கவிதைகள்

“மனத்தில் இருத்துவோம் மலர்ந்திடும்  வாழ்வு” …. கவிதை …. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
      மெல்பேண் ….. அவுஸ்திரேலியா 


ஏழ்மை என்பது இழிவும் அல்ல
தாழ்மை என்பது தலை குனிவல்ல
பணிவு என்பது வெட்கமும் அல்ல
இவைகள் இணைந்தால்  அதுதான் உயர்வே
 
வாழ்வும் தாழ்வும் வாழ்வதில் அடங்கும்
வையம் வியக்க வாழ்ந்திட  வேண்டும்
வையம் வியக்க வாழ்ந்திட  நினைப்பார்
மனதைப் பக்குவம் ஆக்கிட  வேண்டும்
 
மனமோ கட்டுக்குள் அடங்க மறுக்கும்
மறுக்கும் மனத்தை  மடக்கிட வேண்டும்
மனத்தைக் கட்டுக்குள் வைத்திட  நினைப்பார்
வையம் போற்றும் வாழ்வினை வாழ்வார்
 
பட்டம் பதவி வாழ்க்கை அல்ல
பணமோ நகையோ வாழ்க்கை அல்ல
பண்பும் பணிவும் அடக்கமும் ஒடுக்கமும்
அமையும் வாழ்வே ஆனந்த வாழ்வு 
 
பதவி வரும்போது பணிவு வரவேண்டும்
துணிவும் வரவேண்டும் தொடர்ந்தும் வரவேண்டும்
இணைந்து வரும்வகையில் எல்லோரும் வாழ்ந்தால்
இவ்வுலக வாழ்வென்றும் இன்பமாய் இருக்கும் 
 
ஏழ்மையில் கூட  இன்பமாய் வாழலாம் 
தாழ்மையாய் இருந்தால் சகலதும் கிடைக்கும்
பணிவாய் இருந்தால் பலரும் விரும்புவார்
மனத்தில் இருத்துவோம் மலர்ந்திடும்  வாழ்வு  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *