அரனே அப்பர்க்கு அனைத்தும் ஆகினார்!… கவிதை… ஜெயராமசர்மா

சமணம் தவறி வீழ்ந்தார் அப்பர்
சைவம் அவரைத் தாங்கிப் பிடித்தது
சிவனே அப்பரின் நோயினைப் போக்கினார்
சிவன் அடியாராய் அப்பர் மலர்ந்தார்
எண்பத் தொராண்டுகள் இம்மண் வாழ்ந்தார்
இறைவன் நினைப்பில் எல்லாம் செய்தார்
உழவாரம் கையில் எடுத்துமே அப்பர்
உலகின் புரட்சி வீரராய் எழுந்தார்

அப்பரின் புரட்சி ஆன்மீகப் புரட்சி
ஆண்டவன் ஒருவனே அவருக்குத் தலைவன்
அடக்கிய அரசினை எதிர்த்தவர் அப்பர்
அவரோ சைவத்தின் அரும்பெரும் சொத்தே
சமணத் தலைவராய் இருந்தார் அப்பர்
சைவம் தொட்டதால் சமணர் வெறுத்தார்
நஞ்சைக் கொடுத்தார் கொல்ல நினைத்தார்
யானையைக் கொண்டு கொன்றிட முனைந்தார்
நீற்றறை அடைத்து நிட்டூரம் செய்தார்
நெஞ்சம் உடைய நிந்தினை செய்தார்
கல்லுடன் கட்டிக் கடலினுள் போட்டார்
அரன் அருளாலே அப்பர் பிழைத்தார்

தாண்டக வேந்தராய் தமிழமு தீந்தார்
தலைவனாம் சிவனைப் பாடியே பரவினார்
தத்துவம் சொன்னார் இத்தரை அடியார்
சித்தம் திருந்திட செப்பினார் அப்பர்
சரியைத் தொண்டின் தலைவரே அப்பர்
அவரின் நெறிமுறை அனைத்தும் உயர்வே
ஒவ்வொரு உறுப்பும் உயர்வினை நோக்க
அப்பர் அளித்தார் அமுதத் தமிழில்
தொண்டனாய் இருப்பதே பெரிதென நினைத்தார்
எளிமை பக்தி அப்பரின் தத்துவம்
அஞ்சா இருப்பது அவரின் இயல்பே
அரனேஅப்பர்க்கு அனைத்தும் ஆகினார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()