அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்!… கவிதை… ஜெயராமசர்மா

ஆதியில் ஆண்டவன் பூமியைப் படைத்தான்
அங்கே பற்பல உயிர்களைப் படைத்தான்
மனிதனும் அதற்குள் வந்துமே அமைந்தான்
மண்ணினை ஆண்டிடும் வளர்ச்சியும் பெற்றான்
பற்பல உயிர்களைப் படைத்திட்ட ஆண்டவன்
சிந்திக்கும் திறனை மனிதற்கே கொடுத்தான்
சிந்திக்கும் திறனால் முந்தினான் மனிதன்
முந்திய மனிதன் ஏந்தினான் அறிவை
ஐந்தறி வுடையவை அஃறிணை என்று
ஆறறி வுடையன உயர்திணை என்று
சொன்னவன் மனிதன் சொல்லிய படியே
தனக்குக் கீழே அனைத்தையும் வைத்தான்
வைத்தவன் அறிவைத் தனக்குரித் தாக்கினான்
விண்ணைத் தொட்டான் விதம்விதம் செய்தான்
அறிவால் அனைத்தையும் ஆள்கிறான் அவனியில்
அறிவுடன் அன்பை அணத்திடல் அவசியம்
அன்பும் அவசியம் அறிவும் அவசியம்
அன்பொரு கண்ணாய் அறிவொரு கண்ணாய்
இப்புவி பெற்றவர் மனிதரே ஆவார்
இரண்டும் இணைந்தால் எல்லாம் சிறக்கும்
அறிவுளார் அனைவரும் அன்பினைப் பேணார்
அறிவினால் அனைத்தும் பெருகிடும் என்குவார்
பிறரது துன்பினை அறியா அறிவினால்
பயனது உண்டா நினைத்துமே பாருங்கள்
அன்புடன் இணையும் அறிவே சிறந்தது
அன்பின் உருவமாய் ஆண்டவ னிருக்கிறான்
அன்பே சிவமென ஆன்றோர் மொழிந்தார்
அறிவு தெளிந்திட அன்புதான் அவசியம்
அறிவைக் கொண்டு அனைத்தும் பெறலாம்
அறிவுக்குள் ஆண்டவன் அகப்பட மாட்டான்
அன்பைப் பெருக்கினால் அகிலம் சிறக்கும்
அன்புக்குள் ஆண்டவன் அகப்பட்டு நிற்பான் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()