இலக்கியச்சோலை

பகிர்வுகள் …. கலை இலக்கியப் பத்தித் தொடர்… பகிர்வு – 10 … செங்கதிரோன்

‘இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்’

எழுத்தாளர் அமரர். ‘வ.அ’ வின் பிறப்பின் நூற்றாண்டு நினைவாக மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கமும் அலைஓசைப்பதிப்பகமும் இணைந்து நடாத்திய வ.அ இராசரெத்தினத்தின் ‘இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்’ சிறுகதைத் தொகுப்பின் வெளியீடு 11.02.2026 அன்று மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க மண்டபத்தில் அதன் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக பேராசிரியை பாரதி புளோரன்ஸ் கென்னடி (பணிப்பாளர், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம்) – திருமதி. நிதர்ஷனி மகேந்திரகுமார் (பிரதிக்கல்விப் பணிப்பாளர், மட்டக்களப்பு கல்வி வலயம்) – ஜனாப் சிராஜ் மஷ்ஹ_ர் (இலக்கிய அரசியல் மனிதநேய செயற்பாட்டாளர்) – செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் (எழுத்தாளர், இலக்கிய அரசியல் செயற்பாட்டாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

நூல்வெளியீட்டுரையை ‘வ.அ’வின் புதல்வன் அருட்பணி அ.அ.நவரெத்தினம் அவர்களும் மதிப்பீட்டுரையை திருமதி.ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் (ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர், தமிழ்க் கற்கைகள்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம்) அவர்களும் நிகழ்த்தினர்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வுடன் இணைந்ததாக ‘வ.அ.இராசரத்தினக் காவியம்’ (நெடுங்கவிதை – கவிஞர் அனஸ்முகைதீன்), ‘தேடல்கள்’ (கவிதைத்தொகுப்பு – இ.எ.விஜயநாதன்) ஆகிய இரு நூல்களினதும் வெளியீடும் அறிமுகமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

காவிய நூலின் நயவுரையை ஜனாப் றியாஸ் அகமட் (எழுத்தாளர், இலக்கிய, சுற்றுச்சூழல் செயற்பாட்டளார்) அவர்களும் கவிதை நூலின் நயவுரையை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் (கவிஞர், விவாதக்கலைஞர், இலக்கிய ஆய்வாளர்) அவர்களும் ஆற்றினர்.

‘வ.அ’ என்று ஈரெழுத்தால் இலக்கிய உலகில் அறியப்பெற்ற அமரர். வயித்தி அந்தோனி இராசரெத்தினம் அவர்களது பிறப்பின் நூற்றாண்டில் (1925-2025) அவரை நினைவுகூரும் வகையில் அவரால் எழுதி வெளிவந்தும் வெளிவராததுமான சில சிறுகதைகளைத் தேடித்தொகுத்து அவரது புதல்வன் குச. நவாஜி என அறியப்பெறுகின்ற அருட்பணி.அ.அ.நவரெத்தினம் (சிரேஷ்;;ட விரிவுரையாளர், கிழக்குப் பல்கலைக்கழகம்) அவர்கள் இந்நூலை வெளியிட்டிருக்கிறார்.

‘வ.அ’ அவர்களின் முதலாவது சிறுகதைத்தொகுப்பு அவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டிக்கொடுத்த சிறுகதையாகிய ‘தோணி’யின் பெயரில் பதினெட்டு சிறுகதைகளை உள்ளடக்கி 1962 இல் எம்.ஏ.ரஃமானின் அரசு வெளியீடாகக் கொழும்பிலிருந்து வெளிவந்தது.

இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு நூலாக ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ ஐம்பது சிறுகதைகளை உள்ளடக்கி 1996 இல் ‘மித்ர’ வெளியீடாகச் சென்னையிலிருந்து வெளிவந்தது.

மூன்றாவது தொகுப்பான ‘கொட்டியாரக் கதைகள்’ பதினாறு சிறுகதைகளை உள்ளடக்கி 1999 இல் மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் வெளியீடாக வந்தது.

நான்காவது தொகுப்பாக சங்க இலக்கியச் செய்யுள்களை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகை நிலங்களை மையப்படுத்தி இருபது கதைகளைக் கொண்டதாய் ‘திணைக்கதைகள்’ நூல் 2000 இல் எம்.டி.குணசேனா பதிப்பகத்தால் வெளியிடப்பெற்றது.

11.01.2026 அன்று வெளியிடப்பெற்றுள்ள ‘இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில் நூல்’ ஐந்தாவது சிறுகதைத்தொகுதியாகும். இந்நூலுக்கு இப்பத்தி எழுத்தாளர் செங்கதிரோன். த. கோபாலகிருஸ்ணன் ‘மகன் தந்தைக்காற்றிய உதவி’ எனும் தலைப்பில் வழங்கியிருந்த மதிப்பீட்டுரை இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

மகன் தந்தைக்காற்றிய உதவி

‘வ.அ’ அவர்களின் மகன் அ.அ. நவரத்தினம் (நவாஜி) அவர்கள் தனது தந்தையாரின், இதுவரை வெளிவந்த சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெறாத பதினெட்டு சிறுகதைகளைத் தேடிச் சலித்தெடுத்து ‘மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்’ என்று அவரே கூறும் படியாக ‘இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்’ எனும் இவ் சிறுகதைத் தொகுதியைப் பதிப்பித்துத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்திருக்கிறார்.

இந்நூலின் அச்சுப்பிரதியைக் கையிலெடுத்து நவாஜி அவர்களின் பதிப்புரையைப் படித்தபோது அவரது தந்தை வ.அ.அவர்கள் 1994இல் வெளியிட்ட ‘இலக்கிய நினைவுகள்’ நூலின் ‘காணிக்கை’ வரிகளைத் தேடி மீண்டுமொருமுறை படித்தேன். அவ்வரிகள் இவைதான்.

“என் பின்னே வாருங்கள். இன்று தொடக்கம் உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக்குவேன்.” என்ற இறைமகனின் வார்த்தைகளைக் கேட்டு அவரைப் பின்சென்ற மீனவனின் பாதையிற் செல்ல மனங்கொண்ட என் மைந்தன் அகுஸ்தீன் நவரத்தினம் குருவாக திருநிலைப்படுத்தப்படும் இனிய நினைவுகளுக்கு என் இலக்கிய நினைவுகள் காணிக்கை.
24,08, 1994

அன்று (அற்றைத்திங்கள் அவ்வெண் நிலவில்) தந்தை மகற்காற்றிய உதவி ‘இலக்கிய நினைவுகள்’ எனின் இன்று மகன் தந்தைக்காற்றிய உதவி ‘இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்’ ஆகும். காலம் தன் கடமையில் கண்ணாகவே இருக்கிறது.

நவாஜி அவர்கள் இச்சிறுகதைத் தொகுப்புக்குரிய மதிப்பீட்டுரையை எழுதித்தரும்படியாக என்னை அலைபேசியில் கேட்டபோது சம்மதித்தேன். அவர் என்னைக் கேட்டதற்கும் உடனே நான் சம்மதித்ததற்கும் ஒரு பின்னணியிருக்கிறது.

நான் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் விடுதியில் தங்கியிருந்து (தற்போதைய கிழக்குப்பல்கலைக்கழகக் கட்டிடதொகுதி) கல்வி கற்ற சமகாலத்தில் (1962-1968) எனக்குச் சில வருடங்கள் ‘ஜூனியர்’ ஆகப் படித்த வ.அ. அவர்களின் மகள் வசந்தியைப் – நவாஜியின் மூத்த சகோதரியைப் பார்ப்பதற்காக மூதூரிலிருந்து வருகை தரும் சந்தர்ப்பங்களில் சிலவேளை ஆண்கள் விடுதியில் வ. அ. இளைப்பாறிச் செல்வார். அப்போது மூதூர்-கிளிவெட்டி-திருகோணமலை பிரதேசங்களிலிருந்தும் பல மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்து கற்றுக்கொண்டிருந்தனர். அம் மாணவர்கள் பலரை வ. அ. இற்கும் தெரிந்திருந்தது. அப்போதெல்லாம் வ. அ. அவர்களுடன் மரியாதை கலந்த உணர்வுடன் ஊடாடியிருக்கிறேன். அப்போது எனக்குப் பதின்மவயது. அவரது நெருங்கிய இலக்கிய சகாவான எழுத்தாளர் எஸ்.பொ. அவர்கள் வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகவிருந்தார்.

பின்னாளில் நான் கல்முனை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த 1970-1975 காலகட்டத்தில் வ.அ.அவர்கள் இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காகக் கல்முனைப் பிரதேசத்திற்கு அடிக்கடி வந்து செல்வார். அப்போதும் அவருடன் நான் கவிஞர் நீலாவணன் – கவிஞர் மு. சடாட்சரன் – கவிஞர் சண்முகம் சிவலிங்கம் – எம்.ஏ.நுஃமான் – மருதூர்கொத்தன் – மருதூர்க்கனி – அன்புமுகைதீன் – கல்முனைப் பூபால் போன்ற கல்முனைப் பிரதேச இலக்கியவாதிகள் சகிதம் மரியாதை கலந்த உணர்வுடன் ஊடாடியிருக்கிறேன். அப்போது நான் இருபத்ததைந்து வயதுக்குட்பட்ட இளைஞன். இப்போது எனக்கு எழுபத்ததைந்து வயதாகிறது. நவாஜி அவர்கள் என்னிடம் மதிப்பீட்டுரை கேட்டதற்கு இந்தப் பின்னணி மட்டும் காரணங்களாகிவிட முடியாது.

