இந்தியா

அரை நூற்றாண்டு சாதி மத அரசியலை தமிழக வெற்றிக் கழகம் உடைத்தெறிந்தது – முதல்வர் விஜய்

பெண்களின் பாதுகாப்புக்காக எம்முடைய அரசு அறிவித்த சிங்கப் பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தமிழக முதல்வரான விஜய் திருச்சிக்கு சென்றார். அங்குள்ள தனியார் கல்லூரி வளாகம் ஒன்றில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும்விழாவில் பங்கு பற்றி பேசியதாவது…!

”நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு செய்த சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

200 அலகு மின்சாரத்தை இலவசமாக கொடுத்தோம். இதில் நூறு அலகு மின்சாரம் திமுக கொடுத்தது அல்ல. அதற்கு முன்னர் ஆட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கொடுத்தது.‌

ஸ்டாலின் சார் பதவி போன ஆத்திரத்தில் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிடுகிறார்.

டாஸ்மாக் மூலமாக நீங்கள் பணம் சம்பாதித்தீர்கள். ஆனால் நாங்கள் மக்களுக்கு தொல்லையாக இருந்த மதுக்கடைகளை மூடினோம்.

விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி விடயத்தில் ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாதத்தில் என்ன செய்ய முடியுமோ..! அதை செய்தோம்.

நிதி நெருக்கடி ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளனர். அது எல்லாம் சரி செய்ய வேண்டாமா..! விஜய் பொய் சொல்லி அரசியல் செய்ய வரவில்லை. அதனால் விவசாயிகள் யாரும் கவலைப்பட வேண்டாம்.

தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் போதைப்பொருள் கலாச்சாரம் பரவி கிடக்கிறது. அதை தொடக்கத்திலேயே தடுத்திருந்தால்…! இத்தனை பெண்களை-  பெண் குழந்தைகளை-  இழந்திருப்போமா..? எல்லாவற்றையும் செய்து விட்டு, என் மீது பழி போடுகிறார்கள்.

சிறந்த காவல் துறை அதிகாரிகள் அடங்கிய சிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும். அதே தருணத்தில் இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் விரைவாக விசாரணை நடத்தப்பட்டு, குற்ற பத்திரிகையையும் விரைவாக தாக்கல் செய்து, நீதிமன்றங்களில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை பெற்றுக் கொடுக்கவும்  அறிவுறுத்தி இருக்கிறோம்.

ஆறு மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள். ஆனால் ஆறு நாள்கள் கூட அவர்களால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சி பொறுப்பேற்ற அரை மணி நேரத்திலேயே ஆரம்பித்து விட்டார்கள். கல்யாண வீட்டில் கூட புலம்புகிறார்கள்.?

தமிழ்நாட்டில் திமுக-  தவெக இடையே தான் போட்டி. வேறு யாருக்கும் இடமில்லை. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க கூடாது என திமுக உள்ளிட்ட பலரும் நினைத்தார்கள்.

திமுக நம்மை எதிர்க்க எதிர்க்க… அவமானப்படுத்த அவமானப்படுத்த… அத்தனையும் நமக்கு நன்மைதான்.

ரீல்ஸ் போட்ட கூட்டம் எல்லாம் இப்போது செய்திகளை பார்க்கிறார்கள். சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்கிறார்கள். அது நல்லது தான்… இளைஞர்கள் அனைவரும் அரசியல் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

வாக்களித்த மக்களை தற்குறி என்றா..? சொல்கிறீர்கள். உங்களுக்கு ஓட்டு போட்டால் நல்லவர்கள். எங்களுக்கு பட்டால் கெட்டவர்களா? கடந்த முறை இவர்கள் தானே உங்களுக்கு வாக்களித்தனர். இல்லையென்றால் உங்களுக்கு மட்டும் வேற்று கிரகத்திலிருந்து வாக்குகள் வருகிறதா. .? நீங்கள் தற்குறி தற்குறி என்று கூறியவர்கள் தான்.. உங்களுடைய அரசியல் வாழ்க்கையையே கேள்விக்குறி ஆக்கிவிட்டார்கள். இன்னமும் ஆக்குவார்கள். மக்களை புரிந்து வைத்திருந்தால்.. இப்படி எல்லாம் நீங்கள் பேசி இருக்க மாட்டீர்கள்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று திமுகவும், பலரும் தினமும் அறிக்கை வெளியிடுகிறார்கள்.

பெரியார்- அண்ணா- எம்ஜிஆர்- வழியில் உங்களுக்காக உழைக்க வந்துள்ளேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்து இருந்தால்.. நன்றாக இருந்திருக்கும்.

மதச்சார்பற்ற கொள்கையில் சமரசம் இல்லை. மாநில சுயாட்சியிலும் எந்த ஒரு சமரசமும் இல்லை. 234 தொகுதிகளும் எம்முடைய தொகுதி தான். எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் நமது ஆட்சி அங்கும் இருக்கும். எதிர்கால தேர்தல்களில் மக்களின் ஆதரவை பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஊழல் இல்லாத …லஞ்சம் இல்லாத… ஆட்சியை வழங்குவேன்.

ஒரு சிலர் நாம் கோட் சூட் போட்டு வருகிறோம் இல்லையா..! அதைப்பற்றியும் நிறைய பேசுகிறார்கள். ஏன் நாம் எல்லாம் கோட் சூட் போடக்கூடாதா? அதிகாரம் செய்கிறவர்களும்.. ஆதிக்க சக்திகளும்.. மட்டும் தான் கோட்சூட் போட வேண்டுமா? நான் போடும் இரண்டே நிறம். நம்முடைய மனசு மாதிரி கருப்பு வெள்ளை தான். எல்லாவற்றிலும் கருப்பு வெள்ளைப் போலவே நான் இருப்பேன் என்பதற்கும் இந்த கலர். அந்த கருப்பு நிறம் யாரைக் குறிக்கும்..! என்று உங்களுக்கே தெரியும்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளுமே என் இரண்டு கண்கள் மாதிரி. திருச்சி கிழக்கு என் செல்ல பிள்ளை மாதிரி. வரும் இடைத்தேர்தலில் உங்களில் ஒருவரையே வேட்பாளராக நிறுத்தப் போகிறோம். என்னை வெற்றி பெற வைத்தது போல்.. இடைத்தேர்தலில் அவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

தீய சக்தியும் , தீர்ந்து போன சக்தியும் ஒன்றாக சேர்ந்து யாருக்கும் தெரியாமல் ஒரு மூலையில் அமர்ந்து சேர்ந்து பேரம் பேசி ஆட்சி அமைத்து கொள்ளடிக்க திட்டமிட்டனர்.

அண்ணா ஆரம்பித்த கட்சியை அடிமை கட்சியாக்கி விட்டு.. ‘உடன்பிறப்பே வெளிய வா!’ என்று கூறுகிறார் மு க ஸ்டாலின். திமுக தோல்விக்கு வெளியே காரணம் தேடாதீர்கள். உங்கள் வீட்டில் தேடுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களே திமுக தோல்விக்கு காரணம் என்று உங்கள் தொண்டர்களே கூறுகிறார்கள்.

அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் இருந்த சாதி மத அரசியலை தமிழக வெற்றிக் கழகம் உடைத்து வெற்றி பெற்றுள்ளது. என்னை வெற்றி பெற செய்த தமிழக மக்களுக்கும், திருச்சி கிழக்கு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம்பிக்கையோடு இருங்கள் வெற்றி நிச்சயம்” என பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button