படித்தோம் சொல்கின்றோம்: ஒரு விதையின் இருமலர்கள் – Two Blooms of One Seed… முருகபூபதி


சுயசரிதை பாங்கில் அமைந்த ஒரு விதையின் இருமலர்கள் – Two Blooms of One Seed என்ற நூல் எனக்கு அண்மையில் படிக்கக் கிடைத்தது.
நண்பர் ஶ்ரீபாலன் இதனை எனக்குத்தந்தார். இந்நூலை எழுதியிருப்பவர் எனது மற்றும் ஒரு நண்பர் திரு. கந்தசாமி சரநாதன்.
கவிதைத்துறையில் ஈடுபாடுமிக்கவரான சரநாதன், தனது கதையையும்
கவிதையாகவே புனைந்துள்ளார். அதனால், இலக்கிய நயத்தையும் நாம் உணர்கின்றோம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.
இந்நூலுக்கு சிட்னியில் வதியும் கவிஞர் த. நந்திவர்மன் அணிந்துரை வழங்கியிருக்கிறார். சரநாதன், தனது இளமைக்காலம் முதல் தீவிர வாசகராகவும், கலை இலக்கியங்களில் ஆர்வம் மிக்கவராகவும் விளங்கியவர். பாடசாலைக்காலத்தில் மட்டுமன்றி, கல்லூரியில் பிரவேசித்த பின்னரும், அதன்பிறகு இலங்கை பல்கலைக்கழகத்திற்கு ( பேராதனை பல்கலைக்கழகம் ) பிரவேசித்த பின்னரும் எழுத்து முயற்சிகளில் ஈடுபட்டவர்.
பல்கலைக்கழகத்தில் இவர் பயின்ற வேளையில் யுகம் என்ற இதழில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது சமகால மாணவர்தான் மெல்பனில் வதியும் கலாநிதி எஸ்.வி. காசிநாதன். இவரே இந்நூலுக்கு ஆங்கிலத்தில் முன்னுரையும் வழங்கியிருக்கிறார். (Dr S V Kasynathan அந்நாட்களில் இள நிலை விரிவுரையாளர் – Assistant Lecturer in Philosophy)
ஒருவரது சுயசரிதையின் மூலம், அவரது வாழ்க்கையை மாத்திரமின்றி, வாழ்வியல் அனுபவங்களையும் , அவர் கடந்து வந்த பாதையையும் நாம் தெரிந்துகொள்கின்றோம். அத்துடன் அகவயமான – புறவயமான பக்கங்களையும் தரிசிக்க முடியும்.
ஒரு வறிய குடும்பத்தில் பிறந்திருக்கும் சரநாதன், தமது பெற்றோர் குறித்தும், உறவினர்கள் பற்றியும் அவர்களின் குணவியல்புகள் தொடர்பாகவும், எழுதியிருக்கிறார்.
இவரது அருமைத்தாயார் பூமணி தையல்முத்து அவர்கள் அண்ணல் காந்தி அடிகள் பற்றியெல்லாம் சொல்லி வளர்த்திருக்கிறார். வாழ்வியல் விழுமியங்களை காந்தி அடிகளின் சரிதைகளிலிருந்து எடுத்துக்காண்பித்துள்ளார்.
அவ்வாறு நல்ல போதனைகளை கேட்டு வளர்ந்த சரநாதன், தனது எதிர்காலம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை தனக்குள்ளாகவே தீர்மானித்திருக்கிறார்.
தனது தந்தையாரின் அந்திமகாலத்தை மிகவும் உருக்கமாகச்சித்திரிக்கிறார். பொறியியல் பட்டதாரியான சரநாதன், இலங்கை, நைஜீரியா, புரூணை, ஆகிய நாடுகளில் பணியாற்றிவிட்டு, இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர். இந்த நாடே அவருக்கு தற்போது நிரந்தரமானது. எனினும் தாயகநினைவுகளையும் , வாழ்க்கைப்பயணத்தில் தாம் சந்தித்த கரடுமுரடான பக்கங்களையும் வெகு இயல்பாக சித்திரிக்கிறார்.

சரநாதனின் அருமைத்தாயார், பாரதி கண்ட புதுமைப்பெண் போன்று, தன்னம்பிக்கை மிக்க பெண்மணி. அத்துடன் கருணையின் இருப்பிடமாகவும் வாழ்ந்திருப்பவர் என்பதையும் சரநாதனின் கூற்றுக்களினூடே எமக்கு புலப்படுகிறது.
இளம் வயதில் கணவரை இழந்திருக்கும் அவர், மிகுந்த ஓர்மத்துடன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். யாழ். குடாநாட்டில் ஒல்லாந்தர் காலத்தில் உருவாக்ப்பட்ட தேசவழமைச்சட்டம் இற்றைவரையில் நடைமுறையில் இருக்கிறது.
அதன்பிரகாரம், குடும்பத்தின் மூத்த மகன், (தந்தையாரின் முதல் தாரத்திற்குப்பிறந்தவர்) காணியை அளந்து பாகப்பிரிவினை செய்வதற்கு முயன்றபோது களேபரமாகிறது. அக்காலத்திலேயே துப்பாக்கி கலாசாரத்தை சரநாதன் அங்கு சந்தித்திருக்கிறார்.
காணி விவகாரம், நீதிமன்றம் வரையில் சென்றிருக்கிறது. ஆனால். தாயாரோ. தான் வழக்கிலிருந்த ஒதுங்கிக்கொள்வதாகக் கூறி. தனது பெருந்தன்மையை காண்பித்திருக்கிறார் இவ்வாறு தமது தாயாரின் நற்பண்புகளை சிறு வயதிலேயே உள்வாங்கியிருக்கும் சரநாதன், தம்மையும் தாயின் வழியில் பண்படுத்தி வளர்த்துக்கொண்டிருக்கிறார்.
சரநாதன், தமது தந்தையை இழந்து தவித்தபோது, அவருக்க வயது ஏழு. அந்தப்பருவத்தில் ஜெகசோதி என்ற ஆங்கில ஆசிரியை தன்மீது கொண்டிருந்த பரிவையும் நெகிழ்ச்சியோடு சித்திரிக்கிறார்.
பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சை எழுதிவிட்டு வந்தபோது, வகுப்பறையில், மணியம் மாஸ்டர் , “ மருத்துவராக, பொறியியலாளராக யார் வரப்போகிறீர்கள்? “ எனக்கேட்டவுடனேயே, கணிதத்தில் மிகுந்த தேர்ச்சியுடைய சரநாதன், தான் “பொறியியலாளனாகப்போகின்றேன். “ எனச்சொல்கிறார்.
பல்கலைக்கழக பிரவேசப்பரீட்சை எழுதிவிட்டு வந்த மணியம் மாஸ்டர், வகுப்பறையில், “ மருத்துவராக, பொறியியலாளராக யார் வரப்போகிறீர்கள்? “ எனக்கேட்டவுடனேயே, கணிதத்தில் மிகுந்த தேர்ச்சியுடைய சரநாதன், தன் எட்டாம் வயதில், தான் “பொறியியலாளனாகப்போகின்றேன். “ எனச்சொல்கிறார்.
அவ்வளவு தன்னம்பிக்கையுடன் பிற்காலத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியவர், எண்ணமே வாழ்வு என்பது போன்று, தனது இலட்சியத்தை அடைந்தவர்.
இவருக்கும் இளம்வயதில் கல்லூரி ஆண்கள் விடுதி வாழ்க்கை வேம்பாக கசந்திருக்கிறது. இதனை பாலகாண்டம் என்ற அங்கத்தில் விபரிக்கிறார்.
