பலதும் பத்தும்

மனிதாபிமானப் பணிக்காக எலிக்குச் சிலை வைத்த நாடு

உலகில் மனிதர்களுக்கும் தலைவர்களுக்கும் சிலைகள் வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், முதன்முறையாக கம்போடியாவில் நிலக்கண்ணி வெடிகளைக் கண்டறிந்து ஆயிரக்கணக்கான உயிர்களைக் காத்த ‘மகாவா’ (Magawa) என்ற எலிக்காக ஒரு நினைவுச் சிலை திறக்கப்பட்டுள்ளது.

‘அப்போப்போ’ என்ற பெல்ஜியத் தொண்டு நிறுவனத்தால் பயிற்சியளிக்கப்பட்ட இந்த ஆப்பிரிக்க வகை எலி, தனது ஐந்து ஆண்டுகாலப் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நிலக்கண்ணி வெடிகளை மோப்பம் பிடித்துக் காட்டியுள்ளது.

இதன் மூலம் சுமார் 20 கால்பந்து மைதானங்களின் பரப்பளவிற்குச் சமமான நிலப்பரப்பு பாதுகாப்பானதாக மாற்றப்பட்டது.

2022-ஆம் ஆண்டு தனது 8-வது வயதில் மறைந்த இந்த ‘வீர’ எலியின் தியாகத்தைப் போற்றும் வகையில், உள்ளூர் கலைஞர்களால் செதுக்கப்பட்ட இந்தச் சிலை கம்போடியாவின் சீம் ரீப் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

மகாவாவின் சேவை சாமான்யமானது அல்ல; ஒரு டென்னிஸ் மைதானம் அளவிலான நிலப்பரப்பை வெறும் 20 நிமிடங்களில் ஆய்வு செய்யும் திறன் கொண்டது என பாராட்டப்பட்டுள்ளது.

இதன் அசாத்தியமான மோப்ப சக்தியால் நிலக்கண்ணி வெடிகளில் உள்ள வெடிமருந்துகளைக் கண்டறிந்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்யும் என தெரிவிக்கப்படுகின்றது.

எலிகள் குறைந்த எடை கொண்டவை என்பதால் நிலக்கண்ணி வெடிகள் மீது ஏறினாலும் அவை வெடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாவாவின் இத்தகைய துணிச்சலான பணிக்காக, விலங்குகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘PDSA தங்கப் பதக்கம்’ கடந்த 2020-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. 77 ஆண்டுகால இந்த விருது வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் எலி மகாவா என்பது அதன் கூடுதல் சிறப்பாகும்.

இந்தச் சிலைத் திறப்பு நிகழ்வின் போது, மகாவாவின் சாதனையை விடவும் அதிகமாக 109 நிலக்கண்ணி வெடிகளைக் கண்டறிந்து ‘ரோனின்’ (Ronin) என்ற மற்றுமொரு எலி 2025-இல் புதிய உலக சாதனை படைத்துள்ள செய்தியும் பகிரப்பட்டது.

கம்போடியாவில் இன்னும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நிலக்கண்ணி வெடி ஆபத்துகளுக்கு மத்தியில் வசித்து வரும் நிலையில், 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டை முழுமையாகப் பாதுகாப்பானதாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மகாவாவிற்கு வைக்கப்பட்ட இந்தச் சிலையானது, உயிர்களைக் காக்கப் போராடும் அத்தகைய சிறிய விலங்குகளின் அர்ப்பணிப்பை உலகிற்கு நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button