இலங்கை

வவுனியாவில் ஆளுநருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள் – ஊழலுக்கு எதிராக சுவரொட்டிகள்

வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண ஆளுநருக்கு ஏதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கம் முன்னால்  குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அங்கிருந்து மன்னார் வீதி வழியாக ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நின்று கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

வடக்கு மாகாண ஆளுநரால் கடந்த 24 ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விசேட வர்த்தமானி மூலம் வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபனின் பதவி பறிக்கப்பட்டதுடன், அவரது மாநகர சபை உறுப்புரிமையும் பறிக்கப்பட்டிருந்தது.

இதனை கண்டித்து இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் ”ஆளுநரே ஜனநாயக படுகொலையை நிறுத்து, ஜேவிபியின் முகவராக ஆளுநரே செயற்படாதே, பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள காட்சிக்கு மாநகர சபையிடம் காணி உரிமம் உண்டா?, மக்கள் ஆணைக்கு மதிப்பளி, தையிட்டியில் பாராமுகம் மாநகர சபையில் பழிவாங்களா, ஊழல் அறிக்கையை வெளிபடுத்து” என பல்வேறு கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன், ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோதரராதலிங்கம், முத்து முகமது, முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், சிவநேசன், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை  வடக்கு ஆளுநரின் செயற்பாட்டை கண்டித்து வவுனியா நகரப் பகுதியில் இருந்த வர்த்தக நிலையங்களில் 50 வீதமான வர்த்தக நிலையங்கள் சுமார் 3 மணிநேரம் மூடி தமது எதிர்ப்பை வெளிபடுத்தி இருந்தனர்.  ஏனைய வர்த்தக நிலையங்கள் வழமை போல் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஊலுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ”வவுனியா மாநகர மக்களே ஊழல்வாதிகளுக்கு துணை நிற்காதீர், ஊழல் புரிவது நீங்கள், பாதிக்கபடுவது மக்களா?, சொகுசு வாழ்க்கை உங்களுக்கு சுமை மட்டும் மக்களுக்கு, லஞ்சம் பெறுவது நீங்கள், பாதிக்கப்படுவது மக்கள்” என பல்வேறு வாசகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளே நகரப் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

இருப்பினும், குறித்த பதாதைகளில் யாரால் காட்சிப்படுத்தப்பட்டது என உரிமை கோரப்படாத நிலையில் உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button