபுறம் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாளியாக இருந்தாலும், மறுபுறம் ஈரானுடன் நீண்ட நில எல்லையையும் மத, கலாசார மற்றும் பொருளாதார தொடர்புகளையும் கொண்டுள்ளது. இதனால் இரு தரப்பினருடனும் உரையாடக்கூடிய அரிதான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் திகழ்கிறது)
 
 
வளைகுடாவில் போர் நிறுத்தம் பாரிய சரிவைச் சந்திக்கும் வேளையில்,
அமெரிக்கா – ஈரான் உறவுகளை காப்பாற்ற பாகிஸ்தானின் வகிபாகம் பாரிய கேள்வியாக எழுந்துள்ளது. மத்திய கிழக்கில் உருவான அண்மைய பதற்றங்கள் உலக அரசியலை மீண்டும் ஒரு முறை போரின் விளிம்பிற்கு கொண்டு சென்றன. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நேரடி மற்றும் மறைமுக மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், ஒரு விரிவான பிராந்தியப் போர் வெடிக்கும் அபாயம் குறித்து சர்வதேச சமூகம் அச்சம் வெளியிட்டது. இந்தச் சூழலில், பல நாடுகள் இரு தரப்பினரிடையேயான தொடர்புகளைப் பேணுவதற்கும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றில் பாகிஸ்தானின் பங்கு குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது.
தற்போது மத்திய கிழக்கில் மீண்டும் தீப்பற்றியுள்ள பதற்றம், உலக அரசியலை மிக ஆபத்தான கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் ஏற்கனவே பல ஆண்டுகளாக நம்பிக்கை இன்மையாலும் மறைமுக மோதல்களாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சமீபத்திய இராணுவச் சம்பவங்கள் அந்த உறவை முற்றிலும் முறியடிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளன. இந்த சூழ்நிலையில், எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் ஒரு முக்கியமான ராஜதந்திர நடுவர் நாடாக முன்னிறுத்தப்படுகிறது.
ஒருபுறம், ஈரானுக்கு ராணுவ உதவி வழங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் தீவிரமாக மறுக்கிறது. மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தம் தற்போது உயிர் காக்கும் கருவியில் மட்டுமே உள்ளது என்று எச்சரித்திருப்பது, நிலைமை எவ்வளவு மோசமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
பாகிஸ்தானின் திரிசங்கு நிலை:
பாகிஸ்தான், வரலாற்று ரீதியாக அமெரிக்காவுடனும் ஈரானுடனும் தனித்துவமான உறவுகளை வைத்திருக்கும் நாடாகும். அமெரிக்காவுடன் பாதுகாப்பு, நிதி மற்றும் இராணுவ ஒத்துழைப்புகள் உள்ளபோதிலும், ஈரானுடன் அது பகிர்ந்து கொள்ளும் நீண்ட எல்லையும் மத, பிராந்திய மற்றும் ஆற்றல் தொடர்புகளும் முக்கியமானவை.
இந்த நிலையில் ஈரானுக்கு ஆயுதங்கள் அல்லது உளவுத்தகவல் உதவி வழங்குகிறது என்ற குற்றச்சாட்டுகள் இஸ்லாமாபாத்தை சிக்கலான சூழ்நிலைக்குள் தள்ளியுள்ளன. பாகிஸ்தான் அதிகாரிகள் இதை முழுமையாக மறுத்து, தாங்கள் பிராந்திய அமைதிக்காக மட்டுமே செயல்படுவதாக வலியுறுத்துகின்றனர்.
ஆனால் உலக அரசியல் எப்போதும் உண்மைகளால் மட்டுமே இயக்கப்படுவதில்லை. பாரிய சந்தேகங்களும் அச்சங்களும் பல நேரங்களில் நாடுகளின் நிலைப்பாட்டை மாற்றிவிடுகின்றன. இதனால், பாகிஸ்தான் தற்போது நடுவர் நாடா அல்லது மறைமுக கூட்டாளியா என்ற கேள்விக்குள் சிக்கியுள்ளது.
டிரம்ப் வெளியிட்டுள்ள உயிர்காப்பு (life support) குறிப்பு வெறும் அரசியல் வசனம் மட்டுமல்ல. அது மத்திய கிழக்கில் உருவாகும் புதிய பாதுகாப்பு நெருக்கடியின் சின்னமாக பார்க்கப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் முறியடித்தால், அதன் விளைவுகள் ஈரான் அல்லது அமெரிக்காவுக்குள் மட்டும் கட்டுப்படாது. முழு வளைகுடா பிராந்தியமும் எண்ணெய் சந்தைகளும் அதிர்ச்சியைச் சந்திக்கும். என்பதே உண்மையாகும்.
மேலும், இஸ்ரேல், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளும் இந்த மோதலில் நேரடி அல்லது மறைமுக பங்காளிகளாக மாறக்கூடும். அதனால், போர் நிறுத்தத்தை உயிருடன் வைத்திருப்பது என்பது உலக பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் காப்பாற்றுவதற்குச் சமமாகிவிட்டது.
நடுவராக பாகிஸ்தான் ஏன் முக்கியம்?
இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் நடவராக விளங்குவதன் முக்கியமான காரணம், அது இரு தரப்புடனும் பேசக்கூடிய நாடாக இருப்பதுதான். அமெரிக்காவுடனான பாதுகாப்பு இணைப்பும், ஈரானுடனான அண்டை நாட்டு உறவும், சீனாவுடனான நெருக்கமும் பாகிஸ்தானுக்கு ஒரு தனிப்பட்ட ராஜதந்திர இடத்தை வழங்குகின்றன. சில அரசியல் ஆய்வாளர்கள், பாகிஸ்தான் தற்போது வெறும் நாடாக அல்ல. அது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தொடர்புக் கால்வாயாக மாறியுள்ளது என்று மதிப்பிடுகின்றனர். ஆனால் இந்தப் பாதை மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஒரு தவறான தகவல், ஒரு எல்லைத் தாக்குதல், அல்லது ஒரு ட்ரோன் சம்பவம் கூட பாகிஸ்தானின் நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடும்.
அமெரிக்கா – ஈரான் உறவுகள் மோசமடைந்த காலகட்டங்களில், இஸ்லாமாபாத் பலமுறை பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, நேரடி தொடர்புகள் கடினமான சூழ்நிலைகளில் இரகசிய மற்றும் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றங்களுக்கு பாகிஸ்தான் ஒரு இடைத்தரகராக செயல்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் நோக்கம், தவறான கணிப்புகள் அல்லது இராணுவ நடவடிக்கைகள் பெரிய போராக மாறுவதைத் தடுப்பதாகும்.
போர் நிறுத்தம் அல்லது பதற்றத் தணிப்பு முயற்சிகளில் பாகிஸ்தானின் அணுகுமுறை, இரு தரப்பினரையும் சமநிலையுடன் அணுகுவதில் இருந்தது. அமெரிக்காவுக்கு பிராந்திய நிலைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தியதோடு, ஈரானுக்கும் மோதலை விரிவுபடுத்துவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்தது. இதனுடன், சீனா, சவூதி அரேபியா மற்றும் வளைகுடா நாடுகளின் இராஜதந்திர முயற்சிகளும் இணைந்து செயல்பட்டன.
பாகிஸ்தானின் இந்த மத்தியஸ்த முயற்சிகள் வெறும் பிராந்திய அரசியலை மட்டுமல்ல, அதன் சர்வதேச செல்வாக்கையும் பிரதிபலிக்கின்றன. நீண்டகாலமாக பாதுகாப்பு சவால்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வந்தாலும், முக்கியமான புவிசார் அரசியல் இடத்தைப் பயன்படுத்தி உலக அரங்கில் தனது முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பாக இதனை பாகிஸ்தான் கருதியது.
அமெரிக்கா ஈரான் அடிப்படை முரண்:
எனினும், அமெரிக்கா – ஈரான் உறவுகளின் அடிப்படை முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. அணு திட்டம், பொருளாதாரத் தடைகள், பிராந்திய ஆதிக்கப் போட்டி மற்றும் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் தொடர்ந்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையின்மையை அதிகரிக்கின்றன. ஆகவே, எந்தவொரு போர் நிறுத்தமும் நிலையான அமைதிக்கான முதல் படியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.
அமெரிக்கா – ஈரான் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகளில் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு, நடுத்தர சக்தி கொண்ட நாடுகளும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. மத்திய கிழக்கில் அமைதி நிலவ வேண்டுமெனில், இராணுவ நடவடிக்கைகளை விட உரையாடல் மற்றும் இராஜதந்திரமே நீடித்த தீர்வுகளுக்கான பாதை என்பதை இந்த நிகழ்வுகள் மீண்டும் நினைவூட்டுகின்றன.
தொடரும் இந்நெருக்கடி, மத்திய கிழக்கில் புதிய கூட்டணிகள் உருவாகும் வாய்ப்பையும் காட்டுகிறது. அமெரிக்க ஆதிக்கம் குறைந்து வரும் நிலையில், சீனா மற்றும் ரஷ்யா போன்ற சக்திகள் அதிகமாக தலையிட முயற்சிக்கின்றன. இந்த மாற்றம், ஈரானுக்கு புதிய பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கக்கூடும்.
அதேவேளை, அமெரிக்கா தனது பழைய கூட்டாளிகளின் ஆதரவை மீண்டும் உறுதி செய்ய முயல்கிறது. இந்த சக்தி மோதலின் நடுவில், பாகிஸ்தான் போன்ற நாடுகள் சமநிலையைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
எனினும் வளைகுடாப் போர் நிறுத்தம் சிதைவின் விளிம்பில் நிற்கும் இந்த தருணத்தில், பாகிஸ்தான் மேற்கொள்ளும் ராஜதந்திர முயற்சிகள் உலக கவனத்தை ஈர்த்துள்ளன. அது ஒருபுறம் குற்றச்சாட்டுகளை மறுத்துக் கொண்டே, மறுபுறம் அமெரிக்கா – ஈரான் உறவை முற்றிலும் முறியடிக்காமல் காப்பாற்ற முயற்சிக்கிறது.
ஆனால் இந்த முயற்சி வெற்றியடையுமா என்பது இன்னும் தெளிவாக இல்லை. ஏனெனில் தற்போதைய மத்திய கிழக்கு அரசியல், தர்க்கத்தால் அல்ல. சந்தேகத்தாலும் பாதுகாப்பு அச்சத்தாலும் இயக்கப்படுகிறது. இன்றைய உலகில் ஒரு போர் நிறுத்தத்தை நிலைநிறுத்துவது என்பது, ஒரு போரைக் கைவிடுவதைவிட கடினமான செயலாக மாறியுள்ளது என்பதே உண்மையாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button