கதைகள்

குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர் – 15 …. தண்ணீர் …. மீனாசுந்தர்

நீங்கன்னு மட்டுமில்ல. இப்படி நடக்கும்னு நானே எதிர்பாக்கல. அமாவாசை நடுச்சாமம் ஊரே அசந்து தூங்கிக்கிட்டிருக்கறப்ப, கும்மிருட்டுல காணுற கொடுங்கனவு மாதிரி நிமிசத்துல அத்தனையும் நடந்து போச்சி. நெனச்சிப் பார்த்தா மனசு ரணமா கொதிக்குது. எவ்வளவோ சமாதானம் சொல்லிக்கிட்டாலும் என்னால அதை ஏத்துக்கவே முடியல. திரும்ப திரும்ப மனசு தொண்டையில சிக்கின முள்ளுமாதிரி இம்சிக்கிது. ஏன்னா..? நாங்க ரெண்டு குடும்பமும் அப்படி அன்னியோன்யமா பழகியிருக்கோம். ஒரு உப்பு பெறாத விசயத்துக்கு இவ்ளோ பெரிய களேபரம் பண்ணி, யாரு எவருன்னுகூட நிதானிக்காம, மொகத்துல அடிச்சமாதிரி எடுத்தெறிஞ்சி எப்படி அவங்களால பேச முடிஞ்சது? இந்த உறவே இனி வேண்டாம்ங்குறமாதிரி எப்படி அவங்களால நடந்துக்க முடிஞ்சதுன்னு என்னால புரிஞ்சிக்க முடியல. சத்தியமா மனசு நொந்து சொல்றேன்ங்க. எனக்கும் நாற்பத்தஞ்சி வயசாகுது. பத்தாவது, எட்டாவதுன்னு படிக்கிற ரெண்டு புள்ளங்களுக்குத் தகப்பன்ங்கறத மறந்திட்டு ஓன்னு தெருவுல நின்னு அழுதிடுவேனோன்னு பயமாருக்கு. உண்மையாவே என்னை என்னால கட்டுக்குள்ள வச்சிக்க முடியல. கைகாலு மட்டுமில்ல மனசும் நடுங்குது. வெந்து மடியறமாதிரி அந்தரத்துல, அதுவும் ஆபத்துல தொங்கறமாதிரி தவிச்சி உணர்ச்சிவசப்பட்ட நிலையில செய்வதறியாமத்தான் இப்படி உக்காந்திருக்கேன்.

காத்தாடி மின்னல் வேகத்துல சுத்துது. காத்துக்கும் குறையில்ல. வாரிவாரி இறைக்குது. ஆனாலும் புழுங்கிக் கொட்டுற இந்த வியர்வ துளி அடங்கினபாடில்ல. “பிசு பிசு” ன்னு உடம்பு பூரா ஒரே நசநசப்பு. அதைவிட மனசுதான் ரொம்ப பிசுத்துக் கெடக்குது. காலை நீட்டி சுவத்துல சாஞ்சமாதிரி முதுகுக்கு அணை கொடுத்து உக்காந்து, கையிலருந்த தேங்காய்ப்பூ துண்டால மொகத்த அழுத்தி தொடச்சிக்கிட்டேன். என்னமோ இந்தக் காலத்து மனுசங்கள நெனச்சா…?, அது சரி நெனக்கிறத்துக்குத்தான் என்ன இருக்கு? ஏன்ந்தான் அடுத்தவங்களப் பத்தி நாம நினைக்கணும்?

நம்ம வீடு, நம்ம புள்ளங்க, நம்ம பொண்டாட்டின்னு எல்லார் மாதிரியும் ஏன் நமக்கு வாழத் தெரியல. அந்தமாதிரி வட்டம் போட்டு வாழ ஏன் நமக்கு வர மாட்டேங்குது? அப்படி இருந்திருந்தா நாம ஏன் இப்படி வேதனை படப் போறோம்? என்னோட மனசே என்னை வெறுத்திட்டோ என்னவோ?! இல்லேன்னா சிலுப்புத் தண்ணிய எத்துறமாதிரி இப்படி முஞ்சில அடிச்சி கேள்வி கேக்குமா? பேசுமா?

என்ம் பேரு கனகரத்தினம்ங்க. இங்கே பக்கத்துல உள்ள அரசு மருத்துவமனைல தான் மருந்தாளுனரா இருக்கேன். மனைவி பேரு செல்லம்மாள். ஒரு பொண்ணு. ஒரு பையன்னு அளவான குடும்பம். பொண்ணு லாவன்யாதான் மூத்தவ. எம்.எஸ்.ஸி., உயிர் வேதியியல் படிக்கிறா. என்னோட விருப்பத்துக்கும் பையனோட விருப்பத்துக்கும் தகுந்த மாதிரி பையன் பி.ஏ., தமிழ் இலக்கியம் படிக்கிறான். இலக்கியம்ன்னா அவனுக்கு அவ்வளவு விருப்பம். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டின்னு கலந்துகட்டி அடிக்கிற ரகம். எங்கே போனாலும் பரிசோடத்தான் வருவான். பேரு தமிழ்ஒளி,

நாங்க குடியிருக்கற இந்தக் குடியிருப்பு வளாகத்துல மொத்தம் நாற்பது வீடுங்க. நகரத்தோட மையத்துல இருக்குறதால இந்த வீடுகளுக்கு எப்பவும் தனிமவுசு. பள்ளிக்கூடம், கல்லுரி, மருத்துவமனை, பேருந்து நிலையன்னு எல்லாமும் அருகருகே இருக்கறதால இந்த வீடுகளுக்கு வாடகை கொஞ்சம் அதிகம்னாலும் வசதிக்கு கொறச்சலில்லன்னு வீடு தேடி மக்கள் அலை மோதுறாங்க. அப்பறம் முக்கியமா தண்ணிப் பிரச்சனையில்ல. அதனால வீடு காலிங்கறதே இங்க பெரும்பாலும் இருக்காது. வந்தவங்க வசதியா சொந்தவீடு கணக்கா பல ஆண்டுகளா இருக்காங்க. ஒன்னு காலின்னு தெரிஞ்சாலும் மறுநாளே வந்து குழுமிடுவாங்க.
நாங்க இங்க குடி வந்து ஏழு வருசம் ஆச்சுது. குடியிருப்புலேயே கடைசி வீடு எங்களோடதுதான். நாங்க வீடு பார்க்க வந்தப்ப அந்த வீடுதான் காலியா இருந்திச்சி. அரைகுறை மனசோடதான் கடைசி வீட்டுக்குக் குடி வந்தோம்.

ஆனா இப்ப பழகிப் போனதுமில்லாம ரொம்ப பிடிச்சிம் போயிருச்சி. இடைப்பட்ட காலத்துல முன்னாடி இருக்கற வீடுக காலியானாலும் எங்களுக்கென்னவோ அங்கே போவ மனசில்ல. எப்பவும் வீடு காலியாகறப்ப ஏற்கனவே இருக்கறவங்க மாத்திக்கிறதுன்னா மாத்திக்கிடலாம். முன்னுரிமை உண்டு. வர்றவங்க கடைசி வீட்டுக்கு போயிடுவாங்க. அப்படிப் பல வாய்ப்புகள் வந்தும் நாங்க போகல. இந்த வீட்டுலயே தொடர்ச்சியா இருந்திட்டோம். ஒரு இடம் பழகிப் போயிடுச்சின்னா அவ்வளவுதான் எங்களுக்கு. அத்தோட ஒன்னுக்குமண்ணா கலந்து போயிடுற ரகம்.

வேலக்கி வந்ததுலேர்ந்து இது அஞ்சாவது ஊரு. அஞ்சம் அஞ்சு தினுசு. நிர்வாக மாறுதல், விருப்ப மாறுதல்ன்னு எல்லா ஊரையும் சுழற்றியடிச்சி சுத்தி வந்தாச்சு. என்ன ஒரு வித்தியாசம். எல்லா ஊர்லயும் மூனுநாலு வருசத்துக்கு மேல இருந்ததில்லை. இங்கதான் ஏழு வருசம் ஓடிப் போயிருச்சி. நேத்திக்கி வந்தமாதிரிதான் இருக்கு. எப்படிப் போச்சின்னே தெரியல. ஆனாலும் இந்த ஊரு அலுக்கல. பழக பழக பாலும் புளிக்கும்ங்கறது எங்களுக்குப் பொருந்தல. வாழ வாழ ஆசையாத்தான் இருக்கு. அதுக்கு முக்கியமான காரணம்னா இங்கருக்கற தண்ணிதான். அது கடவுளோட பரிபூரணம்.

சின்ன வயசுலேர்ந்தே தண்ணிப் பஞ்சத்துல அடிபட்டவன் நான். தண்ணியில்லாம இளம்வயசு வாழ்கை முழுசும் தத்தளிச்ச எனக்கு, இங்க பொங்கற தண்ணிய கண்டு ஆச்சர்யம் தாங்க முடியல. தண்ணிலயும் உப்பில்லா தண்ணிங்குறது பூர்வஜென்ம புண்ணியம். சோழநாடு சோறுடைத்துன்னு சும்மாவா சொன்னாங்க? தண்ணியில்லாம நெல்லு ஏது? சோறு ஏது? ஐம்பது அடியிலேயே என்னமா கொப்பளிக்குது தண்ணி?!. சுத்துப்பட்ட கிராமங்கள்ல எந்நேரமும் பச்சப்பசேல்னு வெவசாயம் கொழிக்குது. மூனுபோகமும் வயல்கள்ல பொன்னுமாதிரி மின்னுதே நெல்லு?!. உண்மையிலேயே இந்த ஊரு, இந்த பூமி வெறும் மண்ணு இல்ல. வாழ வைக்கிற தெய்வம்.

நான் பொறந்த ஊரு ஒரு அப்பட்டமான குக்கிராமம். இராமநாதபுரத்துக்கு அங்கிட்டு கருவக்காடுகளா மண்டிக்கெடக்கற வெக்கை மண்ணு. எப்பப் பார்த்தாலும் வெயிலு மண்டய பொளக்கும். பூமி வறண்டு பாளம்பாளமா பொளந்துக்கிட்டு நிக்கிம். பச்சன்னு எடுத்துக்கிட்டா வெறுங் கருவக்காட்டைத்தவிர வேற எதுவுமில்ல. அதுங்ககூடச் சில இடத்துல கருகிப்போய் நிக்கிதுன்னா அது எவ்வளோ வெக்கைபூமின்னு நீங்களே கற்பனை பண்ணிப் பாத்துக்கிடுங்க.
பிரதான சாலையிலேர்ந்து ஒரு ஒத்தயடிப் பாதையில நாலு கிலோமீட்டர் நடந்தே போவணும் ஊருக்கு. ஒத்தை பஸ்சும் மணிக்கணக்குலதான் வரும். விட்டுட்டா திரும்பவும் ஒருமணி நேரம், ரெண்டு மணிநேரம்ன்னு காத்துக் கெடக்கணும். பொறந்த மண்ணைப்பத்தி கேவலமா பேசறேன்னு பார்க்காதீங்க. மனசுக்கு கஸ்டமாருந்தாலும் உண்மையை மறைக்க முடியல. விரும்பல. அவ்வளவு போராட்டமான வாழ்க்கை மக்களுக்கு அங்க.

நல்லா ஞாபகமிருக்கு. காலங்காத்தால அஞ்சி மணிக்கே எல்லாப் பெண்களும் எழுந்திடுவாங்க. ஆளுக்கு ரெண்டு மண்பானைய எடுத்துக்கிட்டு வேகவேகமா நடக்க ஆரம்பிச்சிடுவாங்க. இடுப்புல ஒண்ணு, தலையில ஒண்ணுன்னு வச்சிக்கிட்டு பேசிக்கிட்டே நடப்பாங்க. அங்கருந்து மூணு கிலோமீட்டர் தாண்டிதான் ஒரு தண்ணி ஊத்து இருக்கு. அங்கேயும் காலையிலேயே போனாத்தான் உண்டு. கொஞ்சம் தண்ணி எடுக்க முடியும். எடுத்துக்கிட்டு வர்ற ரெண்டு கொடம் தண்ணிதான் முழு நாளுக்கும். சமைக்கிறத்துக்கு கைகால், மொகம் கழுவுறத்துக்கு, குடிக்கிறத்துக்குன்னு எல்லாத்துக்கும் ஆதாரம் அதுதான்.

ஆத்திர அவசரத்துக்கு யாரு வீட்லயும் ஒரு டம்ளர் தண்ணீர் தரமாட்டாங்க. உசிர வேணும்னாலும் எடுத்துத் தருவாங்க. தண்ணி எடுத்துக்கிட்டு வீடு வந்து சேர்றத்துக்குள்ள ஒரு கொடம் வியர்வை கொட்டிடும் எல்லா பொம்பளக்கிம். கட்டிட்டுப்போன நூல்புடவை ஒழுகுற தண்ணியில முழுசா நனஞ்சி தொவச்சமாதிரி ஈரமாயிடும். இப்படித்தான் ஒருநாளு எல்லாரும் தண்ணி எடுத்திட்டு வர்றாங்க. அம்மாதான் வேகவேகமா முன்னால ஓடி வந்திச்சு. இனிமே வந்து பண்டு பாத்திரம் கழுவி, சமைச்சி வச்சிட்டு, தூக்குல கொஞ்சம் கஞ்சிய ஊத்திக்கிட்டு ஓடணும் வேலக்கி. அந்த அவசரம் அம்மாவுக்கு.

ஒத்தயடிப்பாதை முடிஞ்சி தெருவுக்குள்ள திரும்பற நேரம் ஆன்னு அலறினிச்சாம் அம்மா. அவ்வளவுதான். தலையிலருந்த மண்ங்கொடமும், இடுப்புல இருந்ததும் கீழே விழுந்து சுக்குநூறா செதறி சில்லுகளா கெடக்கு, தண்ணிய கொஞ்ச நேரத்துல பூமி உறிஞ்சி தன்னோட நெடுநாள் தாகத்தைத் தீத்துக்கிட்டுச்சி. அம்மாவுக்கு நீளமான கருவேல முள்ளொன்னு நட்டநடு பாதத்துல நறுக்குன்னு ஏறிக்கெடக்கு, முள்ள புடுங்கி எடுக்கக்காட்டியும் உசிரு போயி உசிரு வந்திருச்சி. ரெத்தம் குபுகுபுன்னு பொங்கி ஓடுது. எல்லாருக்கும் என்னவோபோல ஆயிருச்சி. அம்மா ஓன்னு அழ அரம்பிச்சிட்டு. முள்ளு குத்துன வலி தாங்கமுடியாம அம்மா அழுவுதுன்னு பதச்சி ஓடிப் பாத்தா., ஊறின மண்ண கையில அள்ளிக்கிட்டு தண்ணீ… எந்தண்ணீ… எல்லாம் போயிட்டே., அய்யோ… வயித்த எரியுதே… ஆண்டவா ஏன்டா என்னய இப்படிக் கருக்கல்லயே சோதிக்கிறே?ன்னு கதறிக்கிட்டு கெடக்கு.

அம்மாவ சமாதானப் படுத்தவே முடியல. ஓடிப் பார்த்த எனக்கே கண்ணு சுலங்கிப் பொலபொலன்னு கொட்டுது. என்ன பேசறதுன்னே தெரியல. மூணு கிலோமீட்டர் தூரம் பாரம் சொமந்து வந்து இங்குன எல்லாம் ஒரு நொடியில ஒன்னுமில்லாம போச்சின்னா எவ்வளவு கொடுமை? பத்துமாசம் கருவ வயித்துல சுமந்து பத்தாம்மாசம் கொழந்த பொழக்காம போனா எப்படியிருக்கும் தாயிக்கு? அதைத் தாங்கிக்கிட முடியுமா? அந்த ரணத்தை எதைக் கொண்டாவது ஆத்திக்கிட முடியுமா? அம்மாவுக்கும் அதே நிலைமை தான். அப்புறம் என்ன பண்றது ? கூட வந்த பொம்பளங்க அம்மாவ பாத்து இரக்கப்பட்டு ஆளுக்கு கொஞ்சம் தண்ணி ஊத்தி ஒரு கொடம் கொடுத்தாங்க. அம்மாவுக்கு அந்த வேதனை ரொம்ப நாளு இம்சிச்சிக்கிட்டே இருந்திச்சி.

அதை இப்ப நெனச்சாலும் கண்ணுல தண்ணி முட்டுது. ரெண்டு கொடம் தண்ணியா செதறி கெடந்திச்சி? அம்மா உசிரில்ல செதறிக் கெடந்திச்சி.? அந்த வேதனையிலதான் தண்ணின்னா எனக்கு தெய்வம். இங்க குளம் குட்டைன்னு கெத்கெத்ன்னு தெளிஞ்சி அலையாடிக் கெடக்கறத பார்த்தா என்னையுமறியாம கையெடுத்திடுவேன். இந்த ஊருல வேற எவ்வளவோ சிறப்புங்க இருந்தாலும் வஞ்சகமில்லாம எங்கப் பார்த்தாலும் பொங்கற தண்ணிய பார்த்துப் பிரமிச்சிப் போறேன். அதை என்னால சிலாகிச்சி பேசாம இருக்க முடியலை.

இந்தக் குடியிருப்புல இருபத்து நாலு மணிநேரமும் எப்ப குழாய திறந்தாலும் தண்ணி அருவியா கொட்டுது. அது பரிசுத்தமான கடவுளோட ஆன்மாவல்லவா? அப்படியே தண்ணிய அள்ளி முத்தம் கொடுக்கனும் போலருக்கும். தண்ணி இப்படி கெடக்கிறதுங்குறது இறைவன் வண்டல் நிலத்துக்குக் கொடுத்திருக்கற வரம். அந்த வரத்தை நாம தவறா பயன்படுத்தக் கூடாது. அளவா பயன்படுத்தணும். இப்பவும் நான் தேவைக்கு தகுந்தமாதிரிதான் தண்ணிய பயன்படுத்துறேன். என் மனைவி, புள்ளங்களும் அப்படித்தான். இருக்குதுங்குறத்துக்காக கண்டபடி தண்ணிய வீணடிச்சா வர்ற தலமுறைக்கு நாம செய்யுற பெரிய துரோகம் அது ஒன்னுதான்.
ஆனா இங்கருக்கறவங்க அப்படியில்ல.. பஞ்சமில்லாம தண்ணி பொங்குதுங்குறதால அதையொரு பொருட்டா நெனக்கவே மாட்டேங்குறாங்க. நானே பல முறை பார்த்திருக்கேன். பல இடங்கள்ல தெருவுலருக்கற தண்ணிக்குழாய மூடாம சாலை பூராவும் வீணா தண்ணியோடிக் கெடக்கும். அப்பல்லாம் எனக்கு இதயமே சிதறி ரோட்டுல ரத்தமா கெடக்குறமாதிரி இருக்கும்.

இந்தக் குடியிருப்புல எல்லாருமே அண்ணன்ந்தம்பியாதான் பழகுறோம்ன்னாலும் பக்கத்து வீட்லதான் கொஞ்சம் நெருக்கமா இருப்போம். அதுக்கு காரணம் அங்கருக்கற ரெண்டு சின்னக் கொழந்தங்கதான். எட்டு வயசாகுற கவினுக்கும். நாலு வயசாகுற நவீனுக்கும் பொழுதுபூராவும் எங்க வீட்லதான் வாசம். விளையாட்டு, கொண்டாட்டம்ன்னு வீட்டையே ரெண்டு படுத்திடுவானுங்க. வெளில போயிட்டு வர்றப்பகூடத் திண்பண்டம் எதையாச்சும் வாங்கிட்டு வந்து கொடுக்குறதும், அதுங்களோட சேர்ந்து வெளயாடறதுமா தான் எனக்கே பலநேரம் பொழுது போவும்.

அந்தப் புள்ளங்கமேல அவங்க அம்மா,அப்பா எவ்வளவு உரிமை எடுத்துப்பாங்களோ அந்தளவுக்கு நாங்களும் இருப்போம். அவங்க அம்மா, அப்பா அடிச்சா கூட அழுதுகிட்டு நேரா இங்கதான் ஒடி வருவாங்க. மத்தபடி நல்லது கெட்டதுன்னு கிட்டத்தட்ட ரெண்டு குடும்பமும் உறவுக்காரங்க மாதிரிதான் பழகிக்கிட்டு வந்தோம்.

அன்னிக்கும் அப்படித்தான். கவினு தண்ணிக்குழாய தொறந்து ஊத்துற தண்ணியில வெளயாண்டுக்கிட்டுருக்கான். கைய தண்ணில நனைச்சி ஆட்டியாட்டி வீணடிக்கிறான். தண்ணி ஓடி பக்கத்துல கொளமா தேங்கிக் கெடக்கு. எனக்கு அதைப் பாத்ததுமே தாங்க முடியல. என்னையும் அறியாம பரபரன்னு ஓடினேன்.

“எலே கவினு.. உனக்கு என்னடா புத்தி பேதலிச்சா போச்சு?” ன்னு சொல்லிக்கிட்டே மொதுகுல லேசா விளையாட்டுக்கு ஒரு தட்டு தட்டினேன்.!

அவ்ளோதான். பலமா அடிச்சமாதிரி ஐயோ அம்மான்னு அவன் அலறினான். ஓன்னு ஒரே அழுகை. தேம்பிக்கிட்டே வீட்டுக்குப் போனான். நான் குழாயத் திருகி அடச்சிட்டு திரும்பினேன். தரதரன்னு சட்டயப் புடிச்சி இழுத்துக்கிட்டு அவங்கம்மா ஓடி வந்தாங்க.

“யார கேட்டுகிட்டு எம்புள்ளய நீங்க கைநீட்டி அடிச்சீங்க?”ன்னாங்க. வார்த்தைகள்ல அவ்வளவு உஷ்ணம். நான் இதை எதிர்பார்க்கலை. எனக்குப் பெரும் அதிர்ச்சியாருந்திச்சி. இருந்தாலும் சமாளிச்சிக்கிட்டு, “இல்ல… கவினம்மா…” ன்னு நான் சொல்றதுக்குள்ளயே அவங்க முந்திக்கிட்டாங்க.

“இது என்ன உங்க வீட்டு தண்ணிக் குழாயா? எங்க வீட்டுலருக்கற குழாதானே? எம்புள்ளங்க வெளயாடுது. இல்ல அதை உடைக்கிது. அதுல உங்களுக்கு என்ன வந்திச்சி?” ன்னாங்க.
“வெளயாடட்டும் வேண்டாம்ங்கள, தண்ணி வீணா போவுதேன்னுதான், சும்மா வௌயாட்டுக்குத்தான் தட்டினேன் கவினம்மா”.

“ஆமா… பெரிய்ய ஒலகத்தில இல்லாத தண்ணி வீணாவுது. பெரிசா பேச வந்திட்டீங்க. அப்படியே இருந்தாலும் அதைக் கேட்க நீங்க யாரு? அதை வீட்டுக்காரர் கேக்கட்டும். நாங்க பேசிக்கிடறோம். நீங்களும் எங்களமாதிரி வாடகைக்குதான குடியிருக்கீங்க. உங்களுக்கென்ன உரிமை இருக்கோ அதுபோலத்தான எங்களுக்குமிருக்கு. சும்மா பெனாத்திக்கிட்டு திரியாம பொத்திக்கிட்டுப் போங்க ஆமா.!” ன்னதும் நான் சுக்குநூறா உடைஞ்சிப் போயிட்டேன். முன்னபின்ன பாக்காதவங்ககிட்ட நடந்துக்கறமாதிரி எடுத்தெறிஞ்சி பேசினாங்க.
அந்த நேரம் பார்த்து எம்மனைவி அங்க வர அவளால அதைத் தாங்கிக்க முடியல. “பேசறத அளந்து பேசுங்க..” ன்னு அவ சொல்லவும், கவினப்பா வீட்டுக்குள்ளேர்ந்து வெளில சீறிக்கிட்டே ஓடி வந்தாரு.

“இங்க பாரும்மா.. என்னத்த அளந்து பேசச் சொல்ற? மரியாதை கெட்டுப் போயிரும் ஆமா.. உம் புருசனுக்கென்ன பெரிய சண்டியருன்னு நெனப்பான்னு கேட்டதும், தெகச்சிப்போயி அப்படியே நின்னுட்டேன். திரும்பவும் அவரே சொன்னாரு. நானும் கொஞ்ச நாளா பாத்துக்கிட்டேதான் இருக்கேன். எப்பப் பார்த்தாலும் ஏன் அந்தக் குழாயில தண்ணி வீணா ஊத்திக்கிட்டிருக்கு.? உங்க வீட்டுக்குள்ள குழா தொறந்திருக்கிற சத்தம் கேக்குது. அதுஇதுன்னு எப்பப் பார்த்தாலும் எங்க மேல கொற கண்டு புடிக்கிறதுதான் உங்களுக்கு வேலயா? சின்னப்புள்ள வெளயாடிக்கிட்டு இருக்கிறதுல உம் புருசனுக்கு என்னம்மா அப்படிப் பொத்துக்கிட்டு வந்திருச்சி” ன்னு அவர் பேசிக்கிட்டே இருந்தாரு. ரெத்தமே சுண்டுனமாதிரி துடிச்சேன் நான். குடியிருப்பே கூட்டமா கூடி நின்னு வேடிக்கை பாத்திச்சி. என்னமோ பெரிய தப்பு பண்ணிட்டமாதிரி ஒரே அவமானமா போயிட்டு. என்னால பதில் பேச முடியல, குடியிருப்புலருந்த ரெண்டுமூனு பேரு வந்து சமாதானப் படுத்தி எங்களைப் போகச் சொன்னாங்க… அவங்களயும் ரெண்டுமூனு பேரு அழச்சிக்கிட்டுப் போனாங்க.

வீட்ல வந்து உக்காந்தா மனசு கெடந்து உலைநீரா கொதிக்கிது. அவங்க கேட்ட வார்த்தங்க திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து குத்துனிச்சிங்க. எவ்வளவோ அந்நியோன்யமா பழகிக்கிட்டு இருந்தோம். எல்லாத்தையும் ஒருநொடில மறந்திட்டு இப்படி எடுத்தெறிஞ்சிப் பேச எப்படி மனசு வந்திச்சின்னு மனசு புழுங்கி தவிச்சிச்சி. குடியிருப்புலருந்த ஏழு வருசத்து சுகபோக வாழ்க்கை அன்னியோட முடிவுக்கு வந்திச்சி. அதுக்கு பெறகு அங்க இருக்க மனசு ஒப்பல. அந்தப் புள்ளங்களும் எங்க வீட்டுக்கு இப்ப வர்றதில்லே. அவங்களும் பேசறதில்ல. மனஇறுக்கத்தோட எவ்வளவோ காலத்துக்கு இப்படியே இருக்க முடியும்? அந்த மாசத்த செரமப்பட்டு அங்கேயே ஓட்டினோம்.

தூரமாருந்தாலும் பரவாயில்லேன்னு தனியாருக்கறமாதிரி ஒரு வீடு பாத்தோம். இனிமே கூட்டுக்குடியிருப்பு நமக்கு ஒத்து வராது. போன ஞாயிற்றுக் கிழமன்னிக்கி பாலும் காய்ச்சி குடிச்சிட்டோம். இதோ இன்னிக்கு பொருளெல்லாம் அள்ளி லாரில ஏத்திட்டோம். ஏழு வருசம் வாழ்ந்த இடம். செல்லம்மா லேசா கண்கலங்கி அழுதா. என்னாலயும் தாங்க முடியல. கண்ணு ஒடைஞ்சிறக் கூடாதுன்னு வைராக்கியமா ஆத்திரத்த அடக்கிக்கிட்டேன். வீட்ட விட்டுக் கெளம்பி வெளில வர்றப்ப கடைசியா ஒருமுறை அந்தத் தண்ணிக் குழாயைப் பார்த்தேன். அது ரொம்ப அமைதியா எங்களையே பார்த்துக்கிட்டு இருந்திச்சி.

நான் கண்ண எடுக்கிறதுக்குள்ள குழாயோட நுனியிலருந்து ஒரு சொட்டு தண்ணி அந்த நேரம் பார்த்துக் கீழ விழுந்திச்சி. என்னவோ நினைக்கத் தோணுச்சி. எங்களுக்காகக் குழாய் அழுவுதோ என்னவோ?!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *