இலக்கியச்சோலை

கனகர்கிராமம்: கிழக்குகரை வாழ்வியலின் நீள் வெட்டு முகம்…. அழகு குணசீலன்

கிழக்கிலங்கை மக்களின் தனித்துவ வாழ்வியலை படம் பிடித்துக்காட்டும் வகையில் கவிஞராக, கதை சொல்லியாக, கட்டுரையாளராகவும் , இவை அனைத்திற்கும் மேலாக கலை, கலாச்சார இலக்கிய களத்திலும், அரசியலிலும் முக்கிய செயற்பாட்டாளராகவும் – ஓயாத இயங்கு சக்தியாகவும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி செங்கதிரோன் கோபால கிருஷ்ணன். பல்துறை ஆற்றல் மிக்க அவரின் ‘கனகர்கிராமம்’ சமூக -பொருளாதார – வரலாற்று நாவல், 28. மார்ச். 2026 சனிக்கிழமை, நாவலின் பிரதான கதைக்களமான அன்றைய பொத்துவில் தொகுதியின் திருக்கோயில் கிராமத்தில் வெளியிடப்பட்டது.

‘கனகர்கிராமம்’ நாவல் பேசுகின்ற அரசியல் வரலாற்று அத்தியாயங்கள் ஸ்ரேட் கவுன்சில் முதல் இன்றைய பாராளுமன்ற அரசியல்வரை, கிழக்கு மாகாணத்தின் அரசியல் வளர்ச்சி போக்கு எப்படி இருந்தது, அது யாரால் தீர்மானிக்கப்பட்டது, அந்த தீர்மானம் எடுக்கும் சக்திகள் தங்கள் அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காக , எவ்வாறான சந்தர்ப்பங்களில் சொந்த இனத்தின் எதிர்காலத்தையும், சந்ததியினரையும், தீர்க்கதரிசனமும், தூரப்பார்வையும் அற்று விற்கும் வியாபார அரசியலை செய்திருக்கிறார்கள் என்பதை புட்டு புட்டு வைக்கிறது. அத்துடன் வியாபாரத்தையும், வியாபாரிகளையும் இனம் காட்டுகிறது.

இலங்கையில் பன்மைத்துவ சமூக வாழ்வியலை ஆய்வு செய்த வெளிநாட்டு சமூகவியல் ஆய்வாளர்களும், தொண்டர் நிறுவனங்களும் இரண்டு மாவட்டங்களை ‘வில்லங்கமானவையாக’ அடையாளப்படுத்தி இருக்கின்றனர். ஒன்று தெற்கு கரையில் மாத்தறை மாவட்டம், மற்றையது கிழக்கு கரையில் அம்பாறை மாவட்டம். இவை இரண்டும் இன, மத, கலாச்சார சமூக வாழ்வியல் முரண்பாடுகளை கொண்ட மாவட்டங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த முரண்பாடு காணியுரிமை, பொருளாதாரம், கல்வி, நிர்வாகம்….. அனைத்திலும் பிரதிபலிக்கிறது. முஸ்லிம்களின் பூர்வீக கிராமம் கல்முனைக்குடியா? கல்முனையா? என்ற விவாதத்தில் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு அரசியல்வாதிகளில் ஒருவரை பாராளுமன்றத்திற்கு வெளியே தள்ளவும், மற்றவரை பாராளுமன்றத்திற்கு உள்ளே தள்ளவும் தமிழர் எதிர்ப்பு அரசியல் வழி சமைத்திருக்கிறது. “உங்களுக்கு வடக்கு, எங்களுக்கு கிழக்கு” என்று தங்களுக்கு தாங்களே ஆட்சி உறுதி எழுதும் அளவுக்கு இங்கு இன, மத வாதம் , சமூக முரண்பாடு பூதாகரமாகி இருக்கிறது “. இந்த பிரதேசத்தில் சமூகங்களின் பூர்வீக குடியிருப்புக்கள் பற்றி கனகர் கிராமம் நாவல் ஆசிரியர் இந்த நாவலில் மட்டும் அல்ல வேறுபல வரலாற்று கட்டுரைகளையும் படைத்துள்ளார்.

இலங்கையின் சமூக பண்பாட்டு வரலாறு: இலங்கையின் சமூக வரலாறு பற்றிய நூல்களின் அறிமுகமும் விமர்சனமும் என்பது க.கணேசலிங்கம் தொகுத்துள்ள நூல். இதில் உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்களின் கட்டுரைகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருப்பதும், ஆய்வு முடிவுகள் மேற்கோள் காட்டப்பட்டிருப்பதும் முக்கியமானது. இதில் அம்பாறை மாவட்டம் குறிப்பாக தெற்கே பாணமைமையின் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாணமையில் வாழும் தமிழ் சமூகம் 50:50 என்று அடையாளப் படுத்தப்படுகிறது. அவர்கள் தங்கள் தனித்துவ அடையாளங்களில் 50 வீதத்தை தொலைத்து 50 வீதத்தை தக்கவைக்க தற்போது போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் தனித்துவம் 50 வீதம் கரைந்து விட்டது. இந்தக் கலப்பு விகிதாசாரம் தொடர்ந்தும் இருக்கப்போவதில்லை , இலங்கையின் மேற்குகரை போன்று பெரும்பான்மைக்குள் விழுங்கப்பட்டுவிடும். இதுதான் சமகால இடதுசாரிகள்(?) பேசுகின்ற “இலங்கையராதல் மாடல்” இந்த ஆபத்தான போக்கை கனகர் கிராமம் வரலாற்று ஆதாரங்களுடன் வாசகர்களுக்கு முன்வைப்பதன் மூலம் சுய சிந்தனையை தூக்கிவிடுகிறது. இந்தப்போக்கு சமூக இணக்கம், நல்லெண்ணம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை கொண்ட – நெகிழ்சித்தன்மை கொண்ட சமூகத்தை இலகுவாக விழுங்கி விடுகிறது. மாறாக இன, மத அடிப்படை வாதம் வேருன்றி அதனால் வழிநடாத்தப்படும் சமூகத்தை குறிப்பிட்டளவுக்கு பாதுகாக்கிறது.

கனகர்கிராமம்: கிழக்குகரை வாழ்வியலின் நீள் வெட்டு முகம்..!-பகுதி 3             (மூன்றாவது கண்: XIII)

கிழக்கு மாகாணத்தின் பன்மைத்துவ சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் மேம்பாட்டு அணுகுமுறை என்பது சுவாமி விபுலானந்தர் அணுகுமுறை. விபுலானந்தரின் கோட்பாடுகளை தவிர்த்து பயணிக்கும் எந்த சமூகவியல் பயணமும் அதன் இலக்கை அடையவில்லை என்பதை பல சந்தர்ப்பங்கள் நிரூபித்துள்ளன. கிழக்கில் வேறுபாடுகளற்ற இன, மத நல்லுறவையும் , சமூக வாழ்வியலையும் அதனூடான கல்வி, கலாச்சார, பண்பாட்டு வாழ்வியலையும் கொண்ட ஒரு அபிவிருத்தி மாதிரியை சுவாமி விபுலாநந்தரின் அணுகுமுறையில் காணமுடியும். கிழக்கின் அன்றைய அரசியல் தலைமைகள் பலவும் இராமக்கிருஷ்ணமிஷனின் அத்திவாரத்தில் வளர்ந்தவர்கள். இது போன்ற பல சந்தர்ப்பங்களை கனகர்கிராமம் நாவல் பேசுகிறது.

அண்மையில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாவலின் கதைக்களத்தை சேர்ந்த ஒரு சகோதரர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரது தந்தை தனக்கு அடிக்கடி கூறிய ஒரு விடயத்தை அவர் நினைவு கூர்ந்தார். “சுவாமி விபுலாநந்தருக்கும் நல்லையா மாஸ்டருக்கும் மிக நெருக்கமான உறவு இருந்ததாகவும், ஒரு அரசியல்வாதியாக நல்லையா மாஸ்டரின் அபிவிருத்தி பணிகளுக்கு பின்னால் விபுலாநந்தரின் வழிநடத்தல், தாக்கம் இருந்ததாகவும் கூறினார்.”

இன்று வரலாறு பேசுகின்ற வடக்கு முன்னோடிகள்(?) வளாவிருந்தபோது வடக்கிலும் சாதியத்திற்கு எதிராக போராடியவர் சுவாமி விபுலானந்தர். சாதியத்தை பூவும், தண்ணியும், பூ நூலும் போட்டு பூசை செய்தவர்களுக்கு விபுலாநந்தரின் மாற்று அணுகுமுறையும், மாற்றுக்கருத்தும் நிச்சயமாக துரோகத்தனமாகவே இருந்திருக்கும். ஆக, சுவாமி விபுலாநந்தரின் அணுகுமுறையில் கிழக்கிற்கான அரசியலை தேர்ந்தெடுத்த நல்லையா மாஸ்டரை ‘துரோகி’ என்று அழைப்பதற்கு அதிக காலம் தேவைப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. நல்லையா மாஸ்டரைப்பற்றி தனது நாவலில் குறிப்பிடும் செங்கதிரோன், அன்றைய கல்வி அமைச்சர் கன்னங்கரா காலத்தில் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் அமைக்கபப்பட்டதை மட்டும் பேசவில்லை. இலங்கையின் அன்றைய அரசாங்கத்தின் கல்விக்கொள்கையையும் பேசுகிறார். இவ்வாறு கதை சொல்ல கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வரலாற்று தகவல்களை தருவதற்கு கதாசிரியர் முயலும் யுக்தி தனித்துவமானது. இதன் மூலம் இதுவரை பேசப்படாத கிழக்கின் வரலாறு பேசப்படுகிறது, விவாதிக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது முழுமை பெறுகிறது.

செங்கதிரோன் தனது அரசியல் கட்டுரைகள் பலவற்றில் “கட்டகாமத்துக் கிழவி கதிர்காமம் பார்க்காமல் செத்த கதையை” பல முறை எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள சங்கமாங்கண்டி, கட்டகாமம், செல்லக்கதிர்காமம், நேர்த்தி வைத்து கல் ஏற்றுதல், நேர்த்தி நிறைவேறிய பின்னர் கல் இறக்குதல் … உள்ளிட்ட பல மானிடவியல் நம்பிக்கைகளை கனகர்கிராமம் நாவல் பேசுகிறது. விஷக்கல்- பாம்புக்கடி வைத்தியம் அறிமுகம் செய்யப்படுகிறது. இயற்கை காடும், காடு சார்ந்த இயற்கையும், இடையே மலையும் மலை சார்ந்த இயற்கையும் பேசப்படுவதுபோல் ஆரம்பத்தில் நாவல் கடலும் கடல் சார்ந்த, மற்றும் வயலும் வயல் சார்ந்த இயற்கையை பேசி கிழக்கின் நானிலங்களின் செழிப்பை வெளிப்படுத்துகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இவை இன்று உரத்து ஒலிக்கின்ற விடயங்கள். வாசிக்கும் போது அறுகம்பையின் இன்றைய காட்சி மனதில் பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் : அன்றைய சம்மான் துறை, இன்றைய புளியந்தீவு கேந்திரம் காலப்போக்கில் மட்டக்களப்பின் தென்பகுதி பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்ட கதையை நாவல் பேசுகிறது. அரசாங்க நிர்வாக பிரிவுகளுக்கான எல்லை நிர்ணயம் மாறிவரும் சமூக, பொருளாதார, அரசியல் சூழலுக்கு எதிராக நெகிழ்ச்சியற்றதாக இருக்கவேண்டும் என்பதல்ல. ஆனால் அந்த எல்லை நிர்ணயமும், புதிய நிர்வாகப் பிரிவுகளின் உருவாக்கமும் அரசியல் நேர்மையுடன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

டட்லி சேனநாயக்காவும், ஜீ.ஜீ.பொன்னம்பலமும் தலைக்கவசங்களை அணிந்து கொண்டு கல்லோயா – சேனநாயக்க சமுத்திரப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் காட்சிகளை வாசகர்கள் பார்த்திருப்பீர்கள். சிங்கள குடியேற்றத் திட்டங்களை தடுத்து நிறுத்துவதை கடந்த 75 ஆண்டுகளாக கட்சிக் கொள்கையாக கொட்டை எழுத்தில் எழுதி வைத்துள்ள தமிழரசுக்கட்சியும், தமிழ்த்தேசியவாதிகளும் இது விடயத்தில் சாதிக்கவில்லை. மாறாக தமிழ்மக்களின் வாழ்வியலை பாதித்து இருக்கிறார்கள் என்பதை நாவல் பேசுகிறது. இன்று இன்னொரு எல்லை நிர்ணயத்திற்குள் அதிகார பரவலாக்கம் சிக்க வைக்கப்பட்டுள்ளது. மாகாணசபை ‘புறாவை’ சிக்கவைத்தவர்களே சிக்கை அறுக்க பாராளுமன்றத்திற்குள் ‘எலியை’ தேடுகிறார்கள்.

சிங்கள மக்களின் குடியேற்றத்தை எதிர்த்து, அம்பாறை என்ற ஒரு மாவட்டம் உருவாக்கப்பட தமிழரசுக்கட்சி எப்படி துணைபோனது என்பது நாவலில் ஆதாரத்துடன் நிறுவப்படுகிறது. இந்த கல்லோயா பறிபோன கதையின் மூலம் இலங்கையின் இனத்துவ அரசியலின் மூலத்தை தேடமுடியும் . மட்டக்களப்பு/ அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயத்தில், பட்டிருப்பு தொகுதி எல்லை நிர்ணயித்தல் தனது சாதிய தமிழரசு அரசியலை தக்க வைக்க எஸ்.எம். இராசமாணிக்கம், காரியப்பருடன் இணைந்து தமிழ்க்கிராமங்களை எப்படி விற்று வாங்கினார் என்பதை கனகர் கிராமம் ஒழிவு மறைவு இன்றி முன்வைக்கிறது.

இன்று தமிழரசு வாரிசுகளும் – இராசமாணிக்கத்தின் வாரிசுகளும் வீரமுனைக்கு ஒரு வரவேற்பு வளைவு அமைப்பதற்கும், கல்முனை தமிழ்பிரிவு பிரதேச செயலகம் ஒன்றை நிலை நிறுத்த முடியாமலும் பரிதாபகரமான அரசியலை செய்கிறார்கள். இந்தத் தமிழ்ப்பிரிவு தமிழரசும் – தமிழ்த்தேசியமும் பேசுகின்ற ‘துரோகி’ பட்டத்தை சுமந்த அன்றைய அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகத்தினால்தான் சாத்தியமானது. கல்முனையில் இன, மத ஐக்கியத்தையும், இனங்களுக்கு இடையிலான தங்களைத்தாங்களே நிர்வகிக்கும் அரசியல் அடிப்படையாகத்தான் அமைக்கப்பட்டது. இன்று சுவாமி விபுநந்தர் மண்ணில் அவர் பேசிய இன, மத பேதமற்ற பன்மைச் சமூகம் அர்த்தமற்றதாகிவிட்டது. தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் வாக்கு சேகரிப்பில் இவை முக்கிய தேர்தல் விஞ்ஞாபனங்கள்.