ஐக்கிய தேசியக்கட்சியை – யானைக்கட்சி என்பார்கள். யானைதான் அக்கட்சியின் சின்னம். அக்காலத்தில் அதன் சார்பில் போட்டியிட்டு பிரதமராக வந்தவர் டட்லிசேனாநாயக்கா . அவரை வரவேற்கிறார். வடபகுதி எம். பி. ஒருவர். இந்தசம்பவத்தை அரிமாவா? கரிமாவா? என்ற அங்கத்தில் சுவாரசியமாக விபரிக்கிறார்.
நதிகள் ஏதும் இல்லாத வடபகுதிக்கு, தென்னிலங்கையில் ஓடும் மாவலி கங்கையை வரச்செய்வோம் என்ற முழக்கத்துடன் அரசியல் செய்வோரை அன்றும் இன்றும் பார்த்து வருகின்றோம்.
சரநாதனின் இளமைக்காலத்தில் வடக்கில் மேடை யில் அவ்வாறு முழங்கிய தமிழ் – சிங்கள தலைவர்களை இனம்காட்டுகின்றார். இவர்களின் பசப்பு வார்த்தைகளில் மதிமயங்கிய மக்கள், எவ்வாறு ஏமாந்தார்கள் என்பதையும் சரநாதன் இந்த அங்கத்தில் விபரிக்கிறார்.
யானையை இலக்கிய நயத்துடன் இவ்வாறு சித்திரிக்கிறார்:
வலிமையும் அழகும் வாய்ந்ததோர் விலங்கு
அலைபோல் அசையும் தசையுடைத்தேகம்
குன்றுபோல் வடிவம், வன்மமில் வாழ்வு
சுளகு போல் காது, உரல்போல் கால்கள்,
வளையவும் நீளவும் வல்ல கையால்,
ஊசியைக் கூட உணர்ந்திடும் இயல்பு.

யானையின் உருவ அமைப்பினை நேரில் பார்த்து வியக்கும் அதே சமயம் அதன் இயல்பை கேட்டோ, படித்தோ சித்திரிக்கிறார். அந்தச்சம்பவம் சரநாதனின் மனதில் பசுமரத்தாணி போன்று பதிந்திருக்கிறது.
யானையினதும் சிங்கத்தினதும் இயல்புகள் தனித்தன்மை வாய்ந்தவை. பகையினை வெல்லும் தனித்தன்மை ஆண் சிங்கத்திற்கு இருந்தாலும், வேட்டைக்குச் செல்லாமல், தனது துணையான பெண் சிங்கம் வேட்டையாடும் பிராணிகளையே பறித்துத் தின்னும் என்ற அதன் இயல்பையும் கூறுகிறார்.
அந்தக்கூட்டத்தில் பேசிய தமிழ் – சிங்களத் தலைவர்களின் கூற்றில் ஏதும் உண்மை இருக்குமா? அல்லது, நடைமுறைச்சாத்தியமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சரநாதன் தாயாரிடத்தில் கேள்விகள் கேட்கிறார்.
வாழ்க்கைத் தத்துவங்களை தமது தாயாரிடத்தில் கேட்டு வளர்ந்திருக்கும் சரநாதன், சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியிருப்பவர்.
சரநாதனின் தந்தையார் கந்தசாமி ஒரு நாடகக் கலைஞருமாவார். கல்லூரியில் மேடையேறிய செகப்பிரியரின் ( சேக்ஸ்பியரின் ) நாடகம் ஒன்றில் ஜெசிகா என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
அன்று முதல் ஜெசிகா கந்தசாமி என அழைக்கப்பட்டிருக்கிறார். அதனால் அவர் கோபிக்கவில்லை. தொழில் ரீதியாக ரயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டராக அவர் பணியாற்றத் தொடங்கியதும், ஊரார் நண்பர்கள் எஸ். எம். எஸ் என்றே அழைத்தனர்.
தந்தையாரின் மதுப்பழக்கத்தையும் சரநாதன் குறிப்பிடத்தவறவில்லை. குடி குடியை கெடுக்கும் என்பார்கள். தந்தையார், மதுவுக்கு அடிமையானாலும், அதனால் குடும்ப மானம் அழிந்திடாதவாறு தமது பிள்ளைகளை தாயார் எவ்வாறு பேணி வளர்த்தார் என்ற வரிகளை படிக்கையில் நெகிழ்ந்து போகின்றோம்.
பயிர்கள் செழித்து வளரும் பிரதேசத்தில் சாதி என்ற நச்சுமரமும் வளர்கிறது. அடிநிலை மக்களுக்கு பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் அனுமதி மறுக்கப்பட்ட காலத்தையும் சரநாதன் தமது சுயரிதையில் குறிப்பிடத் தவறவில்லை. இவரது தந்தையாரும் சில சமூக ஆர்வலர்களும் அதற்கு எதிராக போராடியிருக்கின்றனர்.
எனினும் சாதிமான்கள், தந்தையாருக்கு அவப்பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
இறுதியில் அநீதி அங்கே அகன்றது, நீதி நிலைபெற்றது என்ற செய்தியைம் பதிவுசெய்துள்ளார்.
பட்டம் பறப்பதற்கு காற்று வேண்டும். அதனை எதிர்த்து பறக்கும் வலிமை பட்டத்திற்குத் தேவை.
பறவை மிதப்பது சிறகின் விசையால்
பட்டம் பறப்பது போராட்டத்தால்,
விதிதான் என்போர் வீழ்ந்தே போவார்.
புயலினை வென்றவர் அமைதியை அடைவரே. –
எனச்சித்திரிக்கிறார்.
தாயார் ஓய்வூதியம் பெறச்சென்ற வேளையில் அவருடன் சென்ற சரநாதன், ஆலயத்தின் முன்பாக உறங்கிக்கொண்டிருந்த மெலிந்த தோற்றமுடைய பிச்சைக்காரருக்கு பத்து சதமும் ஆலயத்திற்கு ஐந்து சதம் செலவிட்டு, கற்பூரமும் வாங்கி கொளுத்திய காட்சியை சித்திரிக்கும்போது, ஏனம்மா ? அப்படிச்செய்தீர்கள் எனக்கேட்கும்போது, அம்மா, தன்னை அணைத்தவாறு “ அவன் கனவில் வரும் அம்மன், கொடுப்பாள் பொற்காசு. எனினும் அவன் துயில்களைந்து எழும்போது, ஏமாந்துவிடக்கூடாது.. “ என்ற உயரிய தத்துவத்தை கூறுகிறார்.
இங்கு அம்மாவின் மனிதநேயத்தையும் மதிநுட்பத்தையும் வியக்கிறார்.
தமது அவுஸ்திரேலியா புலப்பெயர்வையும் அருமைத் தாயாரின் வருகையையும் பின்னாளில் முதுமையில் தாயாருக்கு வந்த பிணிகளையும் அவர் அமரத்துவம் எய்திய காட்சியையும் விபரிக்கும் வரிகள் நெகிழ்ச்சியானவை.

பெற்று வளர்த்து ஆளாக்கிய அருமைத் தாயாரின் அந்திமகாலத்தை –
காலமகள் எறிந்த கல்லில் வீழ்ந்த உயிர்
வந்த வேலை முடிந்துவிட
சொல்லாமலே சூனியத்துள் சேர்ந்துவிடப்
பாதங்கள் முத்தமிட்டு நான் நிமிர,
தாதியர்கள் கட்டிலைத்
தள்ளிச்சென்றார்.
என் இதய ராணியின் தேர்
ஊர்ந்து… ஊர்ந்து… போயிற்று.!
என தமது சுயசரிதையின் ஒரு பக்கத்தை முடிக்கிறார் சரநாதன்.
“ ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் “
என்றகுறளின் வரிகளை நாம் சரநாதனின் ஒரு விதையின் இருமலர்கள் நூலை படித்து முடிக்கும்போது நினைவில் கொள்கின்றோம்.
![]()