இஷாராவின் பிறந்த நாளுக்கு சி.ஐ.டி. அலுவலகத்தில் விசேட விருந்துபசாரம்!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்பவரது பிறந்தநாளை முன்னிட்டு, அங்கு விசேட விருந்துபசாரம் மற்றும் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர் தெரிவித்தார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில்,
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்பவரது பிறந்தநாளை முன்னிட்டு, அங்கு விசேட விருந்துபசாரம் மற்றும் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்தன.
இது தொடர்பாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் விசாரணைகளை முன்னெடுத்தார்.
பொலிஸ் அதிகாரிகள் ஒருபோதும் குற்றவாளிகளுடன் அல்லது சந்தேக நபர்களுடன் இவ்வாறான நெருக்கமான தொடர்புகளைப் பேண முடியாது.இது எமது தொழில்முறை ஒழுக்கக் கோவைக்கு முரணான செயலாகும். அதன்படி, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரிக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், அனைத்துப் பொலிஸ் அதிகாரிகளும் தங்களது கௌரவத்தையும் தொழில்முறை ஒழுக்கத்தையும் பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்றார்.
![]()