முச்சந்தி

யாழில். வாள்வெட்டுத் தாக்குதல் கட்டுக்குள்!; வடக்கு ஆளுநர் கூறுகிறார்

பொலிஸார் மக்களின் நம்பிக்கையை வெல்லும் வகையில் செயலாற்ற வேண்டும் எனவும், பொலிஸ் திணைக்களத்துடன் மக்களும் இணைந்து பயணிக்கும்போதே குற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

1966ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாகத் தற்காலிக இடங்களில் இயங்கிவந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கான புதிய நிரந்தரக் கட்டடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் யாழ் மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் பொலிஸார் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து அதிகளவான முறைப்பாடுகளைப் பெற்றிருக்கின்றேன். குறிப்பாக, பொலிஸ் நிலையங்களில் தமது முறைப்பாடுகள் ஏற்கப்படுவதில்லை எனவும், தமக்குத் தீங்கிழைத்த குற்றவாளிகளுடன் பொலிஸார் நட்பாகப் பழகுவதாகவும் மக்கள் முறையிட்டிருந்தனர்.

ஆனால், இன்று அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வழங்கிவரும் உறுதியான தலைமைத்துவமே இந்த மாற்றத்துக்குக் காரணமாகும். இருப்பினும், இத்துறையில் இன்னமும் பல மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ளது.

வடக்கு மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகரித்திருந்த வாள்வெட்டு உள்ளிட்ட வன்முறைக் கலாசாரம் இன்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸார் தமது சேவைகளைத் திறம்பட முன்னெடுப்பதற்குப் பௌதீக வளங்கள் மிகவும் அவசியமானவை. அந்தவகையில், நீண்டகாலத்தின் பின் இன்று அவர்களுக்குத் தேவையான நிரந்தரக் கட்டடம் கிடைத்துள்ளது. இதன்மூலம் அவர்கள் மேலும் சிறப்பான சேவைகளை வழங்குவார்கள் என நாம் எதிர்பார்க்கலாம்.

கிளிநொச்சியில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் கடத்தல்களால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக நானும், அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சந்திரசேகரும் பிரதிப் பொலிஸ்மா அதிபரைச் சந்தித்திருந்தோம்.

இதன்போது, ‘கடந்த காலங்களில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் காப்பாற்றுவதற்காகவே அரசியல்வாதிகள் எம்மைத் தேடி வருவார்கள் ஆனால், நீங்களோ அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி வந்துள்ளீர்கள்’ என அவர் ஆச்சரியத்துடன் குறிப்பிட்டார்.

அதுதான் உண்மை. சட்டவிரோதச் செயற்பாடுகளின் பின்னால் இன்றைய அரசாங்கம் ஒருபோதும் நிற்காது. இத்தகைய குற்றங்களை ஒழிப்பதற்குப் பொதுமக்களாகிய நீங்களும் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button