சீட்டுக்காசு…. சிறுகதை… சி.பி.சத்தியநாதன்


அடிக்குமேல் அடிவைத்து கெந்திக் கெந்தி நடந்து அன்னம்மாவின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மாரிமுத்துக்கிழவி. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, வந்ததும் வராததுமாக திண்ணையில் சக்கச் சளிய இருந்துவிட்ட கிழவியைப் பார்த்து “என்ன பெத்தா… கரடி பிறை கண்டாப் போல இந்தப் பக்கம்?” என்றாள் அன்னம்மாவின் புத்திரியான கமலி.
“வருத்தமாகக் கிடந்தனடி மனே” என்று கரகரத்த தொனியில் ஆரம்பித்து, தன்னைப் பிடித்துக் கொண்ட வயிற்றுளைவு வியாதி பற்றி விபரித்து, அதைத்
தொடர்ந்து உடம்பை முறித்துப் படுக்கையில் போட்டுவிட்ட “டிங்கி”க் காய்ச்சல் பற்றியும் விஸ்தாரமாக எடுத்துச் சொள்னாள் மாரிக்கிழவி.
அவளுடைய சுருங்கிப்போன முகத்தையும், வகிடெடுத்தும் வராது கோதிக்கட்டியிருந்த நரைபாய்ந்த சின்னஞ் சிறிய கொண்டையையும் குழிந்துபோய் ஆழத்திலே மின்னும் இடுங்கிய கண்களையும் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்த கமலி, “மெய்தானா பெத்தா?… எங்களுக்குத் தெரியாமல் போயிற்றுதே! தெரிஞ்சிருந்தா அம்மையாவது வந்து உன்னைப் பார்த்திருப்பாவு” என்று மன்னிப்புக் கோருவதுபோல் சொன்னாள். பதினைந்து வயதுகூட ஆகாத சிறுமி கமலி, தன் தாயைப் போலவே உருக்கமாகப் பேசுகிறாளே என மகிழ்ந்த கிழவி, தன் மனத்திற்குள்ளே சிறுமியை வாழ்த்தினாள்.
வேம்பு, மா, பலா மரங்கள் உதிர்க்கும் சருகுகளுக்கு அன்னம்மாவின் வளவில் குறைச்சல் இல்லை, வளவை கூட்டிப் பெருக்கி அலுத்துப் போன அன்னம்மா, ஒரு நாள் வீட்டிற்கு வந்த மாரிமுத்துக் கிழவியிடம் அந்த வேலையை ஒப்படைத்தாள். அந்தப் பென்னாம் பெரிய வளவை தினசரி கூட்டிப் பெருக்குவதென்றால் ஆருக்கு முடியும்? மாதத்தில் இரு முறையோ மூன்று முறையோ வளவைக் கூட்டிப் பெருக்கும் தன் கடமையை நிறைவேற்றுவதற்காக மாரிமுத்துக்கிழவி அன்னம்மாவின் வீட்டிற்கு விஜயம் செய்வாள்.
கிழவி எல்லா இடங்களிலும் போய் இப்படியான வேலைகள் செய்யமாட்டாள்.
அன்னம்மா உறவுக்காரியானதாலும், அவளின் தங்கமான குணம் கிழவிக்குப் பிடித்துப் போனதாலுமே இங்கு வந்து போய்க்கொண்டிருந்தாள் அவள். கட்டிப்பாலும் சீனியும் கலந்து அன்னம்மா தரும் தேனீரிலே மாரிக்கிழவிக்கு ஒரு மயக்கம்.
இங்கு வந்து நிற்கும் இரண்டொரு நாட்களிலும், மாரிக்கிழவி, அன்னம்மாளின் குடும்ப அதிதியாகவும், சேவகியாகவும் இருப்பாள். அவளின் ஒத்தாசைகளால் வீட்டு வேலைகள் விரைவாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
“அம்மா எங்க போயித்தாவு மனே புள்ள?” குனிந்து தன்காலில் ஏற்பட்டிருந்த புண்ணைப் பார்த்தவாறு கேட்டாள் மாரிப்பெத்தா.
‘“அம்ம, மாமிக்குச் சுகமில்லையாம் எண்டு பாக்கப் போயிருக்காவு. இரி பெத்தா இனி வந்திருவாவு” என்று பதில் கூறிய கமலி குசினிப் பக்கம் போனாள்.

“எனக்குத் தேத்தண்ணி ஒண்டும் வேணாம் மனே. சும்மா இரி. அம்ம வரட்டும்.” களைப்பாக இருந்தாலும் தாயில்லாத வேளையில் வந்து, இந்த சின்னஞ் சிறிசிடம் தேனீர் வாங்கிக் குடிப்பது முறையல்ல என்ற கண்ணிய உணர்வில் சொன்னாள் கிழவி. அப்போது, “என்ன மாமி உன்னக் கனகாலமாக் காணல்ல, வளவும் சருகேறி அடைஞ்சுபோச்சு” என்று குசலம் விசாரித்தவாறே வந்தாள் அன்னம்மா.
“அதென்னத்த மனே பேசுற.. நான் கிடந்த கிடை ஆர் அறிவா?”. தனது சுகவீனத்தையும் தேறுதலையும் மீண்டும் ஒருமுறை அவளிடமும் விவரித்தாள் கிழவி.
அன்னம்மாவின் வீட்டைப் போலவே கிழவிக்கு மேலும் சில வீடுகள் வாடிக்கையானவை. ஏதோ ஒரு வகையில் அந்த வீட்டுக்காரர்களும் கிழவியின் உறவினர்கள்தான். மாதத்தில் இரண்டு மூன்று நாட்களை ஒவ்வொரு வீட்டுக்குமாக ஒதுக்கி, அந்த அந்த வீடுகளிலேயே அந்த நாட்களைக் கடத்திவிடுவாள் கிழவி. எவரும் அவளைப் போ என்று விரட்டியதும் இல்லை. வா என்று நிர்ப்பந்திப்பதும் இல்லை. எனினும் அவள் வராமை கடந்த சில நாட்களில் அந்த வீடுகளில் ஏதோ ஒரு குறைவையே காட்டிற்று. கிழவி, தான் போய் வருவதாக விடை கோரியதும் ஐம்பது சதமோ ஒரு ரூபாயோ அங்கங்கே கிடைக்கும். மற்ற வீடுகளில் தரும் கூடிய தொகையே அன்னம்மா வீட்டில் தரும் குறைந்த தொகையாக இருக்கும்.
கிழவிக்கு புருஷனோ பிள்ளை குட்டியோ இல்லை என்பதிலும் பார்க்க, அவளை நம்பி வாழ்பவர்களோ, அவளின் அன்புக்குப் பாத்திரமானவர்களோ இவ்வுலகில் இல்லை என்பதே பொருத்தம். அவளின் கருத்தும் அப்படியே! கன்னியாயிருந்து மொட்டாகி பின் மலர்ந்து விகசித்து மணம் என்ற வெயிலில் வண்டோடு கூடி மகிழ்ந்த நாட்கள் அவளின் வாழ்விலும் வந்து போகாமல் இல்லை. எனினும் அந்த நாட்கள் எவ்வளவு விரைவாகச் சென்று விட்டன! இளமையிலேயே கைம்மை நிலையை எய்தி, கல்லும் முள்ளும் பள்ளமும் படுகுழியும் நிறைந்த பாதையில் தன் வாழ்க்கை வண்டியை ஓட்டி, இப்பொழுது கிழவி என்ற நிலைக்கு வந்துவிட்ட அவள், எப்போதோ இறந்துபோன தனது தமக்கையின் மகன் வீட்டையே தன் தங்குமிடமாக்கி அங்கே மாதத்தில் நான்கைந்து நாட்கள் தங்கிவருகிறாள் .
“சரியா இளைக்குது மனே அன்னம்மா! இயின கந்தோருக்கொள்ளம் நடந்து போனதுக்கு!”
“ஏன் பிச்சச் சம்பளம் எடுக்கயா?”
“ஓம் மனே! இன்னும் சம்பளம் வரல்லயாம், போசுமாத்தர் சொன்னாரு. அப்படியே இஞ்சால வந்திற்றன்.” தான் அரசாங்கத்தில் பெறும் தருமப் படிக்கு பிச்சைச் சம்பளம் என்று அன்னம் கூறியதைத் திருத்தும் முகமாகத்தான் சம்பளம் என்ற சொல்லுக்கு அழுத்தம் கொடுத்துச் சொன்னாள் கிழவி
“நிச்சயமாகத் தெரியாம நீ ஏன் இந்த நேரத்தில புறப்பட்டு வந்த? ஆரிட்டயும் விசாரிச்சிற்று?”
“எனக்கென்ன தெரியும்… வந்த மத்தப் பொண்டுகளோட நானும் வந்தன்.ஒள்ளம் நெருக்கடிப்படாம முன்னால எடுத்திரலாமேயெண்டு.”
“நல்லா மெலிஞ்சி எலும்பும் தோலுமாப் போயிற்றா மாமி! உடம்பில ஒள்ளுப்பமும் உசுப்பக் காணல்ல!”
“ஓம் மனே அடியோட பெலன் சரியில்ல புள்ள…”
“வாற சம்பளக் காச எடுத்து வச்சி என்ன செய்யிற…. மோல்ட்ட மிலுக்குப் போத்தல் ஒண்ட வாங்கிக் குடி, நல்லாச் சாப்பிடோணும், அப்பதான் உடம்பு பெலன் கிலன் ஏறும்” என்று தன் அனுபவத்தைச் சொன்னாள் அன்னம்மா.
“எங்க புள்ள அதெல்லாம் வேண்டுற…? ஒரு சீட்டொண்டத் தொடங்கிற்று…”
“என்ன சீட்டா?” அதிர்ச்சியைத் தாங்கொணாதவள் போல கேட்டாள் அன்னம்மா. ஏழு ரூபா ஐம்பது சதத்தை தன் ஒழுங்கான மாத வருமானமாகக் கொண்ட அந்தக்கிழவிக்கு என்ன சீட்டு என்று மத்தியதர வர்க்கத்திற்குரிய செருக்கோடு மனதில் கேள்வி எழுப்பி தன் முன்னே இருந்த மாரிக்கிழவியைப் பார்த்தாள். கிழவி சீட்டுக் கட்டும் சமாச்சாரமெல்லம் அவளுக்குத் தெரியாது.
“ஓம்புள்ள சீட்டுத்தான் – பத்து ரூவாச் சீட்டு.” ஆதங்கத்தோடு வார்த்தைகள் வெளிவந்தன. “என்ன மாமி பத்து ரூபாச் சீட்டா? உனக்குப் பிச்சக்காசு ஏழு ரூபாயும் ஒரு சிலினும் தானே! நீ பத்து ரூபாச் சீட்டு எப்படிக் கட்டி வாறா?”
“என்ன செய்யிற மனே. இப்ப கயிற்றப்பட்டெண்டாலும் சீட்டக் கட்டுனா பின்னுக்கு ஒள்ளம் ஆறுதல். அதில வாற காசெடுத்து அக்கயிர பொட்டயிற்றக் குடுத்து வச்சிருந்தா, நம்ம கண்மூடுன புறகு சாச்செலவையெண்டாலும் சீரா நடத்துங்கள்” என்றாள் கிழவி அசைக்க முடியாத நம்பிக்கையோடு.
தமக்கை மகள்தான் கிழவிக்குச் சீட்டுக்கட்டும்படி ஆலோசனை கூறியிருந்தாள். மதா மாதம் கிழவி தரும் இரண்டோ மூன்றோ ரூபாய்களை தனது கணவனின் குடிப் பழக்கத்தாலும், குடும்பத்தில் நிலவிய நிரந்தர வறுமையாலும் சேமித்து வைப்பது சிரமம் என்றுதான் சீட்டுக்கட்டும்படி புத்தி சொல்கிறாள் என்று நம்பினாள் கிழவி. ஆனால் மொத்தமான தொகை வந்தால் பாரிய கடன் ஒன்றை அடைத்து விடலாமே என்ற தன் உள்ளார்ந்த நோக்கத்தை மறைத்து, தன் சின்னம்மாவின் அந்திம காலத்திற்குச் சீட்டுக்காசு பயன் படும் என்று காரணம் காட்டியிருந்தாள் தமக்கை மகள். பற்றுக் கோடு எதுவுமின்றி வாழ்ந்த கிழவிக்கு தமக்கை மகளின் ஆலோசனை நல்ல புத்தியாகவே பட்டது. அன்றாடத் தேவைகளுக்கே போராடிக்கொண்டிருக்கும் மகள் தன் மரண வீட்டுச் செலவை எப்படி நடத்த முடியும்? என்று தன்னைப் பல நாட்களாக ஆட்டி அலைக்கழித்த கவலைக்கு ஒரு தீர்வுகாண முடியுமென்று எண்ணினாள். அந்த நம்பிக்கையோடுதான் கடந்த நான்கு மாதங்களாக ஓடி ஓடி உழைத்துச் சீட்டுக் கட்டி வருகிறாள். சீட்டுக் கட்ட ஆரம்பித்தது முதல் தான் வழக்கமாகச் செல்லும் வீடுகளோடு புதிதாக இன்னும் சில வீடுகளையும் சேர்த்துக்கொண்டு தொங்கோட்டமும் சில்லறைப் பாய்ச்சலுமாக இயந்திரம் போல் வேலை செய்து நான்கு மாதம் ஒழுங்காகச் சீட்டுக் காசைச் செலுத்திவிட்டாள். இந்த நான்கு மாத காலத்தில் அவள் தனக்கே உரிய சுபாவத்தினை மாற்றிக் கொண்டவளாக இருந்தாள். சாப்பாட்டில் கவனம் இன்றியும் ஓய்வு எடுத்துக் கொள்ளாமலும் ஒரே “பிஸி”யாக இருந்தாள். உடற் சோர்வினால் ஏற்பட்ட வியாதிதான் அவளை இத்தனை பலஹீனமானவளாக ஆக்கிவிட்டது.
கிழவியின் சீட்டுக்கட்டும் விவகாரம் பற்றியும், அவள் உடல் நிலை பற்றியும் எண்ணி தனக்குள்ளே பரிதாபப் பட்டுக்கொண்டிருந்த அன்னம்மா, “எப்பிடி மாமி நீ பத்து ரூபா சிட்டுக் கட்டுறா? உண்ட சம்பளக் காசோட இன்னும் ரெண்டு ரூபாயும் ஒரு சிலினும் வேணுமேலுவா? நீ சாப்பிடறல்லயா? சோறு தாற அக்கயிர மகளுக்கு ஒண்டும் குடுக்கிறல்லயா?” என்று கேட்டாள்.
“ஒரு மாதிரியா நாலு மாதம் ஒப்பேத்திற்று வந்தாள். போகாத ஊடுகளுக்கெல்லாம் போய் வேல செய்து வந்த காசிகளக் கூட்டம் பண்ணி சீட்டக் கட்டித்து அக்கயிர பெட்டைக்கும் ஏதும் குடுத்து வந்தன். இந்த மாதம் இன்னா வருத்தம் புடிச்சிற்று. மிச்சக் காசிக்கு என்ன செய்யிறதெண்டு தெரியல்ல. நல்லா வருத்தம் புடிச்சிற்று. போதாக் குறைக்கு காலிலயும் ஒரு புண் வத்திற்று. நடந்துக்கயும் ஒண்ணா!”
“உன்ர சாப்பாட்டுப் பாடுகள் எப்பிடி மாமி?”
“அத என்னத்தப் பேசுற புள்ள. ஊர்ல சரியான அரிசிப் பஞ்சம். கூப்பனுக்கு ஒரு சேர் சும்மா குடுக்கத் துவங்கின புறகு ஒருவரும் என்னச் சோறு தின்னக் கூப்பிடுறதில்ல. சோத்தக் காணவும் சோட்டயாக் கிடக்கு. அயின வருத்தமாகக் கிடக்கக்க அக்கயிர பொட்ட றோஸ் பாண் தான் வேண்டித் தந்தவள்.” அரிசித் தட்டுப்பாட்டின் கொடுமையைப் பற்றி கிழவி விளக்க முயன்றதும் கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா என தன்னுள் அலுத்துக் கொண்டாள் அன்னம்மா. மத்திய தரம் என்ற இரண்டுங் கெட்டான் நிலையிலிருக்கும் அன்னம்மாவுக்கு கிராமத்தில் நிலவும் தட்டுப்பாடு பற்றிக் கிழவியா சொல்ல வேண்டும். கூப்பன் அரிசியை நம்பி வாழ்ந்த அவள் குடும்பம், இலவச அரிசியின் பற்றுக் குறைவினால் அரிசிக்காரக் கதிசா உம்மாவையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. கடந்த சில நாட்களாக சோ என்று பெய்து கொண்டிருக்கும் அடைமழையால் அரிசிக்காரக் கதிசாவைக் காணாது தவித்து, பின் தனது மகளை எங்கோ அனுப்பி, ஒரு ரூபா அறுபது சதம் கொடுத்து, ஒரு கொத்து அரிசி வாங்கியிருந்தாள். “பகல் வேளை மட்டுமே சோறு” என்ற சட்டத்தை அவள் கணவன் வேலுப்பிள்ளை ஓவசியர் கொண்டுவர. அதை அமுலாக்குவதில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அன்னம்மா. தன் வாழ்க்கையில் முதன் முதலாக ஏற்பட்டிருக்கும் சோற்றுப் பஞ்சத்தைப் பற்றி நூல் ஒன்றையே எழுதிவிடக் கூடிய அனுபவம் பெற்றிருந்தாள்.
“இந்த ஒரு மாதமா எல்லாருக்கும் பொறுப்புத்தான் மாமி!” என்று அன்னம்மா சொன்னதும், கிழவி, வாசலில் சுருண்டு தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நாயைத் தன் கையால் சுட்டிக் காட்டி, “இந்த நாயெண்டாலும் ஒள்ளம் தேவல்ல, அப்பிடியே இருந்த மாதிரி இரிக்கி, ஊர்ல உள்ள நாய்களப் பாரன்… எலும்புந் தோலுமாத்திரியுதுகள்… ஹ்ம்… மனிசனுக்கே சோறில்ல முறுக சாதிக்கு ஆரு சோறு வைப்பாங்க! ஊர்ப் பஞ்சம் நாயில் தெரியும்” என்றாள்.
‘ஓம் மாமி! இந்த நாய்க்கு நாங்க தின்றத்தில எப்பிடியும் ஒள்ளுப்பம் வச்சிருவம்” என்று தன் வீட்டு நாய் மெலியாமைக்கு விளக்கம் தந்தாள் அன்னம்மா.
“அதுதானே நானும் பாத்தன். இதிர உடம்பு உடயல்ல!” விளக்கத்தை ஒப்புக்கொண்டாள் கிழவி.
“அதுக்குள்ள நீ சீட்டுக் கட்டித்து அவதிப்படுறாய்!”

“சீட்டுக் கட்டாம என்னெய்யிற மனே? எனக்கு ஆரு இரிக்கா… நாளைக்கு இருந்தாப்பல கண்ண மூடித்தா ஆரு வந்து என்ன அடக்கம் செய்யிற?
“என்ன மாமி நீ சொல்ற கத! சுவர் இருந்தா சித்திரம் எழுதிக்கலாம். நீ எடுக்கிற சம்பளத்துக்கு மேல சீட்டுக் கட்டுனா மறுகா என்னத்தத் தின்னுற? இந்த பஞ்ச காலத்தில ஆரையும் நம்பி இரிக்கலாமா? போடிமாரெல்லாம் நெல்லையும் அரசியையும் வச்சி இறுக்கிப் பூட்டித்தாங்க. இப்ப அரிசிய கள்ளக் களவாப் பொன்போல விக்காங்க! அதுக்குள்ள நீ அரசாங்கம் தாற ஏழு ரூபா அம்பது சதத்தையும் எடுத்துச் சீட்டுக் கட்டுறாய்.” இப்படிச் சொல்கையில் தன் வீட்டுப் பொறுப்பையும் அரிசித் தட்டுப் பாட்டின் கொடுமையையும் அன்னம்மா நன்றாக அனுபவித்திருக்கிறாள் என்பது கிழவிக்குப் புரிந்தது. தலையைச் சொறிந்துகொண்டே ‘“ நீ சொல்றதும் சரிதான் மனே “ என்றாள். தமக்கை மகள் பேச்சைக் கேட்டு சிறிதும் யோசிக்காமல் காரியத்தில் இறங்கியது மடமையே என்று பட்டது அவளுக்கு. கடந்த ஒரு மாதமாக சோற்றுக்கே திண்டாடி வருவதும், அதனால் உடற் சுகம் கெட்டுப் போனதும், தனது சீவியத்துக்குப் பின், உயிர் போன கட்டைக்கு செய்ய வேண்டிய மரியாதைக்காக – சிறப்புக்காக மயங்கியதும் உயிருக்கே உலை வைத்து விடுமோ? என்று, மரண பயம் பற்றிக்கொள்ள, ஏதோ முடிவுக்கு வந்தவளாக அன்னம்மாவைப் பார்த்தாள் கிழவி.
சிறிது நேரம் இருவருக்குமிடையில் திரையாக நின்ற அமைதியைக் கலைத்து தீர்க்கமான தொனியில் அன்னம்மா சொன்னாள்.
“யோசிச்சு என்ன பிரயோசனம் மாரி மாமி? நம்மப் படைச்ச ஆண்டவன் உசிரையும் உடம்பையும் ஒண்டாதான் படைச்சான். ஒரு நாள், இந்த உசிர உடம்பில இருந்து எடுப்பான். அது எப்ப எண்டு பிரமதேவனுக்கும் தெரியா. இந்த அரும பெருமையான உசிரே எங்கயோ நம்மள அறியாம ஓடத்தான் போகுது. அதுக்குப் புறகு இந்த நாத்தக் கட்டைய ஆரு கவனிக்கப்போறா? ஏன் கவனிக்கோணும்? கவனிச்சுத்தான் என்ன புண்ணியம்? எப்பிடித்தான் சோடிச்சு விட்டாலும் கட்ட கட்டதான். உயிர் அதுக்குள்ள இரிக்கக்குள்ள தான் அதுர மானம் மரியாதையெல்லாம்! நான் எண்ட குடும்பக் கஷ்டத்தோட, இப்ப உனக்கு உதவி செய்ய ஏலாதெண்டு நீ நினையாத. உனக்கு அந்தச் சீட்டக் கட்டி முடிக்க உதவி செய்வன். ஆனா அப்பிடிச் செய்யிறது பிழை. அதுக்கு எண்ட மனச்சாட்சி ஒத்துக்கொள்ளாது. நான் உன்ன பிழையான வழியில் நடத்துறதா முடியும் அது. நான் உனக்கு அப்பிடித்தான் உதவி செய்தாலும், நீ நினைக்கிற மாதிரியே எல்லாம் நடக்குமா என்றது எனக்கு ஐமிச்சம். நீ விரும்பினா நாலு மாசமாக் கட்டுன சீட்டுக்காசு நாப்பது ரூபாவையும் ஆருட்டயெண்டாலும் வேண்டி எடுத்திற்று அந்த ஆளச் சீட்டத் தொடந்து கட்டச் சொல்லு. அப்ப உனக்கு சீட்டுக்காறியும் ஏசமாட்டாள். இல்லாட்டி உண்ட அக்கயிர மகளுக்கே அந்தச் சீட்டக் குடுத்திரு. அவள் கட்டட்டும்”
குனிந்து கொண்டே இருந்த கிழவி தன் தலையை நிமிர்த்தி, “அக்கயிர பொட்டைக்கு இப்ப திண்டுக்கயும் வழியில்ல. அதுக்குள்ள அவள் என்னெண்டு சீட்டுக்கட்டுற? இந்த மார்கழி மாதக் கருத்தலப் பஞ்சத்துக்குள்ள அரிசியையும் குறச்சிப் போட்டாங்க. ஆரு சீட்டெடுத்துக் கட்டப் போறாங்க? நான் மடத்தனமாக்கொண்டு அந்தச் சீட்டில விழுந்திற்றன். நீ சொன்னது குரு புத்தி போல! அந்தப் புத்தி எனக்கில்லயே மனே. நீ வேணுமெண்டா அந்தச் சீட்ட எடுத்துக் கட்டு மனே!”
தன் தவறை உணர்ந்தவளாய் நம்பிக்கையோடு அன்னம்மாவின் முகத்தை நோக்கினாள் மாரிமுத்துக் கிழவி.
முற்றும்
காரைதீவை பிறப்பிடமாகக் கொண்ட சி.பி. சத்தியநாதன், சத்தியன் என்ற பெயரில் 1961 தொடக்கம் எழுத்துத்துறையில் ஈடுபட்டவர். சிறுகதைகளுடன் வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.
இவரது இக்கதை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்ட “கிழக்கின் 100 சிறுகதைகள் II” எனும் நூலில் வெளியானது. நன்றி
![]()