பலதும் பத்தும்

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்குள் நுழைந்த யானை – அதிகாலையில் பெரும் பதற்றம்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று வந்தமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைந்த காட்டு யானையைத் தடுத்து நிறுத்த முயன்ற பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த காவலாளி ஒருவரை யானை தாக்க முற்பட்டுள்ளது.

இதன்போது அவர் மிகச் சாமர்த்தியமாகச் செயல்பட்டு மயிரிழையில் உயிர் தப்பிய போதிலும், அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திடீர் ஊடுருவல் காரணமாக இன்று அதிகாலை வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவியது.

வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேறிய காட்டு யானை பிரதான வீதி ஊடாகச் சென்று தேற்றாத்தீவு பகுதிக்குள் நுழைந்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த யானையை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை ஊழியர்கள், வனஜீவராசி திணைக்கள ஊழியர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

காட்டுப் பகுதிகளில் இருந்து யானைகள் மீண்டும் நகரங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளமை இப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *