கட்டுரைகள்

விஜய் – மாற்றமா? ஏமாற்றமா?…. நியூசிலாந்து சிற்சபேசன் 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

மு.க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, சீமான் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களையும் பிரச்சாரத்திலே காணமுடிகின்றது. ஆனால், ‘மாற்றம்’ ஏற்படுத்தப்போவதாகச் சொன்ன தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசன்னத்தைத் தேடவேண்டியிருக்கின்றது.

தமிழக அரசியலிலே கூட்டணியமைப்பது இயல்பாகிவிட்டது. அத்தகைய கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் விஜய்யும் ஈடுபட்டார். இதுவே, விஜய்யின் முதலாவது தேர்தலாகும். இருந்தபோதிலும், முதலமைச்சர் வேட்பாளராக வேண்டும் என்னும் எதிர்பார்ப்புடனேயே காணப்படுகின்றார். அதனை பிறகட்சிகள் ரசிக்கவில்லை. கூட்டணிப் பேரங்களும் படியவில்லை.

அதனால், 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகின்ற சூழ்நிலை ஏற்பட்டது. தனித்துப் போட்டியிடுகின்ற விஜய்யின் துணிச்சல் கவனத்தைப் பெற்றது. பாரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

ஆனால், வாக்குப்பதிவு நெருங்குகின்ற வேளையிலே விஜய்யின் அரசியல் கேள்விக்குள்ளாகின்றது.

விஜய்யினால் நாலுவிடயங்களைப் பேசமுடிவதில்லை. செய்தியாளர்களைச் சந்திக்கமுடிவதில்லை. நேர்காணல் வழங்குவதில்லை. வேட்பாளர் அறிமுகம், தேர்தல் அறிக்கை போன்றவற்றுக்கேனும் நட்சத்திர ஓட்டல்களுக்கு வெளியே வரமுடிவதில்லை. இத்தகைய பின்னணியிலே, தேர்தல் பிரச்சாரத்தை ஒப்பேற்றுவதே “மலையேற்றம்” ஆகியிருக்கின்றது.

அதனால், விஜய் தரப்பே, பிரசாரங்களைத் திட்டமிட்டுக் குழப்புகின்றதோ? என்னும் கேள்வி எழுகின்றது.

பிரசாரக்கூட்டங்களிலே விஜய் பேசுவதில்லை. பேசினாலும், மிகச்சொற்ப நேரமே பேசுகின்றார். அதிலேயும், ‘அங்கிள் ஸ்டாலின்”, ‘திமுக என்பது தீய சக்தி’ போன்ற “பஞ்ச் டயலாக்”களே அதிகம் பேசுகின்றார்.

ஒரேவகையான சொற்களையே திரும்பத்திரும்பப் பயன்படுத்துகின்றார். இல்லையெனில், சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி “திருவிளையாடல் நாகேஷ்” ஆகிவிடுகின்றார்.

யாரோ எழுதிக் கொடுப்பதை ஒப்பிக்கின்றார்.

ஏஐ என்று சொல்லப்படுகின்ற “செயற்கை நுண்ணறிவு” மூலமாக எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம் என்கிறார்.

தமிழ்நாட்டை ஏஐ தலைநகராக மாற்றுவேன் என்கிறார். ஏஐ தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஏஐ அமைச்சகம், ஏஐ நகரங்கள் என ஏஐ என்ற சொல்லை மந்திரமாக உச்சரிக்கின்றார். கற்பனைக் கதைகளைச் சொல்கிறார்.

ஆதார் அட்டை போன்று, ஏஐ தரவுகளுடன் தமிழ்நாடு அடையாள அட்டை உருவாக்குவேன் என்கிறார். அதனூடாக, லஞ்சமற்ற வகையிலே நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப்போவதாகச் சொல்கிறார்.

10,000 கையெழுத்துகளுடன் மனுகொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுப்பேன் என்கிறார். ஐந்து இலட்சம் கையெழுத்துடன் மனு கொடுத்தால், சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்கிறார்.

இத்தகைய “அலப்பறை” பேச்சுக்கள், விஜய் முகத்தைப் பார்க்கமட்டுமே கூடுகின்ற கூட்டத்துக்கு, செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றதேயாகும்.

ஒருநாள் பிரச்சாரம் செய்வது, மறுநாள் பிரச்சாரத்தை ரத்துச் செய்வது, பிறிதொருநாள் பிரச்சாரத்தை இடையிலே நிறுத்திவிட்டுப் போய்விடுவது போன்றவையே விஜய்யின் பிரச்சாரப் பாணி ஆகின்றன.

நேரக்கட்டுப்பாட்டை காவல்துறை ஏற்படுத்துகின்றது. போதிய பாதுகாப்பு வழங்குவதில்லை. அதனாலேயே பிரச்சாரத்தை முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை என்று விஜய் தரப்பில் சொல்லப்படுகின்றது.

விஜய்க்கு கூட்டம் அதிகம் வருவதால் பூரண பாதுகாப்பு வழங்குவது சவாலானது. அதனாலேயே, மேலதிகமான நேரக்கட்டுப்பாட்டை காவல்துறை விதிப்பதாக அரசியல்நோக்கர்கள் கருதுகின்றனர்.

முன்னைய காலங்களிலே மக்களை ஈர்த்த எம்.ஜி.ஆர், கலைஞர் கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா போன்ற தலைவர்களுக்கும் மேலதிகமான நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அத்தகைய சூழ்நிலையிலேயும் பிரசாரக் கூட்டங்கள் ரத்துச்செய்யப்படவில்லை. விஜய்யின் பிரசாரம் செய்தியாகவில்லை. மாறாக, விஜய் பிரசாரத்துக்கு வருவதும், வந்துவிட்டு கூட்டத்திலே பேசாமல் போவதும், வருவதாக அறிவிக்கப்பட்ட கூட்டங்களை திடீர் திடீரென்று ரத்து செய்வதுமே அதிக கவனத்தை ஈர்க்கின்றன.

இரத்துச் செய்யப்பட்ட பிரச்சாரக் கூட்டங்களின் பட்டியல் நீளமானது. கடந்த நான்கு வாரங்களில் வில்லிவாக்கத்தில் ஆரம்பித்து கும்மிடிப்பூண்டி, புதுக்கோட்டை என அனுமன் வால் போன்று பட்டியல் நீள்கின்றது.

அவ்வப்போதே பிரச்சாரக் கூட்டங்களிலே கலந்துகொள்வதனால், ‘தலைவர் எங்கே?’ என விஜய்யினுடைய வேட்பாளர்களே தவிக்கின்றனர்.

“விஜய் வருவார்” என்று காத்திருப்பது “போகாத ஊருக்கு தேடுகின்ற வழி” என்பதை ஊகித்துக்கொள்கின்றனர். அதனால், நூதனமான வழிமுறைகளைத் தேடுகின்றனர்.

“விஜய்” பொம்மைகளை வைத்து வாக்குக்கேட்கின்றனர்.

“விஜய்” போலத் தோற்றமளிக்கும் “டூப்” நடிகரை பிரச்சாரத்துக்கு அழைத்து வருகின்றனர்.

விஜய்யின் கட்-அவுட்களை வைத்துச் சமாளிக்கின்றனர்.

‘ஹொலோகிராம்’ என்று சொல்லக்கூடிய “3டி” தொழில்நுட்பம் மூலமாக விஜய் நேரில் நின்று பேசுவது போன்ற தத்ரூபமான பிம்பத்தை பிரச்சாரத்தில் பயன்படுத்துகின்றனர்.

ஆக, “தலை” காட்டாமலேயே “தலைவர்” ஆகிவிட்ட விஜய்யின் அரசியல் தொடர்பிலே ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன. அவை, தர்க்கபூர்வமான பகுத்தறிந்த சிந்தனையூடாக எழுபவையாகும்.

ஆனால், பரந்துபட்ட மக்கள் கூட்டம் அவ்வாறு சிந்திப்பதில்லை. விஜய்யை வெறித்தனமாக ஆராதிக்கின்றனர். உயிரைத் துச்சமெனக் கருதுகின்றனர். கரூர் போன்ற சம்பவங்களை மறந்துவிடுகின்றனர். உணவு தண்ணீரின்றி வெய்யிலில் காய்கின்றனர். விஜய் வாகனத்தைத் துரத்துகின்றனர். விஜய்யின் “பவுன்சர்”களினால் துவம்சம் செய்யப்படுகின்றனர். ஆனாலும்கூட, விஜய்யை பார்ப்பதே பிறவிப்பயன் என நினைக்கின்றனர்.

திராவிட உணர்வு மேலோங்கியபோது, 1967ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. சினிமாக் கவர்ச்சி கரைபுரண்டபோது, 1977ல் எம்ஜிஆர் உச்சம் பெற்றார். திமுகவையும், எம்ஜிஆரையும் ஆராதித்தோரின், உணர்ச்சிபீறிடும், வாரிசுகள் தலையெடுக்கின்றனர். 2026ல் மீண்டும் சினிமாக் கவர்ச்சி பொங்கிப்பிரவாகிக்கின்றது. விஜய்யை உச்சாணிக்கொம்பில் ஏற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தவகையிலே, விஜய் – மாற்றமா? ஏமாற்றமா? என்னும் கேள்வி செல்லாக்காசாகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *