உலகம்

கனடாவில் 11 வயது சிறுவன் பலியான சோகம் குறித்து மருத்துவர்கள் அறிக்கை!

வௌவால்களுடன் ஏதேனும் ஒரு வகையில் நேரடித் தொடர்பு ஏற்பட்டால், அதன் மூலம் ரேபிஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு மருத்துவர்கள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.

கனடிய மருத்துவ சங்க இதழில் தொற்றுநோய் நிபுணர்கள் வெளியிட்டுள்ள ஒரு புதிய அறிக்கையில், கடந்த 2024-ஆம் ஆண்டு கோடைகாலத்தில் ஒன்டாரியோவில் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 11 வயது சிறுவனின் மரணம் குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஹாமில்டனில் உள்ள மெக்மாஸ்டர் குழந்தைகள் மருத்துவமனையின் தொற்றுநோய் நிபுணர் டாக்டர் பிரையன் ஹம்மல் தகவல் வெளியிட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, ரேபிஸ் தொற்றின் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே எங்களின் நோக்கம் என தெரிவித்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு வடக்கு ஒன்டாரியோவில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் (Cottage) அச்சிறுவன் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவனது மூக்கு மற்றும் வாய் பகுதியில் வௌவால் ஒன்று அமர்ந்ததால் அவன் திடீரென விழித்தெழுந்துள்ளான்.

சிறுவன் அந்த வௌவாலைத் தட்டிவிட, அவனது தந்தை அதை ஒரு பாத்திரத்தில் பிடித்து வெளியே விட்டுள்ளார். சிறுவனின் முகத்தில் எந்தவிதமான கீறல்களோ அல்லது கடித்த அடையாளங்களோ இல்லாததாலும், வௌவால் விசித்திரமாக எதையும் செய்யாததாலும், பெற்றோர் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டனர்.

மருத்துவரிடமும் அழைத்துச் செல்லவில்லை. சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு, சிறுவனின் முகத்தின் வலது பக்கத்தில் சுருசுருப்பு, மரத்துப்போதல் மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றின.

சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர், அது வைரஸ் தொற்றால் முகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக ஏற்படும் ‘பெல்ஸ் பால்சி’ (Bell’s palsy) வாதமாக இருக்கலாம் எனக் கருதி வைரஸ் எதிர்ப்பு மருந்தை வழங்கினார்.

சில நாட்களில் சிறுவனுக்கு வாந்தி மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் பேச்சு குளறி, மூளையின் செயல்பாடுகள் செயலிழக்கத் தொடங்கின.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன், மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து, செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டு குடும்பத்தினரின் முன்னிலையில் அமைதியாக உயிரிழந்தான்.

ரேபிஸ் வைரஸின் அறிகுறிகள் உடலில் வெளிப்படத் தொடங்கிவிட்டால், அதற்கு எந்தவிதமான சிகிச்சையோ அல்லது குணப்படுத்தும் மருந்தோ கிடையாது.

அது 100% மரணத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 100% உயிர் பிழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button