சைவ ஆலயங்களில் நடைபெறும் ஆடம்பர விழாக்களும் வீண் செலவுகளும் மக்கள் மீது சுமத்தப்படும் அதீத சுமை… சின்னத்தம்பி குருபரன்

இந்த உலகம் சகல உயிரியங்களுக்கும் எற்றவகையில் சகல வளங்களும் கொண்டதாகப் படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த உலகத்திலுள்ள சகலமும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகும். இறைவன் இந்த உலகத்தையும் உயிரினங்களையும் படைத்திருக்கிறான் என உலக மதங்கள் ஒப்புக் கொள்கின்றன. இந்து மதம் இறைவன் சகலவற்றிலும் நீர்க்கமற நிறைந்திருக்கிறான் எனக் கூறுகிறது. அதனை வலியுறுத்தும் வகையில் பிரம்ம சூத்திரம் ‘நானே பிரமம், நீயே பிரமம், அதுவே பிரமம்’ என பிரம்மத்தின் உட்பொருளை வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஒருவர் பிறக்கும் போது ஏழையாகப் பிறக்கலாம். அவர் இறக்கும் போது ஏழையாக இறப்பது அவரின் பலவீனமாகும். வாழ முயற்சிப்பவனுக்கு இந்த உலகம் வழிவிட்டுக் கொண்டிருக்கும். வாழத் தெரியாதவனுக்கு நரகமாக இருக்கும். இந்த உலகத்தையும் அதற்குள் நமக்குத் தேவையான வளங்களையும் இயற்கை வாரி வழங்கி இருக்கிறது. உலகைத் திருத்திய உத்தமர்களும், உலகை ஆண்டவர்களும், விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களும், உலகப் பிரபலங்களும், உலகப் பணக்காரர்களில் பெரும்பாலானோர் சாதாரணமான குடும்பத்தில் இருந்து வந்தவர்களே. அவர்கள் வாழ்க்கையைப் புரிந்து கொண்டு, முயற்சி செய்து, பல தோல்விகளைச் சந்தித்து, பல எதிர்புக்களை எதிர் கொண்டு, தமது இலக்கை நோக்கிப் பயணித்து அதில் வெற்றி கண்டவர்களாவர். அவர்கள் போலியான நம்பிக்கைகள், போலிக் கௌரவம், மூடத்தனம் என்பவற்றில் இருந்து விடுபட்டு வெற்றி எனும் இலக்கை அடைந்தவர்கள்.
இறைவன் பற்றில்லாதவன், ஆசா பாசங்கள் அற்றவன், விருப்பு வெறுப்பு இல்லாதவன், யாவும் கடந்தவன், அருவமானவன், அடியாருக்கு அடியவன், எழியோருக்கு எழியவன் என இந்துமத நூல்கள் கூறுகின்றன. இன்று மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால் பல பிற்போக்குத் தனங்கள் வேர் விட்டு விருட்சங்களாக வளர்ந்து நிற்கின்றன. இவை பலரை ஆண்டு கொண்டிருக்கின்றன. அது பலரின் மனங்களில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றன. இதன் செல்வாக்கு கீழைத்தேய நாடுகளின் சமூக, அரசியல், பொருளாதாரம், கலாசாரம் ஆகியவற்றில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. நீண்டகாலமாக இலங்கையில் மதம், இனம், மொழி என்றவாறு சமூகங்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றன. மதத்துக்குள்ளே, இனத்துக்குள்ளே, சாதிக்குள்ளே, குலத்துக்குள்ளே, கோத்திரத்துக்குள்ளே, கிராமத்துக்குள்ளே, பிரதேசத்துக்குள்ளே, நாட்டுக்குள்ளே எனப் பல விரிசல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இந்தப் விரிசல்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்தவை இனம் மதம், மொழி, மேலாண்மை, அடக்கி ஆளல், அதிகார மோகம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இறைவன் இனம், மதங்களுக்கிடையே பிளவினை ஏற்படுத்தவில்லை. மனிதன் தம்மை முன்னுரிமைப் படுத்திச் சில ஆச்சாரங்களைத் தோற்றுவித்தான். பொ.ஆ.பி மூன்றாம் நூற்றாண்டுக்கு முன்ன் இருக்கு வேதத்தில் பிரம்ம சூத்திரம் என்றொரு பிரிவே இருக்கவில்லை. டின்னைய இருக்கு வேதத்தில் பிராமணர் திட்டமிட்டுத் திணித்த பிரம்ம சூத்திரத்தில் பிராமணர், சத்திரியர், வைசீகர், சூத்தரர் என்ற பிரிப்பும் அதனை அடியொற்றியதாக உருவான இனம், மதம், சாதி, குலம், கோத்திரம், சாகியம் என்ற உயர்வுச் சிக்கலும் பிற்படுத்தப்பட்டோர் சமூக அமைப்பை உருவாக்கியது. இதுவே காலப் போக்கில் பெருவாழ்வு பெற்றுப் பிரபலமடைந்தது. இன்று பெரும்பாலான பிளவுகள் மதத் தலங்களை மையப்படுத்தியே உருவாகிக் கொண்டிருக்கின்றன.
