நீள்கடல் அருமையை நெஞ்சினில் பதிப்போம்!… கவிதை… ஜெயராமசர்மா

ஆதவன் வெப்பம் நீள்கடல் பட்டு
ஆவியாய் எழுந்து கருமுகில் ஆகும்
கருமுகில் குளிர்ந்திட கார்மேகம் கொட்டும்
மழையாய் பொழிந்து மண்ணில் வீழும்
மலையில் பெய்யும் மழை நீரெல்லாம்
அருவியாய் ஆகி பெருகியே நிற்கும்
நீள் நிலமெங்கும் ஆறுகள் ஓடி
நிறைவிலே ஆறெலாம் கடலினைச் சேரும்
உவர்நிறை நீரினைக் கொண்டிட்ட கடலே
உவப்புடன் மழைபெய்ய உதவியே நிற்குது
கடலது உதவியை வியந்திட வேண்டும்
உவர்நிறை கடலென ஒதுக்கிடல் பொருந்துமா
நீள்கடல் நிறமோ கருநிற மாகும்
தாகந் தீர்த்திடத் தண்ணீர் கொடுக்கா
மழையினைக் கொடுத்து மாயம் செய்து
மாநில மக்களின் தாகம் தீர்க்குது
முத்தைக் கொடுத்து சொத்தாய் இருக்குது
உணவைக் கொடுத்து உதவியாய் இருக்குது
கனிய வளங்களைக் கணக்கின்றி வழங்குது
காவற் காரனாய் காத்துமே நிற்குது
நிறத்தைக் கொண்டு மதிப்பிட வேண்டாம்
அழகைக் கண்டு மயங்கிட வேண்டாம்
செயலைக் கண்டே போற்றிட வேண்டும்
நீள்கடல் அருமையை நெஞ்சினில் பதிப்போம் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா
![]()
மழைதரும் மாயக்கடலினை கொண்டு உவர்ப்பு கண்டு ஒதுக்காதே என்றும், உருவு கண்டு மயங்காதே என்றும் தத்துவம் சொன்ன பெருந்தகை வாழ்க.
மழைதரும் மாயக்கடலினை கொண்டு உவர்ப்பு கண்டு ஒதுக்காதே என்றும்,உருவு கண்டு மயங்காதே
என்றும் தத்துவம் சொன்ன அறிஞர் வழி நிற்போம்.
மழைதரும் மாயக்கடலினை கொண்டு உவர்ப்பு கண்டு ஒதுக்காதே என்றும்,உருவு கண்டு மயங்காதே
என்றும் தத்துவம் சொன்னவர்க்கு நன்றி.