கவிஞர் நீலாவணன் எழுதி கையெழுத்துப் பிரதியாக அவரது வீட்டில் கிடந்த முற்றுப்பெறாத காவியமான ‘வேளாண்மை’ யை, நீலாவணனின் மரணத்தின் பின்பு (நீலாவணன் 11.02.1975 அன்று மரணித்தார்) அக்காவியத்தின் கையெழுத்துப் பிரதியைக் கவிஞர் மு.சடாட்சரன் மூலம் திருமதி நீலாவணனிடமிருந்து பெற்று மூதூரிலே தான் சொந்தமாக வைத்திருந்த சிறு அச்சுக்கூடம் மூலம் (தங்கம் வெளியீடு, திரிகூடம், மூதூர்) 1982 இல் நூலாக ‘வ.அ.’ அவர்கள் வெளிக்கொணர்ந்தார். அவ் ‘வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சியாக ‘விளைச்சல்’ எனும் குறுங்காவியத்தை எழுதிப் பின்னாளில் 2017ல் நான் நூலாக வெளியிட்டேன்.

எனது பதின்மூன்று சிறுகதைகள் அடங்கிய ‘யாவும் கற்பனையல்ல’ எனும் சிறுகதைத்தொகுதியின் வெளியீட்டுவிழா 02.12.2023 அன்று மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது அந் நிகழ்வில் நவாஜி அவர்களும் அதிதிகளிலொருவராகக் கலந்து சிறப்பித்தார். இந்நூல் அதுவரை இலக்கியப்பரப்பில் கவிஞனாக அறியப்பட்ட என்னைச் சிறுகதையாசிரியனாகவும் அடையாளப்படுத்தியுள்ளது என அப்போது அவர் கருதியிருப்பார் போலும்.
நவாஜி அவர்களின் இளவல் கவிஞர் இரா. மேரியனின் ‘மூன்றாவது கண்’, ‘கரைதொடும் அலைகள்’ எனுமிரு கவிதை நூல்களின் வெளியீடு 16.02.2025 அன்று மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றபோது ‘மூன்றாவது கண்’ பற்றிய நயவுரையை நான் ஆற்றியிருந்தேன்.

‘இற்றைத்திங்கள் இவ்வெண் நிலவில்’ எனும் இந்நூலின் அச்சுப்பிரதியைக் கையிலெடுத்ததும் மேற்கூறப்பட்ட விடயங்களெல்லாம் என் நினைவு வெளியை ஆக்கிரமித்துக் கொண்டன.

இலக்கிய உலகில் மாபெரும் இலக்கிய ஆளுமையாகத் திகழ்ந்த குறிப்பாகச் சிறுகதை இலக்கியத்தில் உச்சம் தொட்ட ‘வ. அ’ அவர்களின் சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு நான் மதிப்பீட்டுரை வழங்குவதா – ‘நரிவால் கொண்டு கிணற்றாழம் பார்ப்பதா’ என்றுதான் முதலில் எண்ணத்தோன்றியது. எனினும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகளின் மதிப்பீட்டுரையாக அல்லாது ‘வ. அ’ இன் மீது கொண்ட ‘மதிப்புரை’ யாக எழுதி எனது கடப்பாட்டை நிறைவேற்றலாமென எண்ணித் துணிந்தேன்.

இத்தொகுப்பிலுள்ள ‘கோணற் தராசு’ – ‘விதியின் வழி’ – ‘கல்’ ஆகிய மூன்று கதைகளும் காதலர்களிடையே நிலவும் உளவியல் சமாச்சாரங்களை ஊடுபொருளாகக் கொண்டுள்ளன.

நான்காவது கதையான ‘அவனும் மனிதன்தான்’, தொழிற் சாலையொன்றில் வேலைபார்க்கும் குடிகாரக்கணவன் – அவன் மனைவி, இருவருக்குமிடையே துன்பகரமாக ஆரம்பித்து இன்ப கரமாக முடிகின்ற ஒரு சம்பவத்தைச் சொல்வதினூடாக ஏழ்மை வாழ்க்கையிலும் அக்கணவன் மனைவியிடையே அகவயமாகக் காணப்படும் வஞ்சகமற்ற அன்பின் அன்னியோன்யத்தை வாசகனுக்குப் புரிய வைக்கிறது.

ஐந்தாவது கதையான ‘பிரிவின் துயர்’ வருடம் முந்நூற்றைம்பத்தைந்து நாட்களும் கொழும்பில் வேலைபார்க்கும் ஒருவன் பத்துநாள் வருட இறுதி விடுமுறைகாலத்தில் தனது ஊரில் (திருகோணமலை பிரிவில் மகாவலிகங்கை தீரத்தில் ஓர் அழகான கிராமம்) இருந்து விட்டு விடுமுறை கழிந்து விருப்பமில்லாமல் மீண்டும் கொழும்பிற்கு திரும்பும்போது ஊரையும்-மனைவியையும் பிரியும்போது அவனடையும் துயரமான உணர்வுகளைக் கலாபூர்வமாகக் காட்டுகிறது.

ஆறாவது கதை ‘மாப்பிள்ளை உபசாரம்’ கிராமத்திலிருந்து கொழும்புக்கு மாற்றம் பெற்றுச் செல்லும் பிரமச்சாரியாக வாழும் ‘மாப்பிள்ளை’ அந்தஸ்த்தில் உள்ள ஒரு ஆசிரிய இளைஞனுக்குக் கொழும்பில் அவன் வாடகைக்குக் குடியிருக்கும் அறையின் வீட்டுச் சொந்தகார்களினால் ஏற்படுகின்ற அனுபவத்தை அங்கதச் சுவையுடன் பகிர்ந்துகொள்கிறது.

ஏழாவது கதையான ‘புதைகுழிகள்’, தனதூர் சேமக் காலையையும் புதைகுழியையும் காட்சிப்படுப்படுத்துவதினூடாக இன முரண்பாடுகளையும் மரணத்தின் பின்புகூட நிகழும் மனித விழுமியங்களற்ற சமூகப் பலவீனங்களையும் கோடிட்டுக் காட்டும் புதிய செல்நெறிக்கதை மட்டுமல்லாமல் இக்கதையில் அவர் ஒரு கட்டத்தில் தனது மனைவியின் மரணத்தை நினைவுகூர்ந்து தனது மனைவியின் மூத்த சகோதரியிடம் மனைவியின் இறப்பின் முப்பத்தோராம் நாளும் கழிந்து, ‘நம்முடைய சேமக்காலையில் யாருடைய கல்லறைதான் உருப்படியாக இருக்கிறது. எல்லாரது கல்லறைகளும் சிதைக்கப்பட்டு குற்றுயிராகத்தான் கிடக்கின்றன…. அதை உணர்ந்துதான் நான் என் மனைவிக்குக் காலத்தாற் சாகாத காலத்தின் ஏலத்தால் மலியாத ஒரு நினைவுச் சின்னத்தைச் கட்டியிருக்கிறேன்.’ எனக் கூறியிருந்த வரிகள் அவருடைய நினைவில் விரிகிறபோது, அவர் முன்பு வடித்த ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ எனும் குறுநாவலின் (வீரகேசரி-1975), நிறைவிலே, ‘….. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழங்கும் தமிழ் இலக்கியத்திலே புலவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் சரித்திரம் எழுதப்பட்டிருக்கிறது தவிர அவர்களை உருவாக்கிவிட்ட அவர்களின் மனைவியருக்கு சரித்திரமே கிடையாது. தமிழ் இலக்கியத்துக்கே முற்றிலும் புதுமையான இலக்கியப்படைப்பை நான் படைத்திருக்கிறேன்’ என வ.அ. அவர்கள் செய்திருந்த பிரகடனம் எனது நினைவில் குதிர்ந்தது.

அடுத்துவரும் முறையே எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது ‘இற்றைத்திங்கள் இவ்வெண்நிலவில்’ – ‘சருகுகள்’ – ‘கடல்வலயத்தடை’ ஆகிய மூன்று கதைகளும் 1990 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த பின்னர் நிகழ்ந்த தமிழ் ஈழவிடுதலைப்புலிகள் இயக்கத்தினருக்கும் இலங்கைப் பாதுகாப்புப்படையினருக்கும் இடையிலான போர்ச் சூழல், இப்போரில் சம்மந்தப்படாத அப்பாவித் தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்வியல் கோலங்களிலும் வாழ்வாதாரச் செயற்பாடுகளிலும் ஏற்படுத்திய சீரழிவுகளை யதார்த்தப் பண்புகளுடன் பதிவு செய்கின்றன. கதாசிரியரின் சாமான்ய மக்களின் மீதான சமூக அக்கறையும் – இயற்கை நேசிப்பும் – கொட்டியாபுர மண்ணினதும் மக்களினதும் மீதான வாஞ்சையும் இக்கதைகளில் மேலெழும்பி நிற்கின்றன.
பதினோராவது கதையான ‘தெய்வக்குழந்தை’, கிறிஸ்துவின் பிறப்பைத் ‘திருக்குர்ரான்’ எவ்வாறு வெளிப்படுத்துகின்றது என்பதைக் காட்டும் கதை.

கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வைச் சிறுகதை வடிவில் காட்சிப்படுத்தியிருக்கும் ‘இரத்தப்பழி’ – இதுவும் ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்ததையே தருகிறது. வார்த்தைகளால் காட்சிகளைக் கட்புலனுக்குள்ளாகும் ‘வ.அ’ அவர்களின் புனைவாற்றல் இக்கதையில் பொங்கிப் பிரவாகிக்கின்றது.

பதின்மூன்றாவது கதையான ‘வெந்தணலால் வேகாது’ எனும் கதை இராமாயண இதிகாசத்தில் இராவணனின் தம்பி விபீஷணனின் பாத்திரத்தைக் காத்திரமான விமர்சனத்திற்குள்ளாக்குகிறது. இதுவும்கூட ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவத்தையே தருகிறது.

அடுத்தகதை ‘வீரன் துயர்’ – இதனைப் படித்துமுடித்த போது சாண்டில்யனின் சரித்திரக்கதையொன்றைப் படித்தது போன்றதோர் உணர்வு ஏற்பட்டது.

அடுத்ததாகவுள்ள ‘அன்னை’ மலையகத்தொழிலாளர்களின் ஏழ்மை வாழ்க்கையையும் அந்த ஏழ்மையிலும் எழும் தாய்ப் பாசத்தையும் ஒருங்கிணைத்துக் கலா நேர்த்தியோடு வழங்கப்பட்டுள்ள சிறந்த சிறுகதை. மலையகத்தை மனக்கண்முன் கொண்டுவரும் ‘வ.அ’ அவர்களின் களவர்ணனை வாசகனைக் கதையோடு ஒன்றிக்கவைக்கிறது.

பதினாறாவது கதை ‘சலிப்பு’. இராஜசுந்தரம் எனப் பெயர்வரும் இடங்களிளெல்லாம் இராசரத்தினம் எனும் பெயரைப் போட்டு வாசிக்கத் தூண்டியது. ஓர் எழுத்தாளனின் சலிப்பான அனுபவமொன்று இங்கே பதிவாகிறது.

‘சாயங்கால மயக்கம்’ கதை ‘வாக்குப்பெட்டி’ (தேர்தல்) அரசியல்வாதியைத் தோலுரித்துக்காட்டுகிறது.

இறுதிக்கதையான பதினெட்டாவது கதை ‘ஆணாதிக்கம்’, தாம்பத்தியம் என்பது வெறுமனே உடல் இச்சையைத்தீர்த்துக் கொள்ளும் விவகாரமல்ல என்பதைப் பிலோமினா-லோறன்ஸ் உறவு மூலம் எந்தவிதமான விரசமுமின்றி உணர்த்துகின்ற கதை. பாலியல் பிரச்சினையொன்றைப் பக்குவமாகக் கையாண்டிருக்கிறார் ‘வ.அ’ அவர்கள். அவரின் எழுத்து முதிர்ச்சியையும் இக்கதை எடுத்துக்காட்டுகிறது.
நிறைவாக ‘வ.அ’ அவர்களின் கதைகளிலே காணப்படும் முத்துப்பதித்ததுபோல ஒளிரும் சொல்லாட்சியையும் – எழிலார்ந்த இலக்கணத்தமிழையும் – பாத்திர உரையாடல்களிலுள்ள பேச்சுத் தமிழையும், குறிப்பாக கொட்டியாபுரத் தமிழையும் – பொருத்தமான உவமை மற்றும் மரபுச் சொற்றொடர்களையும் – சர்க்கரைப் பொங்கலிலே ஆங்காங்கே பயறு கடிபடுவதைப் போன்ற அங்கதச் சுவையையும் மொத்தத்தில் வாசகனை வசீகரிக்கின்ற அவருக்கு வாலாயமான புனைவுமொழியைச் சிலாகித்துக்கூறாமல் இம் மதிப்பீட்டுரை (மதிப்புரை) முழுமை பெறாது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *