முச்சந்தி

இயற்கையின் படைப்பா?… கோவேறு கழுதை… கே.ஆர்.இரமேஷ்

இயற்கை உருவாக்கிய விலங்கினங்கள் கழுதையும், குதிரையும். மனிதனால் உருவாக்கப்பட்டது கோவேறு கழுதைகள். மனிதனால் செயற்கையாக படைக்கப்பட்டதால் தனது சந்ததிகளை பெருக்கி கொள்ள இயலாத நிலையில் உள்ளன இந்த வாயில்லா ஜீவன்கள். இயற்கையில் வேறுபாடடைந்த அதே வேளையில் நெருங்கிய தொடர்புடைய இரண்டு மாறுபட்ட இனங்களை இனச்சேர்க்கையில் ஈடுபடுத்தும்போது கலப்பினம் தோன்றுகிறது. இது மிகவும் அரிதாகவே தோன்றும். இக்கலப்பின உயிரினம் பொதுவாக மலட்டுத்தன்மை கொண்டிருக்கும்.. இயற்கை தேர்வு மற்றும் படிமலர்ச்சியின் போது நேரடியாக உருவாகாத இக்கோவேறு கழுதைகளை, மனிதன் தன் சுயநலத்திற்காக செயற்கையாக தோற்றுவித்தான்.

கோவேறு கழுதை என்பது என்ன?

What Is A Mule? 13 Things You Didn't Know | SPANA

ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறக்கும் குட்டி இந்த கோவேறுகழுதைகள். இது தகப்பனிடமிருந்து (ஆண் கழுதை) சிறிய குளம்பு, குறை முடியுடைய பிடரி, வாய், குரல், மனப்பக்குவம் ஆகிய பண்புகளையும், தாயிடமிருந்து (பெண் குதிரை) உடல் பருமன், வலிமை, பொதுத்தோற்றம் ஆகிய பண்புகளையும் பெற்றிருக்கும். ஆனால், தாய்-தந்தை இரண்டைக்–காட்டிலும் அதன் குட்டி குணநலனிலும் தகவமைப்பிலும் மேம்பட்டு காணப்படுகிறது.
உருவத்தில் பெரிதாக இருப்பதால் குதிரையைப் போல் வேகமாக ஓட முடிவதில்லை.

எனினும், உடல் வலிமையிலும், களைப்பையும், உடல் வலியையும் தாங்கிக்கொள்ளும் தன்மையிலும், நோய்எதிர்ப்பு ஆற்றல் மற்றும் மிக வெப்பமான சூழ்நிலையில் செயலாற்றும் திறனிலும் குதிரையை விட மிகுதியான ஆற்றலை பெற்றுள்ளது. அறிவாற்றலிலும் தன் பெற்றோரை மிஞ்சியுள்ளது. கரடு முரடான மலைப்பாதைகளில் கனமான பொருட்களை சுமந்து செல்வதில் கோவேறு கழுதைகளை விட சிறந்த “இயற்கை இயந்திரம்” எதுவும் இல்லை. இந்திய ராணுவம் உட்பட பல நாட்டு ராணுவங்கள் இன்றும் கடினமான எல்லைப் பகுதிகளில் தளவாடங்களை எடுத்துச் செல்ல இவற்றையே நம்பியுள்ளன. அவ்வாறு ஆபத்தான பாதைகளில் செல்லும்போது தனக்கு இடர் ஏற்படும் என உணர்ந்தால் எவ்வளவு வற்புறுத்தினாலும் கோவேறு கழுதை ஒரு அடி கூட எடுத்து வைக்காது என்பார்கள். இதுபோன்ற பிடிவாத குணமும், கடினமான வேலையில் அது காட்டும் ஈடுபாடும் கோவேறு கழுதையின் தனிசிறப்பு எனலாம்.

கலப்பின வீரியமே இதற்கெல்லாம் காரணமாகும்.

மலட்டுத்தன்மைக்கு காரணம்:

சாயலும் வித்தியாசமும்: குதிக்கும் கோவேறு கழுதை; குதிக்காத கழுதை!

ஆண் கோவேறுகழுதையின் விந்துதிரவத்தை ஆராய்ந்தபோது விந்து செல்கள் செயலற்றதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அதன் சந்ததிகளை உருவாக்கும் திறனை இழந்துவிடுகிறது.

குதிரை – கழுதைகளில் இனச்செல் உருவாக்கம்

குதிரையின் (இனப்பெருக்கசெல்கள் நீங்கலாக) உடலில் அனைத்து செல்களிலும் 60 குரோமோசோம்களும், கழுதையில் உடல் செல்லில் 66 குரோமோசோம்களும் காணப்படுகின்றன. ஆகையால் இனச்செல் உருவாக்கத்தின் போது (குரோமோசோம்களின் எண்ணிக்கை பாதியாக குறையும்) கழுதையின் விந்து செல்லில் 33 குரோமோசோம்களும், குதிரையின் அண்ட செல்லில் 30 குரோமோசோம்களும் இருக்கும். இவற்றின் சேர்க்கையால் உண்டான கோவேறு கழுதையின் உடல் செல்களில் 30+33= 63 குரோமோசோம்கள் இருக்கும்.
கோவேறு கழுதையில் இனச்செல் உருவாக்கம் : கோவேறு கழுதையின் உடல்
செல்களில் 63 குரோமோசோம்கள் இருக்கும்.

இனப்பெருக்க செல்களாக மாறும்போது, ஒரே அமைப்புடைய குரோமோசோம்கள் இரண்டிரண்டாக இணைய வேண்டும். கழுதையின் குரோமோசோமும் அதே வடிவமுடைய குதிரையின் குரோமோசோமும் இணையாக சேர வேண்டும். 30 குதிரை குரோமோசோம்களும் 30 கழுதை குரோமோசோம்களும் மட்டுமே இணை சேர முடியும். எஞ்சிய தனித்துவிடப்பட்ட மூன்று கழுதை குரோமோசங்களும் குன்றல் பகுப்பில் பங்கெடுக்க இயலாது.

திருத்தம் பொன்.சரவணன்: சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 3 - கழுதை

இதனால் ஆண் கோவேறு கழுதையின் விந்து செல்களோ, பெண் கோவேறு கழுதையின் அண்ட (முட்டை) செல்களோ சரிவர உருவாக முடிவதில்லை. இவ்வாறாக குதிரை குரோமோசோம்களும் கழுதை குரோமோசோம்களும் வேறுபட்ட எண்ணிக்கையில் ஜீன்களை கொண்டுள்ளமையால் குன்றல் பகுப்பு முற்றிலும் குறைபாடுடனே அமையும். இதுவே கோவேறு கழுதைகளில் மலட்டுத்தன்மைக்கு காரணமாகும். இதனால் மனிதன் செயற்கையாக தோற்றுவித்த கோவேறு கழுதைகள், அதன் சந்ததிகளை உருவாக்குவதற்கு இயற்கை அனுமதிப்பதில்லை.

கே.ஆர்.இரமேஷ்

(தமிழ்நாடு அரசின் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதாளர், முதுகலை விலங்கியல் ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர் புதுக்கோட்டை மாவட்டம், தொடர்புக்கு – 7397690390)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *