குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர் – 16 …. நினைவுத்தூண் …. மீனாசுந்தர்

பிரதான சாலையையொட்டி கீழிறங்கும் மண்சாலையில் உசேன்பாய் தேநீர்க்கடை வைத்திருந்தார். கடையிலிருந்து சற்று தூரத்தில் ஒரே கூட்டமாகவிருந்தது. பெரும்பாலும் இளைஞர்கள். விபரம் அறிந்துகொள்ள முடியவில்லை. எதுவும் பிரச்சனையாக இருக்குமோவெனப் பட்டது. பெரியவர்கள் பலரும் கூடி நிற்பதைக் கடையிலிருந்தே உசேன்பாயால் பார்க்க முடிந்தது. நேரம் செல்லசெல்ல கூட்டம் அதிகமாகிக்கொண்டேயிருந்தது.
இங்கிருந்து பார்க்கையில் உழவு வயல்களில் கொக்குகள் கூடி நிற்பதைப்போல அத்தனை உருவங்களும் பளீரென்ற வெள்ளை வேட்டிசட்டையில் நின்றனர். கடையில் நிற்கும் உசேனுக்கு இருப்பு கொள்ளவில்லை. அறிந்துகொள்ளும் ஆவல் அவரைப் படுத்தியெடுக்க, இந்நேரம் பார்த்துக் கோனாரும் வரவில்லையே என்றெண்ணியவர், அவரிருந்தால் அக்குவேர் ஆணிவேராகப் பிரித்து மேய்ந்துவந்து சொல்லியிருப்பாரென நினைத்துக் கொண்டார்.
கடையில் இரண்டுபேர் அமர்ந்து தேநீர் அருந்திக்கொண்டிருந்தார்கள்.
மூன்றாவதாய் ஏகாம்பரம் வந்து சேர்ந்தார். அவர்களிடம் உசேன்பாய் கேட்டுப் பார்த்தார். சொல்லி வைத்ததைப்போல மூவரும் ஒருசேர உதட்டைப் பிதுக்கினார்கள். ஏகாம்பரம் ஊகமாய் சில செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“ச்சும்மா ஒன்னுக்குமாவாத தறுதலப் பெயலுங்க. எதையாவது சொல்லி கூடிக் கும்மாளம் போட்டுக்கிட்டு நிப்பானுங்கெ. நமக்கெதுக்கு பாய் அந்தக் கவலை? என்னன்னு கேட்டா நம்மகிட்டயவே வம்புக்கு வருவாங்கெ. விடுங்க. நம்மவேலய பாப்பொம்”
அத்துடன் அதற்கு அணை கட்டிவிட்டார் ஏகாம்பரம். சென்ற ஆண்டுதான் அவர் அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். மடிப்புகலையாத வேட்டி சட்டையிலிருந்தார். தோளில் பச்சைக்கரைபோட்ட நீண்ட வெண்துண்டு. நெற்றியில் தீற்றலாய் திருநீறணிந்து அதன்கீழே சிறிய குங்குமம் வைத்திருந்தார். ஜவ்வாதுமணம் சுற்றிக்கொண்டே நிற்பதைப்போன்ற பிரமை. அப்படியொரு சுகந்தமணம். உடல்சுத்தம் இருக்குமளவிற்கு உள்ளச்சுத்தம் இருப்பதுபோலத் தெரியவில்லை.

எல்லாவற்றிலும் தன்பெண்டு தன்பிள்ளையெனச் சிந்திக்கும் எண்ணம் கொண்டவராகத் தெரிந்தார். வம்புதும்புக்குப் போகக்கூடாது, நல்லதோகெட்டதோ எதுவென்றாலும் நமக்கெதுக்கு வீண்வேலையென்ற கொள்கையுடையவராய் இருக்க வேண்டும். தான்மட்டும் வாழ்ந்தால் போதுமென்ற பரந்தமனம்(?) கொண்டவரைப்போல அவரின் நடவடிக்கைகளிருந்தன. வீடே பற்றிக்கொண்டு எரியும்போது சுருட்டுக்கு நெருப்புகேட்ட கதையாக, பக்கத்தில் பற்றிக்கொண்டு எரிந்தாலும் தனக்கெதுவும் தெரியாதென ஒதுங்கிகொள்ளும் காரியவாதியாகக் காட்சி தந்தார்.
உசேன்பாய் ஏகாம்பரத்துக்கும் தேநீரை கொண்டுவந்து வைத்தார். சூட்டையாற்றி ஒரு மிடறு வாயில்வைத்து உறிஞ்சியவர் அதேவேகத்தில் துப்பினார். நொடியில் உசேன்பாய் துடித்துப் பதறினார்.
“என்னாச்சுங்க சார்?”
“சக்கர போடலியா பாய்? கசப்பு தாங்கலை” என்றார் ஏகாம்பரம். உசேன்பாய் தலையில் அடித்துக் கொண்டார். தனது செயலை நொந்தபடி,
“மன்னிச்சிக்கிடுங்க சார். ஏதோ நாவகத்துல மறந்திட்டென்” என்றார்.
“ஒங்களுக்கு ஞாபகம் இங்க இல்லங்கறதுமட்டும் நல்லா தெரியுதுங்க பாய்”
“இதுமாரி நடந்ததில்லயே சார்…எல்லாம் நம்ம புள்ளகளாவே கூடி நிக்கிதுங்களா?. அதான் அதே நாவகமாருக்கு” என்றார் உசேன்
“செரி..செரி விடுங்க. ந்தோ வர்றான் பாருங்க குணாளன். என்னன்னுதான் கேப்பமே” குணாளன் வேகவேகமாய் நடந்து வந்துகொண்டிருந்தான். வந்ததும் வராததுமாக சொன்னான்.
“பாய்… வயிறு கபகபன்னு எரியது.. ஒரு டீ போடுங்க” என்றான்.
பாய் அதற்குள் “அங்க என்ன பெரச்சின தம்பி ?” என்றார்.
“பொக்கிசத்தை அழிச்சி புதைச்சிட்டு சாலை விரிவாக்கம் பண்ணுறானுங்களாம். அவெனல்லாம் மனுச பொறப்பான்னே சந்தேகமாருக்கு…”
இடைநிறுத்தமின்றி வார்த்தைகளை அள்ளித் தெளித்துக்கொண்டிருந்தான். தான் சொன்னது சரியாப்போச்சா என்பதுபோல உசேன்பாயை எள்ளலும் துள்ளலுமாய் நேரிட்டார் ஏகாம்பரம். அவரது முகத்தில் எதையோ சாதித்துவிட்ட பெருமித உணர்வு மிளிர்ந்தது. உசேன்பாய் தலையைக் கவிழ்த்துக்கொண்டு தேநீர் தயாரிப்பதில் மும்முரமாய் இருந்தார். ஏகாம்பரம் அவனிடம் கேட்டார்.
“குணாளா.. சொல்றன்னு தப்பா நெனக்காத. காலத்துக்குதக்க நாமளும் மாறிக்கிடணும். கொஞ்சம் நிதானமா நெனச்சிப்பாரு.. அன்னிக்கு இருந்தமாரியே எலி வாலுமாரி ஒல்லிப்பிச்சான் சாலைய வச்சிக்கிட்டு இப்ப சமாளிக்க முடியுமா? அகலமா இருந்தா எல்லாருக்கும் வசதிதான.? அதுக்கென்ன ஆர்ப்பாட்டம்?”
குணாளன் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலிருந்தான். அவனுக்கு ஏகாம்பரத்தின்மேல் கோபம் கொப்பளித்துக்கொண்டு வந்தது. வயதிற்கு மதிப்பளித்துத் தன்னை அடக்கிக்கொண்டான்.
“சாலய விரிவாக்கஞ் செய்யவேண்டான்னு நாங்க சொன்னமா?”
“பின்ன..வேற என்னதான் பெரச்சன?”
“விரிவாக்கஞ் செய்யிறவேலய செரியா செய்யணுமில்ல?”
“சரியாத்தான செய்யிறாங்க. நேத்திக்கூட நான் பாத்தெனெ?”
“அதுக்குமேல நான் ஒன்னும் பேச விரும்பல” என்றான் முகத்தை முறித்தவாறு.
“அட என்னத்தென் நடந்திச்சின்னு வௌக்கமாத்தான் சொல்லென்?”
“உப்புசத்யாகிரக நெனவுத்தூன இடிச்சிப் பள்ளத்துல தள்ளி மூடிட்டாய்ங்கெ”
“அப்படியா? அதெல்லாம் ரொம்ப தப்பாச்சே”
ஏகாம்பரம் தனது முகத்தில் போலியான கவலையைப் பரவவிட்டுக்கொண்டார். குணாளன் சற்று சூடாகவே கேட்டான்.
“என்னங்க சார் சுரத்தில்லாம அப்படியாங்கிறிங்க? இதைக் கேட்கக்கூடாதா?”
ஏகாம்பரம் வாயை மூடிக்கொண்டார். பேசினால் குணாளன் தனது மானத்தை வாங்கிவிடுவானோவென உள்ளுக்குள் தடதடத்தது ஏகாம்பரத்திற்கு. இனி அங்கிருப்பது உசிதமல்லவென அவருக்குத் தோன்றிற்று. குணாளன் சினத்தின் உச்சியில் கொதிப்புடன் நின்றுகொண்டிருந்தான். ஏகாம்பரம் சூழலைப் புரிந்துகொண்டு தனக்கு அவசர வேலையிருப்பதாக மெல்ல அங்கிருந்து நழுவிச் சென்றார். நடை வேகத்தில் தோள்துண்டு சரிந்து மண்ணில் விழுந்தது. அதையும் சமாளித்து நடையை எட்டிப்போட்டார். குணாளன் புள்ளியாகும்வரை அவரையே பார்த்துக்கொண்டு கடைவாசலில் நின்றான். பிறகு என்ன நினைத்தானோ ஓரமாகச் சென்று காறி உமிழ்ந்துவிட்டு வந்து தொடர்ந்தான்.
“சாலை விரிவாக்கத்துக்குத் தொந்தரவாருந்தா முக்கியஸ்தர்ங்ககிட்டப் பேசிட்டு பத்திரமா தள்ளிவச்சிக் கட்டிக் கொடுக்கணும்ல?. அதைச் செய்யாம மண்ணப்போட்டுப் மூடினா, கேக்கபாக்க ஆளில்லையா?”
உசேனுக்கு அப்போதுதான் முழுவிவரம் தெரிந்தது. பிள்ளைகளை நினைத்து மனமெங்கும் பெருமை பொங்கி வழிந்தது. இந்தக்காலத்துப் பிள்ளைகள் பொறுப்புணர்வோடு இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் மெய்சிலிர்த்தார். இன்னொரு தேநீரைக் கொண்டுவந்து குணாளன் முன் வைத்தார். “இதையும் சாப்பிடுங்க தம்பி. காலையிலருந்து கத்தியிருப்பீங்க. இன்னமும் கத்த வேண்டியிருக்கும்” என்றார் உசேன்பாய். குணாளன் அவரை அதிசயம்போல் பார்த்தான்.
“இந்தத் தூணு கெட்டினது உங்களுக்குத் தெரியுமா தம்பி?“ என்றார் உசேன்பாய்.
“தெரியாதுங்க பாய். எங்கள்ல பலபேரு அப்ப பொறந்திருப்பமான்னுகூடத் தெரியல. அது நம்ம மண்ணோட சொத்தில்லியா? யாருக்கு கெடக்கிம் அந்தப் பெருமை? கெடக்காத பொக்கிசமில்லியா?”
விடலைப்பிள்ளைகள் பொறுப்பற்றுத் திரிகிறார்களென விபரமறியாமல் சொல்வதை உசேன் எப்போதும் ஏற்றுக்கொண்டதில்லை. குணாளனைப் பார்க்கும் இந்தத் தருணத்தில் அது மேலும் வலுப்பெறத் தொடங்கியிருந்தது.

“நம்மூரு வழியா அந்தத் தியாகிங்க நடந்துபோயிருக்காங்கன்னு நெனக்கிறப்பவே ஒடம்பு சிலுக்குது பாய். திருச்சியிலேந்து வேதாரண்யத்துக்குப்போற வழில மாரிமுத்தம் இருந்ததால நமக்கிந்த பாக்கியம். இந்த எடத்துல நின்னு கோசம் போட்டிருக்காங்க. அவங்க கொரலெல்லாம் இன்னும் காத்துல சுத்திக்கிட்டித்தானிருக்கும் பாய்.
அவனை வியந்து அன்னாந்து பார்த்தார் உசேன்.
“ராஜாஜி இந்த எடத்துல நின்னுதான உணர்ச்சிகரமா பேசிருக்காரு. ஊருக்கெல்லாம் கெடக்காத பெருமை நமக்குக் கெடச்சிருக்குன்னா அதெ நாம உசிரப்போல நெனச்சி காப்பாத்த வேணாமா? நம்மூரு பெருமைய உலகத்துக்கெ பறைசாற்றிக்கிட்டிருந்தது எது? அந்த நினைவுத்தூணும் கல்லும்தானே” என்றான் குணாளன்.
அவன் கண்களில் அப்போது பெருமிதத்தின் பேரொளி சுடர்ந்து நின்றது. பாய் அவசரம் அவசரமென பெரியவாளியில் நூறுபேர் குடிக்குமளவிற்குத் தேநீரைத் தயார் செய்து எடுத்துவந்து குணாளன்முன் வைத்தார். அவனுக்கு எதுவும் புரியவில்லை. அவரையும் வாளியையும் மாறிமாறிப் பார்த்தான்.
“புள்ளங்க எல்லாரும் காலயிலருந்தே அப்படியெ நிக்கிதுங்க. கொண்டுபோய் ஊத்திக் கொடுங்க தம்பி” என்றார்.
குளாணனுக்கு முதலில் தயக்கமாகத்தானிருந்தது. அவனின் தயக்கத்தைப் பார்த்து, “ஒன்னுந்தயங்காதியொ.. எடுத்துட்டுப் போங்க தம்பி” என்றார் உசேன்பாய். அவரின் வற்புறுத்தலுக்குப் பிறகே எடுத்துப்போக இணங்கினான். குணாளன் வாளைியைத் தூக்கிக்கொண்டு வெளியே வரும்சமயம் கோனார் எதிரில்வந்து கடைக்குள் நுழைந்தார்.
“ஏன்ங்..கோனாரே.. இவ்ளோ நேரமா எங்க போயிருந்தீங்க?“
“இந்த மாரிமுத்தத்தவிட்டா எனக்குக் கெதியேது? நான் எங்க போவப்போறன்? ந்தோ.. அங்கதான் நின்னேன். எனக்கே நெஞ்சு கொதிச்சிப்பொயிட்டு பாய்”
“இன்னுங் கடைப்பக்கமா காணுலியேன்றப்பவெ நெனச்சன்”
“எனக்கு நல்லா நாவகமிருக்கு பாய். அப்ப நான் சின்னபையனா இருந்தன். அந்த ஊர்வலம் ரொம்ப உணர்ச்சிகரமா இருந்திச்சி. அந்த இடத்துலதான் அத்தனைபேரும் கூடி நின்னாங்க. ஊரே தெரண்டு நின்னு வேடிக்க பாத்துச்சி. கோனாருக்குச் சொல்லும்போதே கண்களில் அத்தனை பரவசம். “நாமக்கல் ராமலிங்கம்புள்ள சத்தமா பாடறாரு. குரல் கணீர்ன்னு கேக்குது.
”கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
ஒண்டி அண்டிக் குண்டு விட்டிங்குயிர் பறித்தலின்றியே
மண்டலத்தில் கண்டிடாத சண்டையன்று புதுமையே!
குதிரையில்லை யானையில்லை கொல்லும் ஆசையில்லையே
எதிரியென்று யாருமில்லை எற்றும் ஆசையில்லதாய்!
கோபமில்லை தாபமில்லை சாபங்கூறல் இல்லையே
பாபமான செய்கையன்றும் பண்ணமாசையின்றியே!
கண்டதில்லை கேட்டதில்லை சண்டையிந்த மாதிரி
பண்டுசெய்த புண்ணியந்தான் பலித்ததே நாம் பார்த்திட!
காந்தியென்ற சாந்தமூர்த்தி தேர்ந்து காட்டும் செந்நெறி
மாந்தருக்குள் தீமைகுன்ற வாய்ந்த தெய்வ மார்க்கமே!
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!
“பாட்டு விண்ணைப் பொளக்குது உணர்ச்சி பெருக்குல வந்தவங்க, வேடிக்கபாத்து நின்னவங்கன்னு வித்தியாசமில்லாம ராமலிங்கம்புள்ள பாட்ட வாங்கி திரும்ப பாடுறாங்க”
“கண்கொள்ளாக் காட்சியா இருந்திருக்குமே கோனாரே”
ஆமாபாய்… இன்னும் என்னால அந்தக்காட்சிய மறக்க முடியல”
சொல்லும்போதே கோனாருக்குக் கண்கள் கலங்கி நின்றன. சமாளித்துத் தொடர்ந்தார்.
