இலக்கியச்சோலை

“மலையக சமூக அசைவியக்க புரிதலில் நாடக நேசர் எம். அரியநாயகம்.”… 80 வது அகவையில் – நட்புக்கும், புரிந்துணர்வுக்குமான குறிப்பு… அருணாசலம் லெட்சுமணன்

அமைப்பாளர், நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம்.

“ஒரு தேசிய இனத்தின் அடையாளத்தை அதன் மரபு சார்ந்த கலைகளின் வரலாறே நிர்ணையிக்கிறது. அதுவே மனித சமூகத்தின் வரலாறுமாகும்.” ‘உடல்’ அரங்கியல் இதழ் எம். அரியநாயகம்.

ஒரு தசாப்தத்தையும் கடந்த நட்பு. ஒரு முறை மாத்திரம் நேரில் சந்தித்த அனுபவம். பல முறை தொலைபேசி உரையாடல் அனுபவம். நட்பு தொடங்கிய காலம் முதல் இன்று வரையில் எனது சமூக, கலை, எழுத்துலக பங்கேற்பை மிகக் கூர்மையாக அவதானித்து நிற்கும் ஓர் அவதானிப்பாளராக என்னில் மெனுவல் பிள்ளை அரியநாயகம் செல்வாக்கு செலுத்துகிறார். அவ்வப் போது தட்டிக்கொடுக்கும், வழிப்படுத்தும், விமர்ச்சிக்கும், ஆராதிக்கும், சுட்டிக்காட்டும், வாழ்த்தும், ஏசும் பணியில் மிகச் சிறந்தவொரு அபிமானியாக என்னுள் எம். அரியநாயகம் தாக்கம் செலுத்துகிறார். “லட்சுமணன் உங்கள் எல்லா நடவடிக்கைகளையும் அவதானித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். தொடர்ந்து முன்னெடுங்கள். மலையகத்திற்கு உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு மிக அவசியம். கலை, இலக்கிய செயற்பாடுகள் ஊடாகத்தான் சமூக மாற்றத்தை சாத்தியப்படுத்தலாம்.” என தொலைபேசி உரையாடலின் போது எம். அரியநாயகம் அவர்கள் அடிக்கடி பேசும் வார்த்தைகளாகும். மனனம் செய்து வைத்திருந்தைப் போல் இயல்பாகவே அவர் மொழியும் வார்த்தைகள் அமையப்பெறும். எனது எழுத்துக்கள், செயற்பாடுகள் தொடர்பில், எம். அரியநாயகம் அவர்களின் அவதானம் என்னில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொலைத்தூரத்தில் இருந்து ஒருவர் தொலைபேசி தொடர்புடன் மாத்திரம் இருக்கும் நிலையில் அவ் அன்பரின் தூண்டுதலை மிக முன்மாதிரியாக உணர்கிறேன். கலையை உள்ளுர நேசிக்கும் உண்மைக் கலைஞன் ஒருவரால்தான் மற்றொருவரில் இவ் வகையில் தாக்கம் செலுத்த முடியும் என்பதற்கு எம். அரியநாயகம் அவர்கள் உதாரணமாகத் திகழ்கிறார். இவ்வாறான உதாரண புருசருடனான நட்பின் தடயங்களை பதிவு செய்வதன் ஊடாக மலையக சமூக அசைவியக்கத்தின் சில பக்கங்களை மீட்டிப்பார்க்கும் சந்தர்ப்பமாக அமையும் என்பது தின்னமாகும்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பிள்ளைநாயகம் திருநாவுக்கரசு தொழில் நிமித்தமாக அறுபதுகளில் மலையகத்திற்கு பிரவேசித்தவர். நாவலப்பிட்டி, வெஸ்ட்ஹோல் தோட்டத்தில் நீண்டகாலம் தனதும், தனது மனைவியின் தொழில் நிமித்தமாக வாழ்ந்தவர். பின்னர் நாவலப்பிட்டி நகர சபையின் எழுதுவினைஞர், தலைமை எழுதுவினைஞர் என்ற வகையில் ஓய்வுப் பெறும் வரையில் கடமையாற்றியவர். தான் வாழ்ந்த மண் மீது கொண்ட நேசிப்பின் காரணமாக இன்றும் நாவலப்பிட்டி மண்ணிலேயே வாழ்ந்து வருபவர். அறுபத்தைந்து வருடங்களுக்கு மேலாக மலையகததில் வாழ்வதை மிக திருப்தியோடும், உணர்வோடும் மதிப்பவராக திகழகிறார். நீண்ட நாட்களாக எனது குடும்பத்தாருடனும், எனது தந்தையுடன் நட்பினை பேணுபவராக திகழ்கிறார். மலையகத்தில் சமூக, சமய, கல்விப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுப்டுத்தி வருபவர். இப் பிரதேச செயற்பாட்டில் “மறுமலர்ச்சி மன்றம்” முன்மாதிரியான செயற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது. அம் மன்றத்தின் மிக முக்கிய செயற்பாட்டளராகவும் இவரை அடையாளம் காணலாம். அதற்கெல்லாம் மேலாக மிருதங்கங்க கலையில் சிறந்த விற்பன்னராக விளங்கும் அன்னார் கலாபூசனம் விருது பெற்ற சிரேஸ்ட கலைஞருமாவார்.

பல்த்துறை ஆளுமைமிக்க பி.திருநாவுக்கரசு அவர்கள், என்னிலும் மிகுந்த அக்கறை மிக்கவர். என்னை வாழ்த்துவதிலும், வழிப்படுத்துவதிலும் இவரிற்கும் நிறையவே பங்கு இருக்கிறது. எனது முன்நகர்வுகள் குறித்து மிகுந்த அக்கறைக் கொண்டவர். எனது சிறிய வயது தொடக்கமே எனது செயற்பாடுகளில் அக்கறைக் கொண்டவர். எனது தந்தையுடனும் குடும்பத்தாருடன் கொண்டிருந்த நட்பை அவ்வப்போது எடுத்துச் சொல்வார். எனது கலை, இலக்கிய, எழுத்துலக, சமூக வாழ்க்கை குறித்து அக்கறை செலுத்துவதோடு, தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பிலும் ஆலோசனைகளை முன் வைப்பவராக திகழ்பவர். இவரது அறிமுகப்படுத்தலின் பின்னரே எனக்கும் எம். அரியநாயகம் அவர்களுக்குமான தொடர்பு ஏற்பட்டது. 2014 வருடத்தில் பி.திருநாவுக்கரசு ஐயா பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த போது, ஊடகமொன்றின் நேர்காணலில் மலையகத்தின் முக்கிய கூத்தான காமன் கூத்து பற்றியும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இக் கேள்விக்கு காமன்கூத்து தொடர்பில் என்னால் எழுதப்பட்டிருந்த கட்டுரையை சுட்டிக்காட்டி பதிலளித்திருந்தார்.

பின்னர் கட்டுரை தொடர்பிலும் எனது தொடர்பிலும் எம். அரிநாயகம் அவர்கள், திருநாவுக்கரசு ஐயாவிடம் இருந்து மேலதிக தகவல்களை அறிந்துக்கொண்டுள்ளார். அதன் பின்னர் என்னுடன் தொடர்பு கொண்டு அக் கட்டுரையை மின்னஞ்சல் ஊடாக எம். அரியநாயகம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

“பன்முக நோக்கில் காமன் கூத்து – ஓர் ஆய்வு” எனும் தலைப்பிலான கட்டுரையே மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்பட்டதாகும். இக் கட்டுரை 2012ம் வருடம் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ் இலக்கிய மாநாடு – 2012 ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையாகும். காமன் கூத்து தொடர்பிலான எனது கவனம் சிறுவயது முதலே ஏற்பட்டது. சிறு வயதில் நாவலப்பிட்டி, மயிலாடி கிராமத்தில் இருந்த எனது தாத்தா, அம்மம்மாவின் வீட்டிற்கு செல்வோம். சனி,ஞாயிறு மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் அம்மம்மா வீட்டிலேயே நான் இருப்பதுண்டு. அக் காலங்களில் என்னையும் என் சகோதரியையும் காமன்கூத்து பார்ப்பதற்காக அம்மம்மா அழைத்து செல்வார். அம்மம்மாவின் பெயர் நல்லம்மா. எங்களுக்கு எப்போதும் நல்லதொரு அம்மாதான். நான்கு, ஐந்து வயதுகளிலேயே இவ்வாறு அழைத்து செல்வார். அப்படி செல்கின்ற போது தூக்கம் தவிர்த்த நேரங்களில் மாத்திரம் காமன்கூத்து காட்சிகளை பார்ப்பதுண்டு. தப்பிசை, தப்பிசைக்கு ஏற்ற ஆட்டம் எம்மை வெகுவாக கவர்ந்திருக்கும். அடி மனதில் காமன்கூத்து மீதான பிடிப்பு ஏற்படுவதற்கு இச் சந்தர்ப்பங்களும் முக்கிய காரணங்களாக அமைந்தன.

அம்மம்மா வீட்டிற்கு அருகில் எங்களுக்கு எங்கள் வயது நண்பர்கள் இருந்தார்கள். சசிப்புள்ள – செல்வகுமார் இருவரும் அக்காவும் தம்பியும். நாங்கள் அம்மம்மா வீட்டிற்கு சென்று விட்டால் எங்களோடு வந்து விளையாடுவதுதான் அவர்களின் வேலையாக இருக்கும். அப்படி நாங்கள் ஒன்றாக விளையாடும் போது பலாக்குலையில் கிரீடம் செய்து ரதியாக சசியும், மதனாக செல்வகுமாரும் எங்களுக்கு ஆடிக்காட்டுவார்கள். பாடலிசைப்பார்கள். அவர்கள் பாடிய “ரதியே ரதிக்கிளியே – ரதிக்கேத்த மன்மதனே” என்ற பாடல் இன்னமும் மனதில் நிலைத்திருக்கிறது. இருவரும் பாடிக்கொண்டே ஆடுவார்கள். அந் நினைவுகள் இன்னமும் மனதில் ஒடிக்கொண்டிருக்கின்றன. காமன்கூத்தில் எனக்கு ஒரு பிடிப்புணர்வு ஏற்படுவதற்கு இச் சம்பவங்களும் பிரதான காரணமாக அமைகிறது. மற்றுமொரு பாடசாலை வீடுமுறையில் தாத்தா வீட்டிற்கு சென்ற போது சசி வரவில்லை. ஏன் சசி வருவதில்லை என கேட்டபோது, “சசிபுளளதான் செத்து போயிரிச்சே – இனி வராது” அப்படி பதில் வந்தது. சிறுவயதில் சகோதரி சசியின் இழப்பு எனக்கும் எனது தங்கைக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அவ் இழப்பை தற்போது எண்ணினாலும் மனம் கனக்கிறது.

அதன் பின்னர் காமன்கூத்தை அவவப்போது எங்காவது பார்ப்பதுண்டு. அருகிலுள்ள தோட்டங்களில் இருந்து எங்கள் தோட்டத்திற்கு வரும் போது மாத்திரம் பார்ப்பதுண்டு. ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரியில் ஆசிரிய பயிலுனராக கல்வி கற்றபோது தமிழ்ச் சங்க செயற்பாடுகளில் “கூத்து அரங்கும்” கட்டாய செயற்பாடாக நிகழ்த்தினோம். காமன்கூத்தில் பரீட்சையமான நண்பர்கள் கூத்தை நிகழ்த்த அதில் நாமும் பங்கெடுத்துக் கொள்வோம். அதுபோலவே அருச்சுணன் தபசு, பொன்னர் சங்கர் ஆகிய கூத்துக்கள் தொடர்பிலான அறிமுகமும் பரீட்சயமும் ஏற்பட்டது. இந்திரனாக வேடம் தரித்த அனுபவமும் உள்ளது. மலையகத்தின் முக்கூத்துக்கள் தொடர்பில் கவனத்தை செலுத்த வேண்டும் என் ஆரவமும் ஏற்பட்டது. எனது தந்தையின் தந்தை பெருமாள் தாத்தா அருச்சுணன் தபசில் அருச்சுணனாக வேடமேற்பவர், என கேள்விப்பட்டிருக்கிறேன். நேரில் பார்த்தது கிடையாது. எனது தாயாரின் தந்தை மாணிக்கம் தாத்தா எங்களுக்கு சிறுவயது முதலே இராமாயணம், மகாபாரதம் உட்பட சித்தர் பாடல்களையும் அறிமுகம் செய்துள்ளார். புராண, இதிகாச கதைகளையும், ஏனைய கதைகளையும் அறியச் செய்ததில் எங்கள் தாத்தாவுக்கும் அம்மம்மாவுக்கும் நிறையவே பங்கு இருக்கிறது. இவையெல்லாம் கூத்துக்கள் தொடர்பில் நான் ஆர்வம் கொள்வதற்கு வழிவகுத்தன.

2010ம் கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு இடம்பெறுகிறது. இம் மாநாடு இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நாளில் ‘நாவலப்பிட்டி தமிழ்ச் சங்கம்’ உருவாகிறது. எனது அழைப்பின் பேரில் அங்கத்தவர்கள் பங்கேற்கிறார்கள். அன்று தொடக்கம் மாதாந்தம் பௌர்னமி தினங்களில் நாவலப்பிட்டி தமிழ்ச் சங்க ஒன்றுகூடல் இடம்பெறுவது வழமையாகி விட்டது. இம் மாநாட்டில் “மலையக மக்கள் கலை அரங்கு” கலைஞர்கள், கலைஞர் ஹெலன் தலைமையில் பங்கேற்கிறார்கள். காமன்கூத்தை அம் மாநாட்டு அரங்கில் அரங்கேற்றுகிறார்கள். தமிழ் உலகு “மலையகம்” தொடர்பில் கவனத்தை கூர்மையாக்குகிறது. இவ் வாய்ப்பின் பின்புலத்தில் செயற்பட்ட பேராசிரியர். க. சிவத்தம்பியின் பங்கேற்பு நன்றியுணர்வோடு மேற்கோள் காட்டப்பட்டது. ஹெலன் தலைமையிலான அணியினரை, நாவலப்பிட்டி தமிழ்ச் சங்க மாதாந்த நிகழ்வில் அழைத்து கௌரவப்படுத்துகிறோம். அம் மாநாட்டில் வெளியிடப்பட்ட காமன்கூத்து பிரதியாக்க நூல் கையில் கிடைக்கிறது. அந் நூலில் உள்ளடங்கியிருந்த பிரதியாக்கம், சு.முரளிதரன், வே.இராமர் ஆகியோரது கட்டுரைகள் காமன்கூத்து தொடர்பில் சரியான புரிதலையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.

2011ம் வருடம் பெபரவரி 01ம் திகதி மகன் புவிந்திரன் பிறக்கிறான். தொழில் நிமித்தம் கினிகத்தேனை அல்லித் தோட்டத்தில் மனைவியின் சகோதரன் வசிக்கின்றார். அவரது வீட்டில் தங்கி இருக்கிறோம். பெப்ரவரி 15ற்கு பின்னர் மாசி மாதம் தொடங்குகிறது. அருகிலுள்ள சீதாலெட்சுமி (பிளக்குவாட்டர்) தோட்டத்தில் இருந்து காமன்கூத்து ஊர்வலம் வருகிறார்கள். மைத்துனரின் வீட்டு முற்றத்திலும் தப்பிசை முழங்குகிறது. மதனும் ரதியும் தப்பிசைக்கு ஏற்றவாறு ஆடுகிறார்கள். காமன் மாஸ்டர்களான கோபால், மோகனதாஸ் ஆகியோரின் அனுமதியோடு மதன், ரதி மற்றும் தப்பிசைக் கலைஞர்களையும் புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்.

காமன் மாஸ்ட்டர்களிடம் இக் கூத்தை உங்கள் களத்திற்கு வந்து பதிவு செய்ய விரும்புகிறேன். உங்கள் உதவி தேவை> என கோரிக்கை விடுத்தேன். “தாராளமாக வாருங்கள் ஐயா” என பதிலளித்தார்கள். இக் காலக்கட்டத்தில் தினக்குரல் பத்திரிக்கையின் செய்தியாளராகவும் கடமையாற்றினேன். “தினக்குரல்” பத்திரிக்கையில் இணை வெளியீடாக “உதயசூரியன்” வெளிவரத் தொடங்கிய காலம். உதயசூரியன் இதழில் பொறுப்பாசிரியராக பாரதி இராமச்சந்திரன் இருந்தார். “காமன்கூத்தை தொடராக எழுதுகிறேன்” என கேட்டுக்கொண்ட போது தாராளமாக வாய்ப்பளித்தார்.

காமன்கூத்து இறுதிநாள் நிகழ்வு, உயிர் எழுப்புதல் போன்ற நிகழ்வுகளை நேரடியாக பார்த்தேன். காமன்கூத்து ஒழுங்கமைப்பு முறை, தயார்படுத்தும் செயற்பாடுகள், ஆடையலங்காரம், ஒப்பனை முறைகள் எனறவாறு கள நிலவரங்களை நேரடியாக அவதானிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புகைப்படங்களை எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகளும் கிடைத்தன. பாடல்களை காமன் வாத்தியார்கள் தந்துதவினார்கள். அவ்வாறே இம்புல்பிட்டி மேற்பிரிவு, பார்க்கேப்பல் நடுப்பிரிவு, கிறீன்வூட், இம்புல்பிட்டி கீழ்பிரிவு கலபொடை குவாட்டஸ் ஆகிய இடங்களில் இடம்பெற்ற காமன்கூத்துக்களை நேரடியாக சென்று தரிசித்தேன். இக் காலகட்டத்தில் காமன் வாத்தியார்களான கோபால், மோகனதாஸ், பாட்டையா, கலபொடை கோபால வாத்தியார், ஆகியோர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. இவ் அனுபவங்களைக் கொண்டு உதயசூரியன் இதழில் “காமன்கூத்து கலையறிவோம்” எனும் தலைப்பில் தொடர் ஆரம்பமாகியது. உதயசூரியன் இதழ் ஆசிரியர் குழுவினர் தகுந்த ஒத்துழைப்பை வழங்கினார்கள்.

ஒவ்வவொரு வாரமும் பொருத்தமான படங்களுடன் தொடர் பிரசுரமானது. தொடர்ந்து ஐம்பத்துரெண்டு வாரங்கள் பிரசுரமாகியது. இவ் அனுபவங்களுடன், காமன்கூத்துடன் தொடர்புபட்ட உசாத்துணை நூல்களையும் வாசிக்கின்றேன். இச் செயற்பாடுகளின் விளைவாக உருவானதே “பன்முக நோக்கில் காமன்கூத்து ஓர் ஆய்வு” எனும் தலைப்பிலான கட்டுரையாகும். இக் கட்டுரை 2012ம் வருடம் கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய சர்வதேச தமிழ் இலக்கிய மாநாட்டு ஆய்வரங்கில் முன்வைத்தேன். ஆய்வரங்கின் அவதானத்தைப் பெற்ற ஆய்வுக் கட்டுரையாக அமைந்தமை திருப்தியைத் தந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பரணிதரணின் “ஜீவநதி” இதழில் ‘பன்முக நோக்கில் காமன்கூத்து – ஓர் ஆய்வு” கட்டுரை வெளியாகியது. திருநாவுக்கரசு ஐயாவின் தூண்டுதலின் பெயரில் அரியநாயகம் ஐயாவிற்கும் கட்டுரையை அனுப்பி வைத்தேன். பின்னர் அக் கட்டுரை அரியநாயகம் ஐயாவின் ‘உடல்’ இதழில் பிரசவம் கண்டது. 2015ம் வருடம் முதல் காலாண்டு இதழிலும், இரண்டாம் காலாண்டு இதழிலும் தொடராக வெளிவந்தது. அரியநாயகம் ஐயா, இக் கட்டுரை தொடர்பில் தொடர்ந்து வாட்சப் ஊடாக சிலாகித்துப் பேசுவார். தொடர்ந்து எழுதுங்கள், என உற்சாக வார்த்தைகளை பேசுவார். இவ்வாறு உரையாடல் தொடரும் ஒரு சமயத்தில், 2016ம் வருடம் உலகத் தமிழ் நாடக விழாவை ஏற்பாடு செய்கிறோம். காமன்கூத்தையும் அரங்கேற்றுவதற்கு ஏற்பாட்டுக் குழுவினர் வலியுறுத்துகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும், என கோரிக்கை விடுத்தார். அவரது அன்பான கோரிக்கையை செவிமடுத்தவனாக அடுத்தக்கட்ட நகர்வில் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க விளைகிறோம்.

“சமூக விடுதலைக்கு வலிமைமிக்க ஊடகமான நாடகக் கலையை இளம் தலைமுறையினரிடம் கையளிப்போம்.” எனும் தொனிப்பொருளில் முதலாவது உலகத் தமிழ் நாடக விழா – 2016 நிகழ்வு தொடர்பான அறிவிப்பு ஊடகங்கள் ஊடாக மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகின்றது. பிரான்ஸ் தமிழர் கலை கலாசார ஒன்றியம், ஆர்ஜென்தெயில் தமிழர் இல்லம் இணைந்த நட்புடன் உடல் அரங்கியல் இதழ் நடத்தும் உலகத் தமிழ் அரங்கினையும் அரங்கியலாளர்களையும் ஒருங்கிணைக்கும், உலகத் தமிழ் நாடக விழா 2016 என சமூக ஊடகங்கள் பிரசாரங்களை முன்னெடுக்கின்றன. நிகழ்வின் பங்கேற்கும் வெவ்வேறு தேச கலைஞர்களின் புகைப்படங்களுடன் அவர்கள் பற்றிய குறிப்புக்களும் வெளியாகின்றன. பிரதம விருந்நினராக டாக்டர் நாசர் கலந்துக்கொள்வதான அறிவிப்பு இத்துறை ஆர்வலர்களின் எதிர்ப்பார்பை மேலும் தூண்டுவதாக அமைகிறது. இலங்கையில் இருந்து பேராசிரியர் மௌனகுரு தலைமையிலான அணியினரும், எனது தலைமையிலான நிகர் சமூக கலை இலக்கிய அரங்கத்தின் குழுவினரும் அழைக்கப்படுகிறோம்.

அவுஸ்த்ரேலியா இளைய பத்மநாதன், தமிழ்நாடு பேராசிரியர் – கலாநிதி கே.ரவீந்திரன், தமிழ்நாடு எஸ்.கருணா பிரசாத், லண்டன் கே.பாலேந்திரா, சுவிட்சுலாந்து என்டன் பொன்ராஜ், பிரான்ஸ் ஆனந்தன், பிரான்ஸ் வீ. கெங்கேஸ்வரன், நோர்வே கல்யாணி சிவஞானம், ஜேர்மனி இராதா சர்மா, சுவிஸ் ஸ்ரீ, பிரான்ஸ் தயாநிதி – குணபாலன், ஜேர்மனி தியாகராஜன், டென்மார்க் யோகராஜா, ஆகியோர்களின் தலைமையிலான அணியினர்களின் ஆற்றுகைகளும் முதலாது உலகத் தமிழ் நாடக விழா – 2016ல் அரங்கேற்றுவதற்காக திட்டம்மிடப்பட்டிருந்தது. நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பிலும் எமது குழுவின் பங்கேற்பு தொடர்பிலும் மிகுந்த அக்கறையை தொலைபேசி மூலமாக அரியநாயகம் அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். நிகழ்வில் நாம் பங்கேற்கும் ஒழுங்குகளுக்கு தேவையான ஆவணங்களையும் அவ்வப்போது அனுப்பி வைத்தார்கள்.

உலகத் தமிழ் நாடக விழா 2016ல் மலையகமும் முக்கிய அங்கமாக மதிப்பளிக்கப்பட்மை கவனத்திற்குரியதாகும். இந் நிகழ்வில் மலையகத்தின் தனித்துவ கலையாக விளங்கும் காமன்கூத்தை அரங்கேற்றும் முனைப்புடன் செயற்பட்டவர்களில் எம். அரியநாயகம் அவர்களுக்கு முக்கிய இடமுள்ளது. இந் நிலைமை, வாய்ப்பு என்பதற்கு அப்பால் மலையகத்தின் அரங்கியல் முயற்சிகளுக்கு மதிப்பளித்த பெருந்தன்மையாகவே நான் கருதுகிறேன். உலக தமிழ் நாடகங்களின் அரங்குகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் மலையகத்தையும் தவிர்த்துவிடக் கூடாது என்பதில் அரியநாயகம் ஐயாவிடம் இருந்த நல்லெண்ணம் முன்மாதிரியானது. செம்மொழி மாநாட்டில் காமன்கூத்தை அரங்கேற்றுவதற்கு பேராசிரியர் கா.சிவத்தம்பி மலையக கலையை உணர்ந்து செயற்பட்ட விதமும் திருப்திக்குரியதாக அமைகிறது. அவ்வாறே 1974ம் வருடம் இலங்கை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நிகழ்விலும் காமன்கூத்து அரங்கேற்றப்பட்டுள்ளது. இவ் அரங்கில் காமன்கூத்தை நெறியாள்கை செய்ததில் பொகவந்தலாவ, கொட்டியாகலை தங்கவேல் மாஸ்ட்டரின் பங்கேற்பு முக்கியத்துவம் பெறுகிறது. இம் முன்னெடுப்பு தொடர்பில் பொன் பிபாகரனின் பதிவுகள் குறிப்பிடத்தக்கதாகும். இவ் வாய்ப்பை வழங்கிய மாநாட்டு அமைப்புக் குழுவினர் நினைவுக் கூறப்பட வேண்டியவர்களாவார்கள்.

இலங்கையின் தமிழ் அரங்கு வரலாற்று எழுத்துக்கள் மீதான குறைபாடுகள் குறித்த கவனம் அண்மைய காலங்களாக கூர்மையடைந்து வருகின்றன. மலையக மக்களது அரங்கியல் முயற்சிகளும் உள்வாங்க்படுகின்ற நிலையிலேயே இலங்கையினுடைய அரங்கியல் வரலாற்றை முழுமைப்படுத்த முடியும். மலையக அரங்கியல் முயற்சிகளை உள்வாங்கப்படாத நிலையில், இலங்கையின் தமிழ் நாடக வரலாற்றை எழுதிய முயற்சிகள் கவலைக்குரியதாகும். அவ்வாறான வரலாறுகள் மலையகத்தை தவிர்த்து எழுதினோம் என்ற குறிப்புகளோடு வெளியாகியிருக்க வேண்டியது அவசியமாகும். பொதுவாக இலங்கையின் நாடக வரலாற்றை பதிவு செய்தவர்கள் மலையக நாடக முயற்சிகள் தொடர்பிலான விடயங்களை தவிர்த்தே பதிவு செய்து வந்துள்ளார்கள்.

அவ் விடயம் தொடர்பிலான விமர்சனத்தை முன்வைப்பதில் புதிய பண்பாட்டு அமைப்பினதும் செயற்பாடுகளும் பொன் பிரபாகரனின் முன்வைப்புகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும். இதன் தொடர்ச்சி நிலையில் தேசிய அரங்கியல் நிகழ்வுகளில் மலையக கூத்துநிகழ்வுகளும் உள்வாங்கப்பட்டமை கவனத்திற்குரியதாகும். அத்துடன் க.பொ.த உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலும் பாடம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.; பொகவந்தலாவ ஹொலிரோசரி கல்லூரி உட்பட்ட மலையக பாடசாலைகளில் நாடகமும் அரங்கியலும் பாடம் உள்வாங்கப்படுகிறது. அதன் பின்னர் இத்துறை சார் கற்கை நெறிகளில் மலையக மாணவர்களும் உயர்கல்வியை தொடர்கிறார்கள். அரங்கியல் தொடர்பான அவதானத்தில் மலையக அரங்கியல் செயற்பாடுகளும் கவனத்தை பெறுகின்றன.

2016ம் வருடம் நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம் முதலாவது உலகத் தமிழ் நாடக விழாவில் விசா அனுமதி மறுப்பின் காரணமாக பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. இருந்த போதிலும் காமன்கூத்து தொடர்பிலும் மலையக அரங்கியல் செயற்பாடுகள் தொடர்பான கவனத்தை எற்படுத்திய நிகழ்வாகவே அமைந்தது. உலகத் தமிழ் நாடக விழாவையொட்டி நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம் “நிகர்” சிறப்பிதழை வெளியிட்டிந்தது. இவ் இதழ் மலையக அரங்கியல் வரலாற்றில் சில முக்கிய பக்கங்களை பதிவு செய்ததாக அமைந்திருந்தது.

இவ் இதழில் மலையக அரங்கியல் செயற்பாட்டாளர் சிவ இராஜேந்திரனின் நேர்காணல் உட்பட அரங்கியல்துறை ஆர்வலர்களான சு.இராஜசேகரன், மல்லிகை சி.குமார், சு.முரளிதரன், லெனின் மதிவானம், ஜெ.சற்குருநாதன், வே.இராமர், பெ.விஜயகோபால், அ.லெட்சுமணன் ஆகியோர்களது இத்துறை தரவுகள் பதிவுகளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவ் ஆவணப்படுத்தல் முயற்சியிலும் வெளியீட்டு முயற்கியிலும் அரியநாயகம் ஐயாவின் தூண்டுதல் பெரிதும் துணை நின்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவ் வெளியீட்டு முயற்சியோடும் ஆற்றுகைப்படுத்துவதற்கு தயாரான குழுவில் அங்கத்துவம் வகித்த அ.லெட்சுமணன், வே.இராமர், அமரர் ந.சாம்பசிவமூர்த்தி, போ.ரமேஸ், பெ.விஜயகோபால், வே.தினகரன், ரா.விஸ்ணுகுமார், அ.ரொபட் ஜோன் ஆகியேரது பங்கேற்பும் கவனத்திற்குரியதாகும்.

இலங்கையினுடைய தமிழ் நாடக வரலாற்றில் கோ.நடேசய்யரது பங்கேற்பு மிக முக்கியத்துவம் பெறுகிறது. 1920களின் இறுதியில் “தொழிலலாளர்களின் அந்திரப்பிழைப்பு” நாடக நூல் வெளியாகிறது. இலங்கையின் நாடகத்துறைக்கும், இலங்கையின் தமழ் கவிதைத்துறைக்கும், வீதிப்பாடல் இலக்கியத்திற்கும் முக்கிய செய்தியை வெளிப்படுத்துவதாக இந்நூல் அமைகிறது. இந் நூலை சென்னை ரோஜா முத்தையா நூலகம் ஆவணப்படுத்தியிருந்தது. அதன் பிரதியொன்றினை பெற்று, அந்தனி ஜீவா ஆவணப்படுத்தி வைத்திருந்தார். இந் நூலை மீள பதிப்பித்து முதலாவது உலகத் தமிழ் நாடக விழாவில் வெளியிடுவோம் என்ற யோசனையை நானும் நணபர் வே.இராமரும் முன் வைத்தோம். அதற்கமைய இவ் அரங்கில் வெளியிடும் நோக்கம் கருதி இந் நூலை மீள்பதிப்பு செய்யும் முயற்சியில் அந்தனி ஜீவா இறங்கினார்.

அதற்கு எம்மால் ஆன பங்களிப்பினையும் வழங்கினோம். வீசா அனுமதி மறுப்பின் காரணமாக எமது பயணம் தடைப்பட்ட நிலையில் முதலாவது உலகத் தமிழ் நாடக விழாவில் வெளியிட முடியாமல் போனது. இருந்த போதிலும் இந் நூல் 2017ம் வருடம் திணடுக்கல், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற “இலங்கை மலையகத் தமிழ் இலக்கியம் – பன்னாட்டு கருத்தரங்கம் – 2017” நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் தெளிவத்தை ஜோசப் தலைமையில் நான் உடபட மு.சிவலிங்கம், அந்தனி ஜீவா, மல்லியப்பூ சந்தி திலகர், வே.இராமர், பதுளை சேனாதிராஜா, ஜீவா சதாசிவம் ஆகியோர் பங்கேற்றோம். இந் நிகழ்வு ஏற்பாட்டில் மாத்தளை சோமுவின் வகிபங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிலையில் இந் நூல் வெளிவருவதில் அரியநாயகம் ஐயாவின் தூண்டுதலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

அரியநாயகம் ஐயா அவர்களுடனான தொலைபேசி உரையாடல்கள் தந்த தூண்டுதல்கள் மலையக நாடக வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது. “மலையக நாடக வரலாறு” தொடர்பில் எனது தேடல் முயற்சியினை தொடங்கினேன். 2017ம் வருடம் கொட்டகலையில் இடம்பெற்ற “47வது இலக்கிய சந்திப்பு” நிகழ்வில் கலாநிதி சி.ஜெயசங்கர் தலைமையில் இடம்பெற்ற ஆய்வரங்கில் “மலையக அரங்கியல் முன்னெடுப்புகள்” எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினேன். 2017ம் வருடம் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் நடத்திய இலங்கை மலையகத் தமிழ் இலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கில் “மலையக நாடக முன்னெடுப்புகள்” தொடர்பில் ஆய்வுரையாற்றினேன்.

மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் நடத்திய மலையக இலக்கியம் ஆய்வரங்கம் நிகழ்விலும் ஆய்வுரை நிகழ்த்தும் வாய்ப்பு கிட்டியது. இங்கு “மலையக சமூக அசைவியக்கத்தில் நாடக முயற்சிகளின் வகிபங்கு” தொடர்பில் உரையாற்றினேன். இவ் அரங்கில் எனது உரையை எதிபார்த்து பலர் காத்திருந்தார்கள். அவ் அன்பர்கள் அரியநாயகம் ஐயாவின் வேண்டுகோளை ஏற்று இவ் அரங்கிற்கு வருகைத் தந்திருந்தார்கள். உடல் இதழில் ஆக்கங்களை எழுதியதால் கிடைத்த அறிமுகமாக இருந்தது. பலர் எனது உரையின் பின்னர் என்னோடு வந்து உரையாற்றினார்கள். எனது தொடர்பிலும், மலையக சமூகம் தொடர்பிலும் அவர்களுக்கு அரியநாயகம் ஐயா நல்லதொரு புரிதலை ஏற்படுத்தியிருந்தார், என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுள் மக்கள் கலைஞர் கே.ஏ.குணசேகரனது சகோதரர் பேராசிரியர் எட்வின்ராஜ் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்.

இவ் உரைகளை தயார் செய்யும் ஆர்வத்திற்கு அரியநாயகம் ஐயாவின் தூண்டுதலும் துணை நின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த அரங்குகளில் முன்வைக்கப்பட்ட ஆய்வுரைகளின் உள்ளடக்கங்களை இணைத்த வகையில் என்னால் எழுதப்பட்ட கட்டுரையை அனுப்பி வைக்குமாறு அரியநாயகம் ஐயா கேட்டுக்கெண்டார். அதற்கமைய அக் கட்டுரையை அவருக்கு அனுப்பி வைத்தேன். தனது “உடல்” இதழில் பிரசுரித்தார். இக் கட்டுரை மலையக அரங்கியல் தொடர்பான பல ஆவணங்களையும் புதிய தகவல்களையும் கொண்டடைந்துள்ளதாக பாராட்டினார். பல நாடுகளிலுள்ள வாசகர்களுக்கு எடுத்துச் சென்று எனது எழுத்தை அறிமுகம் செய்யும் பணியில் அன்னாரின பங்கேற்பு முக்கியத்துவம் பெறுகிறது.

அத்துடன் மலையக நாடகத்துறை பங்கேற்பு குறித்து உலக வாசகர்கள், ஆய்வாளர்கள் அறிந்துக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தும் அவரது பணி நன்றிக்குரியதாகும். அவ்வாறே மலையக மக்களின் பிரச்சினைகள் பற்றி சிங்களத்தில் நாடகம் ஒன்று மேடையேற்றப்பட்டது. பராக்கிரம நிரியெல்லவின் நெறியாள்கையில் “தித்த கஹட்ட” (கருஞ்சாயம்) தலைப்பிலான நாடகம் தலைநகரில் 2018ல் மேடையேற்றப்பட்டது. அந் நாடகம் தொடர்பில் எனது பார்வையில் குறிப்பு ஒன்றினை அரியநாயகம் ஐயா எழுத பணித்தார்கள். அவரது வேண்டுகோளை ஏற்று எழுதிய ஆக்கத்தினை “உடல்” இதழில் பிரசுரித்து மகிழ்ந்தார். இவ் ஆக்கத்தில் குறிப்பிடப்பட்ட நாடகம் தொடர்பான பதிவுகளில் இருந்த வசனங்களை இக் குழுவினர் பிரயோகித்தார்கள். இந் நாடகத்தை அடுத்த அடுத்த அரங்குகளில் காட்சிப்படுத்துவதற்கான அறிவிப்பு விளம்பரங்களில் இவ் வாசகங்களை பிரயோகித்தார்கள்.

எம். அரியநாயகத்தின் நாடக அறுவடைகள் 2004 - நூலகம்மலையக நாடகத்துறை முன்னெடுப்புகள் தொடர்பில் அதீத ஈடுபாட்டிற்கான தூண்டுதல் என்னில் அரியநாயகம் ஐயா அவர்களுடனான தொடர்பும் பெரிதும் தூண்டுதலாக அமைந்தது. அதன் விளைவாக எழுதிய எழுத்துக்களும் உரைகளும் இத் துறை ஆய்வாளர்களிடையே பெரிதும் தெளிவை எற்படுத்தியது. இவ் எழுத்துக்கள், உரைகள் என்பன இலங்கையின் தமிழ் நாடக வரலாற்றை திருத்தி எழுத வேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளது. பேராசிரியர் சு.வித்தியானந்தனை முதன்மை படுத்தும் நிலையில் இருந்து தேசபக்தன் கோ.நடேசய்யரை அவ் இடத்தில் வைத்து பார்க்கும் போக்கு எழுந்துள்ளது. தமிழ் நாடகங்களுக்கு மடடுமல்லாது சிங்கள நாடக முயற்சிகளுக்கும் முன்மாதிரியானதாக மலையக நாடக முயற்சிகள் அமைந்துள்தை நிறுவும் வகையிலான எனது ஆய்வுத்தரவுகள் குறித்து திருப்தியடைகிறேன்.

கொரோணா காலம் உலக நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க செய்தமை தொடர்பில் அறிவோம். இதில் கலை இலக்கிய செயற்பாடுகளும் பெரிதும் தடைப்பட்டன. இரண்டாயிரத்து இருபத்திரெண்டாம் வருடம் இறுதியில் கொரோணாவின் பிடியிலிருந்து ஓரளவு தளரும் நிலை ஏற்பட்டது. 2023ம் வருடம் இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு புலம்பெயர்ந்து 200 வருடத்தை பூர்த்தி செய்யும் வருடமாக அமைந்திருந்தது. மலையக 200 தொடர்பிலான கவனம் சமூகத்திடையே வெகுவான கவனத்தை பெற தொடங்கியது. இக் கவனத்தை ஏற்படுத்தும் முனைப்பில் கோ.நடேசய்யர் தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டவர் என்ற வகையில் தஞ்சைப் பல்கலைக்கழகம், “மலையகம் 200 – ஆய்வரங்கம்” நிகழ்வினை ஏற்பாடு செய்தது. இந் நிகழ்வில் கோ.நடேசய்யர் தொடர்பிலான கவனத்தை ஏற்படுத்தும் முனைப்பும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டிருந்தன. ஆயவரங்கில் பங்கேற்பதற்கு ஆய்வாளர்களும் தயாராக இருந்த நிலையில், இந் நிகழ்வு பல காரணங்களினால் தவிர்க்கப்பட்டமை கவனத்திற்குரியதாகும். இவ் ஆய்வரங்கில் முன்வைப்பதற்காக “தோட்டத் தொழிலாளர்களின் அத்திரப்பிழைப்பு நாடக பிரதியாக்கமும் மலையக நாடக முயற்சிகளும்” எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை தயார் செய்திருந்தேன். இவ்வாறு பலரும் மலையக சமூகம் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை தயார் செய்த நிலையில், இவ் ஆய்வரங்க முயற்சியை இடைநிறுத்தியமை கவலைக்குரியதாகும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு வரிசையில் மலேசியாவில் இடம்பெற்ற 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் மலையக நாடகத்துறை தொடர்பிலான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இருந்து பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் தலைமையில் பங்கேற்ற அணியில் நானும் பங்கேற்றேன். உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை பொருத்த மட்டில் மலையக்கவராக முதன் முதலாக பங்கேற்றவன் என்ற வகையில் திருப்தியை உணர்கிறேன். இவ் அரங்கிலும் “அறுபதுகளுக்கு பின்னரான மலையக நாடக முன்னெடுப்புகள்” எனும் தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை முன் வைத்தேன்.

செப்டெம்பர் 15 2023ல் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மலையகம் 200 முன்னிறுத்தி ஆய்வரங்கம் ஒனறினை ஏற்பாடு செய்திருந்தது. அவ் ஆய்வரங்கில் “மலையக நாடக முயற்சிகள்” எனும் தலைப்பில் உரையாற்றினேன். அவ் அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் கலாசார அமைச்சின் வெளியீடான இலக்கியம் இதழில் பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தனால் தொகுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டது. இம் மலரில் எனது கட்டுரையும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறே தாய்வீடு இதழ் மலையகம் 200ஐ முன்நிறுத்தி “மலையமாருதம் – 200” எனும் தலைப்பில் சிறப்பிதழை வெளியிட்டது. மலையக ஆளுமைகளின் பல கட்டுரைகளோடு எனது “தொழிலாளர்களின் அந்திரபிழைப்பு நாடக பிரதியாக்கமும் மலையக நாடக முயற்சிகளும்” எனும் தலைப்பிலான எனது கட்டுரையும் வெளிவந்துள்ளது. அதன் தொடர்ச்சி நிலையில் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் முன்வைத்த “அறுபதுகளின் பின்னரான மலையக நாடகத்துறை முன்னெடுப்புகள்” எனும் கட்டுரையும் தாய்வீடு (ஒக்டோபர் -2024) இதழில் வெளிவந்தது.

அரியநாயகம் அவர்களுடனான தொடர் கலந்துரையாடுதலும் தூண்டுதலும் ஏனைய மலையக கூத்துக்கள் தொடர்பிலான ஈடுபாடும் என்னில் ஏற்பட்டது. அவற்றுள் பொன்னர் சங்கர், அருச்சிணன் தபசு மீதான ஈடுபாடும் குறிப்பிடத்தக்கதாகும். பொன்னர் சங்கர் கூத்து தொடர்பிலான அவதானம் முக்கியத்துவம் பெறுகிறது. அக்கூத்து தொடர்பிலான ஆய்வு குறித்த ஈடுபாடு அதிகரிக்கிறது. அவ் விடயம் தொடர்பிலான தேடலில் பல்வேறு அறிமுகங்கள் வாய்ப்பாகிறது. பொன்னர் சங்கர் கதையம்சத்தை பலர் ஆய்வு செய்துள்ளார்கள். அவர்களுள் கனடிய பேராசிரியர் பிறேண்டா பெக் மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறார். அவருடனான நட்பு, இணைந்த கள விஜயம் போன்றன இக் கூத்து தொடர்பிலான விடயங்களை ஆவணப்படுத்துவதற்கும் ஆய்வுக்குட்படுத்துவதற்கும் வாய்ப்பாக அமைந்தது எனலாம். அதன் தூண்டுதலில் “பொன்னர் சங்கர் – மரபும் மாற்றமும்” எனும் தலைப்பிலான எனது ஆய்வு முயற்சிக்கு வாய்ப்பாக அமைந்தது எனலாம். அவ்வாறே சமூக நாடகங்கள் மீதான ஈடுபாட்டிற்கும், தேடலுக்கும் அவைகள் தொடர்பிலான வாசிப்பிற்கும் அரியநாயகம் ஐயா அவர்களுடனான உரையாடல் வழி சமைத்திருக்கிறது.

இந் நிலையில் மலையகம் 200 தொடர்பில் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. அவற்றுள் சில கொண்டாட்டங்களாகவும் சில அனுஸ்டிப்புகளாகவும் இடம்பெற்றன. அவற்றுள் கடல் கடந்த நாடுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளும் கவனத்திற்குரியவைகளாகும். மலையகம் -200 தொடர்பில் ஆவணங்களாக வெளிவந்த முத்திரைகள், நூல்கள் கவனத்தை பெறுகின்றன. மலையகம் 200 தொடர்பில் இலங்கை உடபட இந்தியாவும் தபால் முத்திரைகளை வெளியிட்டுள்ளன. அம் முத்திரைகள் அடிமைத்தனம் பொருந்திய தேயிலைத்துறையையும் கொழுந்துக்கிள்ளும் பெண்களையுடே டையாளப்படுத்துகினறன. மாறாக மலையகம் – 200 ஐ முன்னிறுத்தி நிகர் சமூக கலை இலக்கிய அரங்கமும் தனிப்பட்ட முத்திரையினை வெளியிட்டுள்ளது. இவ் அமைப்பு மலையக அரங்கியல் எண்ணக்கருவையும் உள்ளடக்கிய வகையில் தபால் திணைக்களத்தின் தனிப்பட்ட முத்திரைகளை வெள்ளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எம். அரியநாயகம் அவர்கள் என்னில் ஆதர்சனங்களை தரும் அபிமானியாக மனதில் இடம்பிடித்துள்ளார். எல்லோரையும் சமமாக மதிக்கும் முன்மாதிரி அவருள் சிறப்பம்சமாகிறது. அது போலவே அனைத்து சமூகத்தையும் மதிக்கும் பண்பிலும் அவரை முன்மாதிரியாகவே காண்கிறேன். பல நாடகவியலாளர்களை அறிமுகப்படுத்தும் பணியிலும் எனது எழுத்துக்களையும் உணர்வுகளையும் மதித்து எடுத்துச் செல்லும் பணிக்காகவும் அவருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஒரு கலைஞனாக ஓர் படைப்பாளியாக அவரில் பொதிந்திருக்கும் “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற கோட்பாடு மனிதத்துவத்தின் பேசுபொருளாக தெளிவுறுத்துகிறது. வேற்றுமைகளுக்கு அப்பால் அன்னாரில் பொதிந்துருக்கும், சகலலையும் மதிக்கும் மனப்பாங்கு முன்மாதிரியானது. “மலையக கூத்துக்களை கூத்துக்களே இல்லை” என வாதம் புரிந்தவர்கள் மத்தியில், காரை சுந்தரம்பிள்ளை அவர்களது பங்கேற்பு மிக முக்கியத்திற்குரியது. காரை சுந்தரம்பிள்ளை அவர்களில் அரியநாயகம் அவர்கள் கொண்டிருந்த நட்பும், மலையக கலைகள் மீதான புரிதலுக்கு வித்திட்டது எனலாம். நடிகமணி வைரமுத்துவின் அவதானத்தை பெற்றவர் என்ற வகையில் இவரது ஆசீர்வாதத்துடன், இத்துறையில் இவரது பரிமானம் மிகுந்த அவதானத்தை பெறுகிறது. தானும் ஓர் நடிகன், இயக்குனர் என்ற வகையிலும் அன்னாரின் வகிபங்கு குறித்த பார்வை விரிகிறது. தமிழ் அரங்ஙையும, தமழ் அரங்காளர்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் அப்பலுக்கற்ற மனப்பாங்குடன் இவரது முன்னெடுப்புகள் உலக அரங்கின் கவனத்தைப் பெறுகிறது எனலாம். உலக தமிழ் அரங்கியலாளர்களை அவர்களின் ஆளுமைகளை அறிந்து, ஆவணப்படுத்தும் முன்னெடுப்புகளும் ஓரணி திரட்டும் முன்னெடுப்புகளும் அரியநாயகம் அவர்களின்பால் நேச உறவுவை வலுப்படுத்துகிறது எனலாம் அறுபத்தைந்து வருட நாடகத்துறை வாழ்க்கையும், என்பதாவது பிறந்த தினமும் அரியநாயகம் அவர்களது அர்த்தமிக்க வாழ்க்கையின் மைல்கற்கலாக திகழ்கின்றன.

உசாத்துணை:

அந்தனி ஜீவா, (2017) இலங்கைத் தோட்ட தொழிலாளர்களின் அந்தரப் பிழைப்பு நாடகம், குமரன் புத்தக இல்லம்.

பிரசாந்தன் ஸ்ரீ, (2023) இலக்கியம் – விசேட மலர் 2023, அரச இலக்கிய ஆலோசனை குழு, கலாசார அலுவல்கள் திணைக்களம்.

3. ஆனந்தகுமார் பா, (2017) இலங்கை மலையக தமிழ் இலக்கியம். காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம்.

4. மௌனகுரு சி, (2007) நாடகம் – அரங்கியல் பழையதும் புதியதும், குமரன் புத்தக இல்லம்.
5. அரியநாயகம் எம். (2016) “உடல்” தமிழ் அரங்கு

6. லெட்சுமணன் அ. (2016) “நிகர்” சஞ்சிகை, நிகர் சமூக கலை இலக்கிய அரங்கம்.

7. டிலிப்குமார் ஜெ, (2023, 2024) “தாய்வீடு” சஞ்சிகை, தாய்வீடு பதிப்பகம்.

May be an image of one or more people and text

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *