அனைத்துப் பாதையும் அமைந்திடும் சிறப்பாய்!…. கவிதை… ஜெயராமசர்மா

கல்லிருக்கும் முள்ளிருக்கும் காட்டாறு குறுக்கவரும்
காட்டெருமை சிங்கமொடு கரடியும் கூடவரும்
சிறுத்தையொடு யானை சீறுகின்ற பாம்பு
பயணிக்கும் பாதையை பயங்கரமா யாக்கிவிடும்
இவையெல்லாம் பாதையிலே வந்திடுமா என்று
எண்ணியே விட்டால் பயணிக்க மாட்டோம்
எதுவந்த போதும் பயணிப்போம் என்னும்
துணிவுமனம் வந்தால் பயணம் சிறப்பாகும்
மாநிலத்து வாழ்க்கை பெரும் பயணமாகும்
பயணிக்கும் பாதையில் தடங்கல்பல வரலாம்
தடங்கலைத் தாண்டுவார் தலைநிமிர்ந்து நிற்பார்
தடுமாறித் தயங்கினால் முடங்கியே போவோம்
நம்முடைய அடியார்கள் பலருமே தாண்டினார்
வள்ளுவர் யேசு நபிகளும் தாண்டினார்
புத்தரும் தாண்டினார் புனிதர்பலர் தாண்டினார்
சிக்கலைத் தாண்டிட சிந்திப்போம் வாருங்கள்
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
காட்டாறு வந்தால் கடந்தே விடுவோம்
கரடி புலியைக் கண்டுநாம் அஞ்சோம்
என்று எண்ணினால் எழுந்தே நிற்கலாம்
அஞ்சும் எண்ணம் அகன்றிட வேண்டும்
ஆண்டவன் மீது நம்பிக்கை வேண்டும்
ஆன்ம பலத்தை பெருக்கிட வேண்டும்
அனைத்துப் பாதையும் அமைந்திடும் சிறப்பாய் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()