தேசிய மக்கள் சக்தி ஒரு மாகாணசபையிலாவது வென்றால் அரசியலில் இருந்து விலகுவேன்

தேசிய மக்கள் சக்தி மாகாணசபைத் தேர்தலில் ஒரு சபையிலேனும் வெற்றிப் பெற்றால் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவேன். மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து இழுத்தடிப்பு செய்வதற்காகவே அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் பாராளுமன்ற விசேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில் தேசிய மட்டத்தில் ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை உயர்வடைகிறது. எரிபொருள் மானியம் வழங்கலுக்காக ஒதுக்கப்பட்ட 57 பில்லியன் ரூபா மே 31 ஆம் திகதியுடன் முடிவடைந்து விட்டது. அதனால் இந்த மாதம் எரிபொருள் விலையை அதிகரிக்க நேரிட்டுள்ளது என்று வலுசக்தி அமைச்சர் குறிப்பிடுகிறார்கள்.
எரிபொருள் மானியம் வழங்கலுக்காக ஒதுக்கப்பட்ட 57 பில்லியன் ரூபா செலவாகி விட்டது என்றால் கடந்த 5 மாதகாலப்பகுதிகளில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லையா, தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நிதி இழப்பை முகாமைத்துவம் செய்வதற்காகவே ஒவ்வொரு மாதமும் யுத்தத்தை காரணம் காட்டி எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுகிறது.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து சகல அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படுகின்றன. வர்த்தகர்களே உணவு பொருட்களின் விலைகளை தீர்மானிக்கிறார்கள்.அரசாங்கம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
மாகாணசபைத் தேர்தல் பற்றி அரசாங்கத்திற்குள் இருவேறுப்பட்ட நிலைப்பாடு காணப்படுகிறது. தேர்தலை நடத்தப் போவதில்லை என்று அரசாங்கத்தின் இயக்கச் சக்தியான ரில்வின் சில்வா குறிப்பிடுகிறார். தேர்தலை நடத்துவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகிறார்.
தேசிய மக்கள் சக்தி மாகாணசபைத் தேர்தலில் ஒரு சபையிலேனும் வெற்றிப் பெற்றால் அரசியலில் இருந்து முழுமையாக விலகுவேன். மாகாணசபைத் தேர்தலை தொடர்ந்து இழுத்தடிப்பு செய்வதற்காகவே அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் பாராளுமன்ற விசேட செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த குழு குறித்த காலப்பகுதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்காது. 2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் வரை அரசாங்கம் எந்தத் தேர்தலையும் நடத்தாது என்றார்
![]()