பயனுடை வழியில் பகர்ந்திட வேண்டும்!…. கவிதை… ஜெயராமசர்மா

ஒருமுறை கேட்டால் மறுமுறை கேட்கும்
பயனுடை வழியில் பகர்ந்திட வேண்டும்
அறிவினை தெளிவினை அளித்திடும் வகையில்
அமைந்திடும் வார்த்தைகள் அருமருந் தாகும்
வள்ளுவர் மொழிந்த வார்த்தைக ளனைத்தும்
வழியினைக் காட்டிடும் தெளிவுடை வார்த்தைகள்
வையம் இருப்பார் வள்ளுவம் படித்தால்
உள்ளந் தெளிந்து உயர்வார் வாழ்வார்
திருமூலர் செப்பிய வார்த்தைக ளெல்லாம்
அறிவும் தெளிவும் அளித்திடுந் தத்துவம்
ஒருமுறை அல்ல பலமுறை படித்தால்
தெளிவிலா அனைத்தும் செப்பமாய் தெரியும்
பெரியவர் சங்கரர் மொழிந்திட்ட வார்த்தைகள்
தெய்வத்தின் குரலாய் மலர்ந்துமே இருக்கு
எத்தனை தத்துவம் எத்தனை தெளிவு
மொத்தமாய் பெரியவர் வார்த்தையாய் குவிந்தன
ஒளியினை இறையாய் கண்டவர் வள்ளலார்
அவரது வார்த்தைகள் அகவிரு ளகற்றும்
வாழ்க வளமுடன் என்றுமே சொன்னால்
வள்ளலார் எங்கள் உள்ளமே அமர்வார்
ரமணரின் வார்த்தைகள் நானினைப் போக்கும்
ரமணரின் வார்த்தைகள் பக்குவம் காட்டும்
ரமணரின் வார்தையை நம்மன மேற்றினால்
இடர்படு இதயம் இறையினைக் காணும் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமைழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()