நிகழ்வுகள்

குமாரபுரம் படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு..!

மூதூர் – குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

குமாரபுரம் படுகொலை சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள்.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் பாதிக்கப்பட்ட குமாரபுரம் மக்களினால், வேலன் சுவாமிகளிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி குறித்த படுகொலையின் 30வது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்தனர்.

குறித்த பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டநிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொடூர சம்பவம் 1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button