செங்கதிரோன் தனது நாவலில் அரசியல் வரலாற்றை பேசும் அத்தியாயங்களில் முள்ளை முள்ளால் எடுக்கின்ற யுக்தியை கையாண்டுள்ளார். எம்.சி. கனகரெட்ணத்தை பொத்துவில் இரட்டை அங்கத்தவர் தொகுதியில் தமிழர்விடுதலைக்கூட்டணி வேட்பாளராக நிறுத்துவதற்கு கோகுலன் நகர்த்திய காய்கள் அதிசயிக்கத்தக்கவை. அதேவைளை கனகரெட்ணத்திற்கு ஆதரவானவர்களை கொண்டு செய்யப்படும் நியாயப்படுத்தல்களும் முக்கியமானவை. குறிப்பாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்பாளர் தேர்வு முறையில் இடம்பெற்ற ‘உருட்டுக்களை’ உதுமாலெப்பையின் வாயால் வெளிப்படுத்தும் சாதுரியம் மெச்சத்தக்கது. இதன் மூலம் மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் இடம்பெற்ற உருட்டுக்கள் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை மாவட்டம் பிரிக்கப்பட்ட பின்னர் மட்டும் அன்றி 1947 முதல் 1977 வரை மட்டக்களப்பு தெற்கு/ அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம் இருக்கவில்லை. 1977 இல் எம்.சி.கனகரெட்ணம் வெற்றி பெற்றதன் மூலமே அது சாத்தியமானது. திருகோணமலையில் அன்றைய உறுப்பினர் ஏகாம்பரம் மரணித்ததன் பின்னரான இடைத்தேர்தலில் தமிழரசுக்கட்சி தமிழர் பிரதிநிதித்துவத்தை முகம்மது அலியை வேட்பாளராக நிறுத்தி தாரைவார்தபோதும், அம்பாறை மாவட்ட தமிழர்கள் குறித்து ஒரு பேரம்பேசலை முஸ்லிம் தரப்போடு மேற்கொள்ள தமிழரசு தயாராக இருக்கவில்லை என்பது கிழக்கின் அரசியல் தலைவிதியை யார் நிர்ணயித்தார்கள் என்பதை வெளிச்சம் போடுகிறது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதார பேராசிரியரும், தற்போது அவுஸ்ரேலியாவில் ஓய்வுநிலை பேராசிரியராக வாழ்பவருமான காத்தான்குடியைச்சேர்ந்த பேராசிரியர் அமீர்அலி ஒரு பதிவில் குறிப்பிட்டிருப்பது போல் முஸ்லிம்களின் அரசியல் ஒரு ‘பயன்பாட்டு’ அரசியல் என்பது சிங்கள அரசியல் தலைமைகளை மட்டும் அல்ல, தமிழ்த்தலைமைகளையும் இன்னும் சிறப்பாகவே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

எம்.சி.கனகரெட்ணம் மீது கொழும்பில் வைத்து துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டபோது, அவர் அளித்த வாக்கு மூலத்தில் “ஒரு நெட்டையனும், ஒரு கட்டையனும்” வந்திருந்ததாகவே கனகரெட்ணம் கூறியதாக ஊடகங்கள் பேசின. இதனால் நெட்டையன் உமாமகேஸ்வரன் என்பதும், அவர் கனகரெட்ணத்திற்கு அறிமுகமானவர் என்பதால் அவரைக்கண்டதும் கனகர் அவருடன் பேசினார் என்பதும் தெரிந்த விடயங்கள். ஆனால் கட்டையனின் மர்மம் துலங்கவில்லை பொதுவாக அது பிரபாகரன் தான் என்றும் , பிரபாகரனே கனகரைச் சுட்டார் என்றும் பலராலும் நம்பப்பட்டது/ நம்பப்படுகிறது. ஆனால் அந்த கட்டையன் பிரபாகரன் அல்ல வாமதேவன் என்பதை கனகர் கிராமம் வெளிப்படுத்துகிறது. வாமதேவன் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் சாரதியாக இருந்தவர் என்று தெரியவருகிறது. எந்தப் புற்றுக்குள் எந்த பாம்பு இருக்கிறது? யாருக்கு தெரியும்?. பொதுவாக பிரபாகரன் தனது பாதுகாப்பில் அதீத அக்கறை கொண்டவர். தனக்கான பாதுகாப்பு பிரதேசத்தை விட்டு வெளியேறுவது மிக மிக அரிது என்று கூறப்படுகிறது. மன்னார் மடுக்காட்டில் இடம்பெற்ற பஸ்தியான்பிள்ளை சி.ஐ.டி. அணி மீதான தாக்குதலின் போதும் பிரபாகரன் முகாமில் இருக்கவில்லை என்பது வரலாறு.

கிழக்கு மாகாணத்திற்கான ஒரு அரசியலை தெரிவு செய்து அதனூடாக- கிழக்கிற்கு பொருத்தமான ஒரு “அபிவிருத்தி மாடல்” காலத்தின் கட்டாயம் என்பதை ஆரம்பித்து வைத்தவர் நல்லையா மாஸ்டர். வடக்குக்கும், கிழக்குக்கும் பொருத்தமான ஒரு அபிவிருத்தி மாதிரி சரியாக அமையாது. ஏனெனில் இரண்டு மாகாணங்களினதும் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பும், புவியியல் சுற்றுச்சூழல் அமைப்பும் வேறுபட்டவை. அதற்கான ஒரு அபிவிருத்தி மாதிரியை நல்லையா மாஸ்டர் ஆரம்பித்து வைத்தார் என்றால் தொடர்ந்து கே.டபிள்யூ. தேவநாயகம், இராஜன் செல்வநாயகம், எம்.சி.கனகரெட்ணம், செல்லையா இராசதுரை, விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோர் அந்த வழியில் பயணித்தனர். ஆனால் இவர்கள் அனைவரும் துரோகிகளாக குறி சுடப்பட்டனர். அந்தக் குறியையும், துப்பாக்கி சூட்டு தளும்பையும் சுமந்து கொண்டு கனகர் “அம்பாறை மாவட்ட தமிழர்களுக்கு” செய்த சேவை அளப்பரியது. கனகர் காலத்தில் கிழக்கின் மற்றைய மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் வேலை தேடி அலைந்து திரிந்த காலத்தில், அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகளை தேடவேண்டியிருந்தது. அவ்வளவு வேலைவாய்ப்புக்கள் கனகரால் வழங்கப்பட்டன. கனகர் கிராமம் போன்ற எதிர்கால தூராநோக்கிலான அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.

எம்.சி.கனகரெட்ணத்தை ‘துரோகி’ என்றவர்களுக்கு அவரின் ஆரம்பகால வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை. இந்த நாவலில் அவர் தொடர்பான பல புதிய தகவல்களை செங்கதிரோன் தருகிறார். தமிழ்த்தேசிய மேடைகளில் அதன் தலைவர்கள் இந்திய போராட்ட வீரர் சுபாஸ் சந்திரபோஸ் பற்றி முழங்க கேட்டிருக்கிறோம். ஆனால் கனகர் சுபாஸ் சந்திரபோஸின் சுதந்திரப்போராட்ட படையணியில் போராடியவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும். கனகர் சுபாஸ் சந்திர போஸின் இராணுவத்தில் பயிற்சி பெற்றவர், இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர். அதற்காக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியால் கைது செய்யப்பட்டு மலேசிய சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு துரோகி பட்டம் சூட்டிய நமது சிறைமீண்ட செம்மல்களுகு இதன் மூலம் பதிலளித்திருக்கிறார் செங்கதிரோன். அது மட்டும் அல்ல கனகர் சுடப்பட்ட போது இராணுவ பயிற்சிதான் கனகரைக்காப்பாற்றியது என்று நம்பப்படுகிறது. சூடு வீழ்ந்ததும் கனகர் நிலத்தில் விழ்ந்து கரணம் அடித்ததால்தான் அவர் உயிர் தப்பினார் என்ற பல புதிய தகவல்களை கனகர்கிராமம் வாசகர்களுக்கு வழங்குகிறது.

கனகர் மட்டக்களப்பு மாவட்ட அமைச்சராகவும் இருந்து கட்சி அரசியல் பகைமைகளை கடந்து பணியாற்றியவர். கனகர் கட்சி மாறியபோது அவருக்கு “இடிவிழும்” என்று அ.அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் சாபமிட்ட போதும், தேவநாயகம், இராசதுரை, கணேசலிங்கம், பரீட்மிராலெப்பை ஆகியோர் கனகரின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தனர். இது வடக்கு தலைமைகளால் துரோகியோடு ஒத்து ஓடுதல் என்று பேசப்பட்டது. இறுதியில் இடி எல்லோருக்கும் தான் விழுந்தது.

கனகர் கிராமம் நாவல் குறித்து இப்பத்தியில் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இது ஒரு நாவலா? என்று அளவு கோல்களோடு சிலர் உலாவரலாம். ஆனால் கிழக்கின் சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்று ஆவணமாக கனகர் கிராமத்தை நிராகரிக்க முடியாது. அது கிழக்கின் பன்மைத்துவ சமூகங்கள் கடந்த கால தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தையும், கிழக்குக்கு பொருத்தமான சமூக, பொருளாதார, அரசியல் மாதிரியை எதிர்காலம் நோக்கி முன் மொழிகிறது. கிழக்குமாகாணத்தின் இதுவரை ஆவணப்படுத்தப்படாத, ஆவணப்படுத்தாது புறக்கணிக்கப்பட்ட, இருட்டடிப்புச் செய்யப்பட்ட பல உண்மைகளையும், தகவல்களையும் வாசகர்களுக்கு தந்துள்ளது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. பொருத்தமற்ற அளவுகளோடு சப்பாத்தை சுமந்து கொண்டு அதற்கு பொருத்தமாக/ அளவாக பாதங்களை வெட்ட முடியாது. செய்ய வேண்டியது அளவுகோலான சப்பாத்தின் சையை மாற்றவேண்டியதுதான்.

செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் கோகிலனாக கிழக்கில் மூடப்பட்டுக்கிடந்த ஒரு பெட்டகத்தை திறந்து காட்டியுள்ளார். அதில் பூட்டப்பட்டிருந்த ஆதாரங்கள் இன்றைய, எதிர்கால சந்ததியினருக்கு தேவையானவை. அவற்றை நுகரவேண்டியது வாசகர் பொறுப்பு. கிழக்கில் பொதுவாகவும் – மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் குறிப்பாகவும், சிறப்பாகவும் சமூக ஆர்வலர்கள் வாசிக்கவேண்டியதும், வீட்டு நூலகங்களில் இடம் ஒதுக்கப்பட வேண்டியதுமான ஒரு வரலாற்று ஆவணம் கனகர் கிராமம்.

செங்கதிரோன் கோபால கிருஷ்ணனுக்கு மற்றொரு அரசியல் பொறுப்பு இருக்கிறது. அவர் தற்போது அரங்கம் மின்னிதழில் தொடரும் “கிழக்கு தமிழர்களுக்கான அரசியல் கட்டமைப்பு பொறிமுறை பிரதேசவாதமல்ல” என்ற தொடரின் தொகுப்பும் நூல் வடிவம் பெறவேண்டும் என்று வாழ்த்துவோம். எங்களை நாங்களே பதிவு செய்வோம்!.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button