பெரும்பாலான இந்துக் கோயில்கள் இத்தகைய பிளவுகளின் நிலைக்களங்களாக விளங்குகின்றன. நிர்வாகத் தெரிவுகள், உச்சவ விழாக்கள், பூசை, புனஸ்காரங்கள் ஆகியவற்றில் சிலர் முன்னுரிமைப் படுத்தப்பட்டுச் சிலர் ஓதுக்கப்படுகின்றனர். இதனால் பல கோயில்கள் பிரச்சினைகளின் உறைவிடமாக விளங்குகின்றன. இப்பிரச்சினைகளில் பல கோயில் நிர்வாகம், சமூக மட்டத்தில் தீர்க்கப்படாமல் நீதி மன்றங்களில் நிற்கின்றன. அமைதியின் உறைவிடமாக இருக்க வேண்டிய பல கோயில்கள் வாக்குவாதம், சண்டை, சச்சரவு, அடிதடி, வெட்டுக் கொத்து, கொலை என பிற்போக்குத் தனமான சிந்தனைகளுடனும், மூடநம்பிக்கைகளுடனும் பிரச்சினைகளின் நிலைக்களமாக மாறிக் கொண்டிருக்கின்றன.
கடவுள் என்ற சொல் நான் உன்னுள் உயிராக இருக்கிறேன் என்பதை உணர்த்துகிறது. இறைவன் நம் உடலில் ஆத்மாவாக இருந்து நம்மை இயக்கிக் கொண்டு இருக்கிறான் என்பதை சித்தாந்தாந்த சாத்திரங்கள் கூறுகின்றன. ‘தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்..’ என்பது திருமூலரின் மெய்யான வாக்கு. இதை உணராமல் ஒருவருக்குத் துரோகம் செய்கிறோம். நாம் செய்யும் துரோகம் அந்த உடலில் இருக்கும் இறைவனையும் சென்றடையும் என்பதை மறந்து விடுகிறோம். இவ்வாறுதான் பழி, பாவம் நம்மை வந்தடைகின்றன. ஒருவரிடம் இருக்கும் ‘நான்’ என்ற ஆணவம் சகலதையும் மறைத்து விடுகின்றன. கர்வம் எனும் மாயை நம்மை வந்தடைந்து உண்மையை மறைத்து மீண்டும் மீண்டும் பாவம் செய்யத் தூண்டுகின்றது. இறைவன் ஒவ்வொருவரின் உடலிலும் உயிராக இருந்து நம் முன்னால் நடமாடிக் கொண்டிருக்கிறான் என்பதை மறந்து இறைவன் சிலையாக இருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் ஒரு மாயைதானே, அத்தகையவருக்குப் புத்தி எதற்கு எனக் கூடு விட்டுக் கூடுபாய்ந்த, முக்காலமும் உணர்ந்த சித்தர்கள் கேட்கின்றனர்.
‘உமது இன்றைய நிலைக்கு நீயே காரணம்’ என்றார சுவாமி விவேகாநந்தர். பிறக்கும்போது ஏழையாகப் பிறந்தவன் இறக்கும் போதும் ஏழையாக இறக்கிறான் என்றால் அதற்கு அவனே காரணம். பிறக்கும்போது அவனை இந்த உலகம் வரவேற்றது. அவனுக்காகச் சகல வளங்களும் கொட்டிக் கிடந்தன. ஊனமின்றித்தான் அவன் பிறந்தான். அவ்வாறு இருக்கையில் இறைவன் முதற் கொண்டு சகலரிடமும் கையேந்தக் கற்றுக் கொண்டான். தனது வல்லமை உணர்ந்து முயற்சி செய்திருந்தால் அவனும் ஒரு செல்வந்தனாக மாறி இருக்கலாம். இன்று நீ நோயாளியாக இருந்தால் அதற்கும் நீயெ காரணம். இந்த உடம்பு ஒரு பொக்கிசம் என்பதனை மறந்து கண்டதெல்லாம் சாப்பிட்டுக் குடித்து, உடம்பைக் கெடுத்து நோயாளியாக வாழ யார் காரணம். பரீட்சை எழுத வேண்டிய மாணவன் பரீட்கைக்குப் படிக்காமல் பரீட்சை எழுதினால் சித்தி எவ்வாறு கிடைக்கும். ஒரு வியாபாரி வியாபார்த்தில் கவனமின்றி இருந்தால் அவன் எவ்வாறு இலாபத்தைச் சம்பாதிக்க முடியும். ஒரு விவசாயி தனது விவசாயத்தில் முயற்சியின்றி இருந்தால் அவனால் எவ்வாறு சிறந்த விழைச்சலைப் பெற முடியும். இவ்வாறு எல்லாவற்றுக்கும் நாமே காரணமாக இருந்து மற்றவர் மீதும் இறைவன் மீமும் பழியைப் போடுவதில் என்ன பயன் இருக்கிறது. உலகைத் திருத்திய உத்தமர்களும், பெரிய தலைவர்களும், பிரபலமானவர்களும், உலகப் புகழ் பெற்ற கோடீஸ்வரர்களும் தமது தொடர் முயற்சியினால் தொடர் வெற்றி கண்டிருக்கிறார்கள். இவர்கள் யாவரும் உழைப்பு, பயிற்சி, முயற்சி, ஆற்றல், அர்ப்பணிப்பு, விடாமுயற்சி என்பவற்றால் இந்த நிலையை அடைந்தார்கள். உலகப் பணக்காரர் வரிசையில் முதலாம் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து தொடர் முயற்சியால் இந்த நிலையை அடைந்தார்.
நமது பலவீனம்தான் இன்னொருவருக்கு வெற்றியாக அமைகின்றது.

ஒரு வெற்றியாளன் ஒருவரைத் தோற்கடிக்க வேண்டுமெனில் அவரின் பலவீனத்தைக் கண்டு பிடித்து அதற்கூடாக அவரை வீழ்த்தி வெற்றி கொள்ள முயற்சி செய்கிறான். எந்த ஒரு வெற்றியும் பலவீனத்துக்கூடாகவே கட்டி எழுப்பப்படுகின்றது. ஒருவர் அச்சுறுத்தல், சவால்கள், பிரச்சினைகளுக்கு அஞ்சிக் கொண்டிருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. பலருக்குத் தமது பலம் என்னவென்பது அவருக்கே தெிரிவதில்லை. ‘அஞ்சி அஞ்சி வாழ்வதையும் விடச் செத்து மடிவதே மேல்’ என்பார்கள். ஒருவர் வாழ்க்கையில் பலமுறை சறுக்கி விழலாம். அத்தனை தடவையும் பிறர் உதவியின்றித் தானே எழுந்திருப்பவன் வாழ்க்கையில் வெற்றியாளன் ஆகின்றான்.
நமது வாழ்க்கை நம் கையில்தான் இருக்கின்றது. நமது வாழ்க்கையை இன்னொருவர் தீர்மானிக்க முடியாது. இன்னொருவர் தீர்மானித்தால் அது நமது வாழ்க்கையாக அமையாது. வெற்றியோ தோல்வியோ நாமே முயற்சி செய்ய வேண்டும். தோல்வியைக் கண்டு துவண்டு விடாமலும் வெற்றியைக் கண்டு இறுமாப்புக் கொள்ளாமலும் இரண்மையும் சமனாக மதிக்கின்ற பக்குவம் யாரிடம் வருகிறதோ அவரே எதிர்காலத்தில் தொடர் வெற்றிகளுக்குக் காரணமானவனாக இருப்பான். ஏனெனில் வெற்றியும் தோல்வியும் நிரந்தரமற்றவை. யாவும் கடந்து போகும்.
இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் என்பதனால் எவரிடம் இருந்தும் எதையும் விரும்புவதுமில்லை. வெறுப்பதுமில்லை. ஆரிய வேதம், வேதாந்தம், இதிகாசங்கள், ஸ்மிருதிகள், அர்த்த சாத்திரங்கள் ஆகியன பூசை, புனஸ்காரங்கள், யாகங்கள், பிரதிஸ்டைகள் பற்றிக் கூறுகின்றன. ஆடம்பரங்களும், வீண் செலவுகளும் பற்றிய விடயங்கள் பற்றி எல்லாம் இவைகளே விரிவாகக் கூறுகின்றன. அத்தோடு மாந்திரிக முறைகளும் வீண்செலவுகளுக்கு வழிவகுக்கின்றன. ஆனால் நமது சித்தாந்த சைவம் ‘அன்பே சிவம’ ‘ஆலயமே காயம் அறிவே விவலிங்கம்…. ஆலயமும் காணா அன்பருக்குச் சீலமொடு….. அன்பே அபிசேகம் அன்பே நற்சிந்தனையுமாம். (திருமந்திரம்) “உள்ளம் பெருங் கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்ககுச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காணாத மணிவிளக்கு” எனத் திருமூலர் திருமந்திரத்தில் முற்றும் உணர்ந்து பாடி இருக்கின்றார். சைவ சித்தாந்த நூல்கள் இந்த உண்மையைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. இந்த உண்மையை உணராது இருப்பதற்காகவே மதம் என்பதற்குள் இருக்கின்ற நமது பலவீனத்தை அறிந்து மூடநம்பிக்கைகளை நம்மத்தியில் வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். மதம் தலைக்கேறி மூடத்தனங்களின் உறைவிடமாகப் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதையே மூலதனமாக ஆரிய வேத, சமஸ்கிருதவாதம் நன்கு பயன்படுத்திக் கொள்கிறது. இந்த நடைமுறைகளினால் தினமும் யாகம், பூசை, புனஸ்காரம், பிரதிஸ்டை எனப் பல சொத்துக்கள் நாசமாகியதோடு உயிர்ப் பலிகளும் நடந்து கொண்டிருந்தன. இதில் வெறுப்புற்று இந்து மதத்திலிருந்து வெளியேறிய மாவீரர் சமண மதத்தையும், சித்தாத்தர் (கௌதம புத்தர்) பௌத்த மதத்தையும் தோற்றுவித்தனர். இவ்வாறுதான் பிராமணியத்துக்கு எதிராக வீரசைவமும் உருவானது.
எமது சித்தாந்த சைவம் எளிமையானது. இலகுவானது. செலவு குறைந்தது. இதனை நாம் விரும்புவதில்லை. ஆடம்பரங்கள், வீண் செலவுகளையே விரும்புகின்றோம். எமது நாயன்மார்களில் பலர் அன்பே சிவம் என்பதைத் தமது எளிமையான வாழ்க்கையின் மூலம் உணர்த்தி இருக்கின்றனர். கண்ணப்ப நாயனார், அதிபத்த நாயனார், திருநாளைப் போவார் நாயனார், குங்கிலியக்கலய நாயனார், மனதுள் கோயில் கட்டிய பூசலார் போன்ற பலர் தமது எனிமையான வாழ்க்கையின் மூலம் இறைவனைக் கண்டு பரவசமடைந்து முத்திப்பேறு பெற்றனர். அதேபோல் நந்தனாருடைய வாழ்க்கையையும் கற்றிருக்கிறோம்.
நாரதர் கலகம் வழைவிப்பவர். நாரதரின் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். நாரதர் எவ்வேளையும் நாராயணா நாராயணா என உச்சரித்துக் கொண்டு மூவுலகையும் வலம் வருவார். தன்னைவிட நாராயணனை அடிக்கடி உச்சரிப்பவர்கள் அகிலத்தில் எவருமில்லை என்ற கர்வத்தில் இருந்தார்.
இந்த உண்மையை அறிந்து கொள்வதற்காக கிருஷ்ணரிடம் சென்றார். “மாதவா இவ்வுலகில் என்னைவிட உன்னை அடிக்கடி நாம பூசை செய்பவர் இந்த அகிலத்தில் யாரும் உண்டா” எனக் கேட்கின்றார். அதற்குக் கிருஷ்ணர் “நாரதா தெருக்கோடியில் ஒரு விவசாயி இருக்கிறான் அவனே சிறந்தவன்” எனக் கூறுகின்றார். அவனைப் பார்ப்பதற்காகச் சென்ற நாரதர் ஒழிந்திருந்து தினமும் அவதானிக்கின்றார். காலையில் எழும்போது நாராயணா என்றும், தொழிலுக்குப் போகமுன்னரும், இரவுத் தூக்கத்தக்குச் செல்லு முன்னரும் தினமும் மூன்று முறை நாராயணா எனப் பூசித்துக் காண்கிறார். நாரதர் அங்கிருந்து நாராயணனிடம் சென்றார். “நாராயணா நான் தினமும் பல தடவை உன் பெயரை உச்சரிக்கிறேன்.
ஆனால் அந்த விவசாயி மூன்று முறைதானே உச்சரிக்கிறான்” எனக் கூறி வருத்தமடைந்தார் நாரதர். நாராயணன் நாரதரிடம் ஒரு குவளை நிறைய விளக்கெண்ணையை ஊற்றிக் கொடுத்து “இந்த எண்ணெய் நிலத்தில் சிந்தாமல் பிரகாரத்தைச் சுற்றிவா” எனக் கூறினார். அதனை எடுத்துக் கொண்டு பிரகாரத்தைச் சுற்றி வற்றுகின்றார் நாரதர். நாராயணன் நாரதரிடம் “பிரகாரத்தைச் சுற்றி வரும்போது எத்தனை தடவை என் நாமத்தை உச்சரித்தாய்” எனக் கேட்கின்றார். “இது என்ன கேள்வி, எண்ணெய் சிந்தாமல் அவதானத்துடன் இருக்கும் போது, உன்நாமத்தை எவ்வாறு உச்சரிக்க முடியும்” என நாரதர் கேட்டதும் நாராயணன் “அந்த விவசாயி வறுமையில் இருந்த போதிலும் காலம் தப்பாமல் மூன்று வேளையும் நெஞ்சில் கைவைத்து மெய் அன்போடு என்நாமத்தை உச்சரிக்கிறான். நீ பிரகாரத்தைச் சுற்றி வரும்போது என்னை மறந்து விட்டாயே. அப்போ விவசாயிதானே உயர்ந்தவன்” எனக் கூறியதும் உண்மையை ஒப்புக் கொண்டு வெட்கித் தலை குனிகின்றார் நாரதர். (இராமகிருஷ்ணர் கதைகள்) இக்கதையின் மூலம் பல உண்மைகள் நமக்கு உணர்த்தப்படடிருக்கின்றன.
ஆகவே, இறைலனைப் பொறுத்தவரை அன்புதான் அடிப்படை என்பது உணர்த்தப்படுகிறது. ஆரிய வேத, சமஸ்கிருத சம்பிரதாயங்களின் ஊடாக நடைபெறும் விழாக்கள், யாகங்கள், பூசைகள், புனைஸ்காரங்கள், பிரதிஸ்டைகளை அல்ல. இவை ஒவ்வொன்றுக்குமாகப் பல இலட்சங்கள் செலவு செய்யப்படுகின்றன. அண்மையில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் இருபது நாள் நடைபெற்ற வருடாந்த உற்சவத்தின் முடிவில் பிரதம குரு நெல், அரிசி, தேங்காய், விலை உயர்ந்த வேட்டி, சால்வை, பட்டுப் பீதாம்பரம், சமித்து வகைகள், ஏனைய பொருட்கள் என்பவற்றை லொறி பிடித்து ஏற்றிச் சென்றிருக்கிறார். அந்த உச்சவத்துக்கு பிரதம குரு, சாதகாசிரியர், இரு உதவிக் குருமார் ஆகியோர் போதுமானது. ஆனால் பிரதம குருவோ தன்னைவட ஆறு குருமாரைக் கொண்டு வந்து அத்தனை பேருக்கும் வேட்டி, சால்வை, தட்சணை என மேலதிக செலவை ஏற்படுத்தி இருக்கின்றார். நாமும் விடயம் தெரியாது அவர்கள் கூறுவதை முற்று முழுதாக நம்பி, ஏன்? எதற்கு எனக் கேள்வி கேட்காமல் செயற்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தப் பலவீனத்தைத்தான் ஆரிய வேதம் ஓதும் குருக்கள்மார் தமக்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
நாட்டின் இன்றைய நெருக்கடி நிலை காரணமாகப் பலர் தொழிலை இழந்திருக்கின்றனர். பொருட்களுக்கு மலைபோல் விலை ஏறி மக்களின் நாளாந்த வாழ்க்கைத் தரத்தைப் பாதித்திருக்கின்றன. பலர் ஒருவேளை, இருவேளை உணவைத் தவிர்த்து, ஊட்டச் சத்தில்லாத உணவை உட்கொண்டு வருகின்றனர். இந்த வேளையில் மக்களிடம் இருந்து பெருமளவு நிதியை எதிர்பார்த்து ஆடம்பரமான விழாக்கள் செய்வதை விடுத்து செலவைக் குறைத்துக் கொள்வது சிறந்தது. அத்தோடு நாட்டின் நிலமை சீராகும்வரை கோயில் கட்டுமானங்கள், கும்பாவிசேகங்கள், பிதிஷ்டைகள் ஆகியவற்றைச் சிறிது காலம் இடை நிறுத்தி வைப்போம். வீணான செலவுகளைக் குறைத்து இருப்பதை வைத்துச் சிக்கனமாகச் செய்து முடிப்போம். மக்களின் சுமையைக் குறைப்போம்.
![]()