“எங்க பாத்தாலும் வெள்ளைஜிப்பா சட்டை, வெள்ளைதொப்பி கூட்டமா ஜொலிக்குது. எவ்வளவு பேருன்னு சொல்லத்தெரியல. சாரைசாரையா வந்துகிட்டே இருந்தாங்க”
உசேன்பாய் கோனாரையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். யாரோ ஒருவர் தேநீர் கேட்டுவந்தார். கதை கேட்கும் ஆர்வமிகுதியில் அவரிடம் மனசாட்சியில்லாமல் பால் இல்லையென்று பொய் சொன்னார் உசேன்பாய். கோனார் தொடர்ந்தார்.
“காந்திஜி தண்டியில உப்பள்ளுனமாரி இங்க வேதாரண்யத்ல ராஜாஜி அள்ளுனது சும்மால்ல? நம்ம ஒத்துமைய எதிரிங்களுக்கு ஒசத்திக் காட்டுன முக்கிய சம்பவமது. நம்மகிட்ட இன்னிக்கி ஆயிரம் பேதமிருக்கலாம். ஆனா அது வரலாற்றுச் சாதனை”
கோனார் உணர்ச்சிப் பிழம்பாக மாறியிருந்தார்.
“ஏப்ரல் பதிமூனாந்தேதி ஆரம்பிச்ச நடைப்பயணம் முப்பதாம்தேதிதான் வேதாரண்யத்துல முடிஞ்சிச்சி. கிட்டத்தட்ட பதினெட்டு நாட்கள்”
“பதினெட்டு நாட்களா? இங்கருந்து நடக்கறதுக்கு அத்தனை நாட்களா ஆகும்?
“பாய்.. நடைபயணன்னா சும்மா நடந்துபோயிக்கிட்டே இருக்கறதில்ல. அங்கங்க மக்களைச் சந்திச்சி அவங்களுக்கு உண்மையச்சொல்லி விளக்கற பணியும்கூட. ஒத்த கல்லுல ரெண்டு மாங்கா”
“செரிதான்.. அங்கங்க கூட்டம்போட்டு பேசினாங்களா?”
“ஆமா.. எனக்கு நல்லா நாவகமிருக்கு. நம்ம மாரிமுத்தத்துக்கு அவங்க ஏப்ரல் இருபதாம் தேதி வந்தாங்க. நாங்க சின்னப் பசங்கெல்லாம் வேடிக்கைப் பார்க்கப்போயி நின்னொம். உணர்ச்சிவசப்பட்ட நாங்களும் சேர்ந்து கத்துறோம். பிச்சைவாய்க்காரர் தலைமையில மக்கள்கூடி பெரியளவு வரவேற்பு கொடுக்க நின்னாங்க. ஆனா போலிஸ்காரங்க விடல. அவங்க தூரத்துலருந்தே உணர்ச்சிமயமா கத்துனாங்க”
உசேன்பாய், கோனாரின் உணர்ச்சி கொப்பளிக்கும் முகபாவங்களை ரசித்தபடியே நின்றுகொண்டிருந்தார். அந்தக் காலத்திற்குப் பயணம் செய்ததுபோல் சிறுகுழந்தையாக மாறியிருந்தார்.
“வேதாரண்யம் சத்தியாகிரகத்துல கலந்துக்கிட்டவங்க மொத்தம் எத்தனபேரு தெரியுமா?”
“எனக்கெப்படி தெரியும்?”
“நான் சொல்றேன். தொன்னூத்தெட்டுப்பேர் பாய். அத்தனபேரையும் ராஜாஜியே நேரடியா தேர்வு செஞ்சாராம்”.
“உண்மையாவா?”
“நானுஞ் சொல்லக்கேட்டதுதான். அது பொய்யில்லங்கறதுக்கு நெறயஆதாரமிருக்கு”
“…………………………..”
“கிட்டத்தட்ட நூத்திஅம்பது கிலோமீட்டர்தூரம். அத்தனையையும் திட்டமிட்டு நடத்தியவரு டி.எஸ்.எஸ். ராஜன்ங்கற தேசபக்தர்”
“வேதாரண்யத்துல ஆக வேண்டியத யாரு பாத்தா?”
“அதுக்குத்தான் சர்தார்வேதரத்தினம்பிள்ளை இருந்தாருல்ல? அவரு பாத்துக்கிட்டாரு”
“ஓஹோ..”
“இதுல இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? இந்த ஆர்ப்பாட்டத்துல பம்பாய்லேர்ந்து பத்துத்தமிழர்களும் வந்து கலந்துகிட்டு பெருமைப்படுத்தினாங்க”
“எவ்வளவு நாட்டுப்பற்ற பாருங்க”
“ஆமா.. எல்லாம் ராணுவக் கட்டுப்பாட்டோட நடந்திச்சி. சுகாதாரப்படை, உணவுப்படை, தொண்டர்படை, ஒருங்கிணைப்புப்படைன்னு குழுக்கள் தன்னார்வலர்களா செயல்பட்டாங்க”
“அடேங்கப்பா இவ்வளவு விபரங்களும் இன்னமும் உங்களுக்கு ஞாபகமிருக்கா கோனாரே?”
“மறக்கமுடியுமா பாய்? சாதாரண சம்பவமா அது?”

தோள்துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டார் கோனார். பிறகு தொடர்ந்தார்.
“இந்த இடத்துலதான் ராஜாஜி நின்னு முழங்கினாரு. உணர்ச்சிப்பிழம்பா மக்கள் நின்னாங்க. அவரு என்ன சொல்லிப் பேசினாரு தெரியுமா?”
நிறுத்தினார் கோனார். உசேன் கோனாரையே பார்த்துக்கொண்டிருந்தார்.
“அன்பும் அகிம்சையும்தான் நம்ம ஆயுதங்கள். கோபப்படக்கூடாது. உணர்ச்சிவசப்படக் கூடாது. எதிர்ப்புங்கிறது எள்ளளவும் கூடாது. எந்தத் தியாகத்துக்கும் நாம தயாராருக்கணும்”
பேசிக்கொண்டேயிருந்த கோனரைப் பார்த்து உசேன்பாய் சொன்னார்.
“அப்படி நவந்து உட்காருங்க. கால வலிக்கிறமாரியிருக்கு. நானும் உங்க பக்கத்துல உக்காந்துக்கிடறேன்”
“எனக்கு உடம்பெல்லாம் சிலிர்க்குது பாய். ராஜாஜி அடுத்துப் பேசறாரு………”
பாய், கோனாரை ராஜாஜியாகவே பார்த்துக்கொண்டு அருகில் அமர்ந்திருக்கிறார்.
“நாங்க நடைப்பயணம் போறது மொதல்ல பலருக்கும் தெரியாது. போராட்டக்காரவுங்களுக்கு உணவு தர்றது குத்தம், உதவுறது குத்தம், மீறினா தண்டனை கெடக்கிம்ன்னு கலெக்டர் தண்டோரா போடச்சொல்லிட்டாரு.. நமக்கதுவே உற்சாகமான வரவேற்புக்கு மக்களைத் தெரட்டிடிச்சி. அந்தப்புண்ணியவான் கலெக்டருக்கு எங்க நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிச்சிக்கிறொம் அப்டின்னாரே பாக்கலாம். சமயோசிதமா பேசின அவரு பேச்சக்கேட்டு மக்கள் துள்ளிக்குதிச்சிட்டாங்க. கைதட்டிக் கொண்டாடினாங்க”
“அப்பறம்?”
“அப்பறந்தான் நம்மூரு தலவரு பிச்சவாய்க்காரரப் பத்திப் பேசத்தொடங்கினாரு”
“அப்படியென்ன பேசினாரு?”
“இங்கு நீங்களனைவரும், என்னாருயிர் நண்பர், தஞ்சைத் தரணியின் தன்னிகரில்லாத்தலைவர், கதர்ப்படைகண்ட கண்ணியவான் பிச்சைவாய்க்காரர் தலைமையில் தரும் வரவேற்பில் நான் நெகிழ்ந்து நிற்கிறேன்னாரு”
“அடேங்கப்பா.. உச்சத்துல தூக்கி வெச்சிட்டாரே”
“நம்ம தலவரைப் புகழ்ந்தா.. அதுவும் நம்ம சொந்தமண்ணுல புகழ்ந்தா நம்மாளுங்க சும்மாருப்பாங்களா?”
“கைதட்டி ஒரே ஆரவாரம். மூதறிஞர் ராஜாஜி வாழ்கன்னு ஒருபக்கம்.. மக்கள் தலைவர் பிச்சைவாய்க்காரர் வாழ்கன்னு ஒருபக்கம்.. கோஷம் யாரு போடுறான்னே தெரியல. ஒரே வாழ்த்து முழக்கங்கள்தான்”
விசில்சப்தம் விண்ணை பொளந்துச்சி. அப்படி மக்கள்கடல் குதூகலிச்ச எடத்துலதான் அந்த நினைவுத்தூண் கட்டப்பட்டுருந்திச்சி”
உசேன்பாய் உணர்ச்சிப் பெருக்கிலிருந்தார்.
“கோனாரே ஒங்களுக்கு இன்னொரு விசயமுஞ் சொல்லறேன். அதுல கலந்துகிட்ட தொன்னூத்திஎட்டுப் பேருல புகழ்பெற்ற தலவருங்களும் இருந்தாங்க”
“யாராரு இருந்தா?”
“கே. சந்தானம், ருக்மணி லட்சுமிபதி அம்மாள், ஏ.என். சிவராமன், மௌலானா சாகிப், ராஜபாளையம் ரங்கசாமின்னு பெரியபட்டாளமே இருந்தாங்களே”
உசேன் சிரித்துக் கொண்டே கேட்டார், “மௌலானாசாகிப் யாருன்னு தெரியுமா கோனாரே? எங்களுக்கு நெருங்கின ஒறவு. எங்க தாய்வழில பெரிய பாட்டன்”
“அப்படிப் போடுங்க. அவங்களைமாரியெல்லாம் இப்பவாழ யாரிருக்கா பாய்?”
“ஆமா.. அதுலயே இன்னொரு சம்பவம்? நீங்க கேள்விப்பட்டிருப்பிங்களோ என்னவோ?”
“சொல்லுங்க”
“ஒரு நாள் அதுலருந்த தொண்டர் ஒருவர் உணவு உண்டபிறகு சொன்னாராம். விருந்து ரொம்ப நல்லாருந்திச்சி. அருமையா செஞ்ருக்கீங்கன்னு”
“செரி அதுக்கென்ன? நல்லாருந்தா பாராட்ட வேண்டியதுதான?”
“அப்படியில்ல. ராஜாஜி என்ன சொன்னார் தெரியுமா?”
“என்ன சொன்னாராம்?”
“நாக்குச்சுவை தேடுறவன் சத்தியாகிரகியா இருக்க தகுதியில்லைன்னாராம்”
“சொன்னவருக்கு மொகம் செத்துப்போயிருக்குமே”
“பின்ன? அப்படியே வாயடைச்சிப்போயி மன்னிப்புக் கேட்டாராம்”
“இதை நான் கேள்விப்பட்டதில்ல”
“இந்தத் தியாகங்களையெல்லாம் அடுத்தத் தலைமொறக்கி சொல்லுற பாடப் புத்தகம்மாரிருந்த கல்வெட்டை திரும்ப அதே இடத்துல ஓரமா வைக்கணும்ங்கறதுதான் அவங்களோட கோரிக்கை”
சற்றுநேரத்தில் கூட்டம் கலைந்து வீடுகளுக்குப் போய்க்கொண்டிருந்தது. குணாளன் உற்சாகமாக ஓடிவந்து கொண்டிருந்தான். அவனை எதிர்கொண்டார் உசேன்.
“தம்பி பிரச்சனை என்னாச்சுப்பா?”
இன்னும் ரெண்டுநாள்ல மண்ணுக்குள்ள கெடக்கற கல்வெட்டத் தோண்டியெடுத்து அதே இடத்துல நிறுவித் தர்றதா ஒப்பந்தக்காரங்க ஒத்துக்கிட்டாங்க. தாசில்தார் பேச்சு வார்த்தையில ரெண்டு தரப்புக்கும் திருப்தி”
வீடுகளுக்குத் திரும்பும்வழியில் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து உசேன்பாயைப் பார்க்க வந்தனர்.
“டீ கொடுத்து விட்டிங்க. ரொம்ப நன்றிங்கபாய்”
“நன்றி கெடக்கட்டும். விடுங்க தம்பிகளா. ஒங்கள நெனச்சா பெருமையாருக்கு”
கருமமே கண்ணாய் வடைச்சட்டியை அடுப்பில் தூக்கிவைத்தார் உசேன்பாய்.
![]()
