பலதும் பத்தும்

யாழ்.போதனா வைத்தியசாலையில் மூளைச் சாவடைந்த பின்னரும் இருவரை வாழ வைத்த சிங்களவர்!

போகவெவா ருவன்புர பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆர். முத்து பண்டா என்பவர் மூளை கட்டி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த  மூளைச் சாவடைந்துள்ளார்.

இந் நிலையில் அவரது இரண்டு சிறுநீரகங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்டு இருவருக்குப் புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளன.

கடந்த பல நாட்களுக்கு முன் கடுமையான தலைவலி காரணமாகப் பதவிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உடனடியாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸில் மாற்றப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் அவருக்கு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. பல பரிசோதனைகளின் பின்னர் இந்த மாதம்-06 ஆம் திகதி அவர் சிகிச்சை முடிந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்தார். எனினும், தொடர்ந்து சிகிச்சைகளுக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் செல்ல அவரது குடும்பம் முடிவு செய்தது.

ஆனாலும், அறுவைச் சிகிச்சைக்கான திகதியைப் பெற்றுக் கொண்ட பின் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தமையால் சில நாட்களுக்கு முன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

நரம்பியல் அறுவைச் சிகிச்சைக் குழு அவரைப் பரிசோதித்த போது CT scan மூலம் மூளை கட்டி மற்றும் அதனுடன் தொடர்புடைய Hydrocephalus உறுதி செய்யப்பட்டது. இதனால், அவரை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவரது நிலை மேலும் மோசமடைந்து இறுதியில் மூளை மரணம் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மிகுந்த துணிவும், மனிதாபிமானமும் கொண்ட முடிவெடுத்து அவரது இரு சிறுநீரகங்களையும் தானமாக வழங்க ஒப்புக் கொண்டனர்.

இதற்கமைய, சிறுநீரகங்கள் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் பிரித்தெடுக்கப்பட்டுக் காத்திருப்புப் பட்டியலிலிருந்த ஒருவருக்கு ஒரு சிறுநீரகம் உடனடியாக மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் உடனடியாக நாட்டிலுள்ள மற்றொரு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிறுநீரகம் அவசியம் தேவைப்படும் ஒருவருக்குப் பொருத்தப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *