கவிதைகள்

மாண்புடையோர் செல்வம் இனிது!…. கவிதை… அன்பு ஜெயா, சிட்னி

பா வகை: வளையல் சிந்து.

நோய்தான் இன்றிக் குழந்தைகள் வளர்ந்தால்
நோயிலா வாழ்வும் நலமே – நாளும்
எம்மினம் உயர்வதும் நலமே – மயக்கமே
இல்லா மாண்பும் நலமே – அத்துடன்
செல்வம் சேர்ந்திடின் சிறந்திடும் நம்மினம்
செழிப்புடன் நன்மையும் கூடுமே! (1)

மாண்புடைச் செல்வர் மற்றவர் மகிழ்ந்திட
மனமுவந் தளிப்பர் கொடையே – எளியோர்
இன்பமாய் வாழவும் கொடையே – உலகில்
என்றுமே உயர்ந்ததும் கொடையே – பண்புடைச்
செல்வர் அளித்திடும் கொடையே – ஏழ்மையைச்
சிறப்பாய் வென்றிடும் உறுதியே! (2)

குழந்தையின் நோயிலா வாழ்வே இனிது,
குறையிலா உரையதும் இனிது – மேலும்
அவைசார் உரையெனின் இனிது – நாளும்
மாண்புடன் வாழ்தலே இனிது – வாழ்வில்
மாண்புளோர் செல்வம் சேர்த்து வாழ்ந்துமே
மற்றவர்க் குதவிடல் இனிது! (3)

அவையினுக் கேற்ற உரையினை ஆற்றுவோர்
அருந்திறன் என்றும் இனிது – புவியில்
குறையிலா மாண்பும் இனிது – செல்வம்
மாசிலா தென்றால் இனிது – என்றும்
மற்றவர் வாழ்வில் ஒளியினை ஏற்றுதல்
மாநிலம் தன்னில் இனிது! (4)
———————-

அன்பு ஜெயா, சிட்னி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *