கதைகள்

“வேண்டுதல்” … கதை… மதுஶ்ரீ குமார் – அவுஸ்திரேலியா

மதுஶ்ரீ குமார்-அவுஸ்திரேலியா

‘கோத்திரம், பெயர், நட்சத்திரம் சொல்லம்மா’ என்ற கோவில் குருக்களின் தொனியில் கண்மூடி பிரார்த்தனையில் மூழ்கியிருந்த மதுரா திடுக்கிட்டு கண்களைத் திறந்தாள். ஆமாம்! இன்று அவளுக்குப் பிறந்த நாள் என்பதால் அப்படியே இந்த அம்பாளுக்கும் நன்றி சொல்லி வாழ்த்துப் பெற வீட்டருகில் இருக்கும் இந்த மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கு அர்ச்சனைத் தட்டோடு வந்திருக்கிறாள்.

இன்றோடு மதுராவுக்கு வயது இருபத்து மூன்றாகிறது. அம்மா, அப்பா இவர்களுடன் இவளை விட நான்கு வயது மூத்த தமையன் ராமு – இவர்கள் தான் அவள் உலகம். ராமு வேதிப் பொறியியல் வல்லுனராக வேலை செய்கிறான். மதுரா BA music படித்து விட்டு மெல்லிசை குழுக்களில் பாடுவதிலும் வீட்டில் குழந்தைகளுக்கு சங்கீதம் சொல்லிக் கொடுப்பதிலும் பொழுது போக்கிறாள். தாய்தகப்பன் கல்யாணம் பற்றி பேச்சு எடுத்தால் இன்னும் இரண்டு வருடங்களாவது போகட்டும் என்று தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறாள்.

அவளுக்குத் தன்னை விரும்பி வரும் ஒருவனை மணக்கவே இஷ்டம். பேசி முடிக்கும் சம்பந்தங்களில் நம்பிக்கை இல்லை. சாடை மாடையாக இதனைப் பெற்றோரிடமும் சொன்னபோதும் அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு சம்பந்தத்தையும் இவள் நிராகரிக்கும் போதும் ராமு வேடிக்கையாக நரை விழுந்த பின்னர் தான் எனக்கு கல்யாணமா என்று அவளைச் சீண்டுவான். ஏனெனில் தங்கைக்கு கல்யாணம் ஆகாமல் தனக்குத் திருமணம் செய்யமாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

குருக்களின் குரலினால் கண்விழித்த மதுரா, பாடம் ஒப்புவிப்பது போல சிவகோத்திரம் ரோஹினி நடசத்திரம் ரிஷப ராசி பெயர் மதுரா என்றாள். குருக்கள் அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு கர்ப்பக்கிரகத்துள் நுழைந்தார். அந்த வேளையில் அவளுக்குத் தன்னை யாரோ உற்றுப் பார்ப்பது போல தோன்றிற்று. பக்க வாட்டில் தலையை இருபக்கங்களிலும் திருப்பி அந்த அர்த்த மண்டபத்தில் உள்ளோரைப் பார்த்தாள். அங்கிருந்த ஒரு சிலரும் கண் மூடி சேவிப்பதில் இருந்தார்களே ஒழிய இவளைப் பார்க்கவில்லை. ஏதோ பிரம்மை என்று எண்ணிக் கொண்டு கர்ப்பக்கிரகத்தை நோக்கிப் பார்வையை விட்டாள். அப்போது தான் கருவறைக்கும் அர்த்த மண்டபத்திற்கும் இடையில் இருந்த வாயிலின் இருபுறத்திலும் இருந்த கண்ணாடிகளைக் கவனித்தாள்.

அவளுக்குப் பின்னால் இரண்டு மூன்றடி தூரத்தில் ஒரு வட்ட சாட்டமான வாலிபன் நிற்பதையும் அவன் கண்கள் கண்ணாடியில் தெரியும் இவள் பிம்பத்தை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தாள். அவனை எங்கோ பார்த்த ஞாபகம். மனதைக்கட்டுப் படுத்தி தரிசனத்தில் ஆழ்ந்தாள். குருக்கள் தீபாரதனையுடன் அர்ச்சனைத் தட்டையும் கொடுத்தவுடன் அவன் பக்கம் பார்க்காமலே கோவிலின் சுற்றுப் பிரகாரத்தைச் சுற்றுவதற்கு விரைந்தாள். ஆனாலும் அவன் இன்னமும் தன்னையே பார்க்கிறான் என்று அவள் உள்மனம் சொல்லியது. வீடு வந்ததும் அவள் மனம் இன்னமும் அந்த வாலிபனைச் சுற்றித் தான் வட்டமிட்டது. அவன் முகம் பரிச்சயமாக இருந்தது. அவனை எங்கே பார்த்தாள்? அவன் ஏன் அவளைப் பார்த்தபடி நின்றான்?

வார இறுதியில் ஒரு மெல்லிசைக் கச்சேரியில் மதுரா பாடுவதாக இருந்தது. அந்தக் கச்சேரிக்கு ஒத்திகைகளில் நேரம் செலவிட்டதால் அந்த வாலிபனின் நினைவு அவளுக்குத் தோன்றவில்லை. கச்சேரி அன்று மேடையில் அவள் தோன்றியதும் ரசிகர்கள் கைதட்டல் அவளுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. ரசிகர்கள்இருக்கும் மண்டபத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு மேடை மாத்திரம் விளக்கின் ஒளியால் ஜொலித்தது. மேடையில் இருந்து மண்டபத்தினைப் பார்த்தால் முதல் இரண்டு வரிசைகளில் உள்ளவர்கள் முகம் மட்டுமே அடையாளம் காணக் கூடியதாக இருந்தது.

மதுரா பாடத் தொடங்கினாள். அவளுடன் ஆண் குரல் ஒன்றும் சேர்ந்து பாடியது. பாடிக் கொண்டு இருக்கும் போது அன்று கோவிலில் உணர்ந்த மாதிரி இங்கும் யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல உணர்ந்தாள். முதல் இரு வரிசைகளிலும் உள்ளவர்களை உற்று நோக்கினாள். அவள் உணர்ந்தது உண்மை. அந்த வாலிபன் முதல் வரிசையில் இடது புறமாக அமர்ந்திருந்தான். மதுராவின் கண்கள் அவனைக் கண்டதும் தன் கண்களை அவளிடமிருந்து அகற்றாமலேயே ஒரு புன்சிரிப்பை அவன் உதிர்த்தான். சற்று நிதானம் இழந்த மதுராவுக்கு நல்ல வேளை பாடலில் தவறு செய்யாமல் தப்பிக்க அவளுடன் இணைந்து பாடிய ஆண் குரல் உதவியது. அதன் பிறகு மதுரா அடுத்தடுத்த பாடல்களைப் பாடும் போது அவனைப் பார்ப்பதில்லை என்ற முடிவில் பாட ஆரம்பித்தாள். ஆனால் தன்னையும் அறியாமல் அவனிடம் கண்களை விடுவாள். அவனும் இவள் சங்கடப்படுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டான் என்றாலும் அவள் கண்கள் அவனைச் சாரும் போது ஒரு புன்சிரிப்பை உதிர்த்து அவளை மேலும் சங்கடத்தில் வீழ்த்திக் கொண்டிருந்தான்.

கச்சேரி முடிந்ததும் மதுரா வீட்டுக்குப் போவதற்கு ராமுவுக்காக காத்திருந்தாள் . அவள் கண்கள் அந்த வாலிபனை அந்தக் கூட்டத்தினிடை தேடிக் கொண்டிருந்தது. ராமு பக்கத்தில் வந்து அழைத்தது கூட காதில் கேட்காமல் கண்களை அங்கும் இங்குமாக அலைய விட்டுக் கொண்டிருந்தாள். ராமு அவளின் தோளில் தட்டி மதுரா என்றழைத்ததும் தன்னை சுதாகரித்துக் கொண்டாள். யாரைத் தேடினாய் மதுரா என்ற ராமுவின் கேள்விக்குப் பதிலும் சொல்லவில்லை. எப்படிச் சொல்வாள்? அவன் யாரென்றே இவளுக்குத் தெரியாதே! வீடு வரை மௌனத்தில் வந்த மதுராவின் இந்த மௌனம் ராமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

வாரங்கள் கடந்தது கொண்டிருந்தது. மதுராவின் மனதில் இருந்து அந்த வாலிபனை அகற்ற முடியவில்லை. எந்நேரமும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிக் கிடப்பதைப் பார்த்த பெற்றோரும் கேள்விமேல் கேள்வி கேட்டு அறியப் பார்த்தார்கள். எங்ககெங்கு அவள் மேடையேறினாலும் அங்கே அவன் முதல் வரிசையில் அமர்ந்திருப்பான். அவளும் மேடையில் தோன்றியதும் அவளை அறியாமலேயே அவள் கண்கள் அவனைத் தேடும். கண்கள் சந்தித்ததும் வழமை போலே ஒரு புன்னகையை அவளை நோக்கி வீசுவான். எத்தனையோ தடவை இடைவேளை நேரங்களில் அவனைக் கூட்டத்தில் தேடுவதற்கு முயன்றும் அவளால் அவனை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. அவள் மனம் அவனிடம் சரணமாயிற்று.

தீபாவளி நெருங்கியதால் வீட்டில் கலகலப்பு ஆரம்பித்தது. தாயார் பட்சணங்கள் செய்யத் தொடங்கினார். ராமு மதுராவை அழைத்துக் கொண்டு துணிமணி எடுப்பதற்காக புடவைக் கடைக்குச் சென்றான். மதுராவைப் புடவைகளைத் தெரிந்தெடுக்கச் சொல்லி விட்டு தான் ஆண்கள் துணிவகைகள் பார்க்கப் போனான். மதுரா புடவைகள் பலவற்றை எடுத்துப் பார்த்தும் எதனை எடுப்பது என்று குழம்பிக் கொண்டிருந்தாள். அச்சமயத்தில் அங்கிருந்த பணியாளர் ஒருவர் ஒரு மேக நீல வர்ணத்தில் அமைந்த புடவை ஒன்றை இவளிடம் கொடுத்து இது உங்களுக்கு நல்லாய் இருக்கும் என்று சொல்லச் சொன்னாங்க என்றார். மதுரா அவரிடம் யார் சொன்னார்கள் என்று கேட்க, அவர் கடையின் மறுமுனையை நோக்கி கையைக் காட்டினார். அங்கே அவள் கண்களில் அந்த வாலிபன் தெரிந்ததும் அதே புன்சிரிப்புடன் அவன் அவ்விடத்தில் இருந்து வெளியேறினான்.

மதுரா அந்தப் பணியாளரிடம் அவனைப் பற்றி அறிய முயன்றாள். அவருக்கும் அவனைப் பற்றி ஒன்றும் தெரியாது. மதுராவுக்கு ஒரே குழப்பம். இவன் ஏன் என்னைச் சுற்றி சுற்றி வருகிறான்? இவன் யார்? இவனை எப்படியாவது சந்தித்தாக வேண்டும்! அச்சமயத்தில் ராமு தனது கொள்முதலை முடித்துக் கொண்டு மதுராவிடம் வந்தான். மதுராவின் கைகளில் இருந்த அந்த மேகநீலப் புடவையைக் கண்டதும் ‘மதுரா! அழகான நிறம். உனக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கு’ என்றான். மதுரா பதில் சொல்லவில்லை. ராமு அதற்கு பணத்தைக் கட்டிவிட்டு மதுராவுடன் வீடு போய்ச் சேர்ந்தான். தீபாவளி அன்று மதுரா அந்தப்புடவையைக் கட்டிக் கொண்டாள். பார்த்தவர்கள் எல்லோரும் புடவை அவளுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள். மதுராவின் மனம் அந்த வாலிபனைத் தேடியது. அந்த வேளையில் வானொலியில் “கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே, கண்ட போதே சென்றன அங்கே” என்ற பாடல் ஒலி பரப்பாகியது. அவள் முகம் நாணத்தால் சிவந்தது.

தீபாவளி முடிந்து இரண்டாம் நாளில் இருந்து கந்தசஷ்டி விரதம் ஆரம்பம். மதுராவின் தாயார் மதுராவை வழமை போல் இந்த வருடமும் விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னாள். மதுரா உடன் பட்டாள். ஆனால் அவள் வேண்டுதல் தான் என்ன? தன்னை மட்டுமே நேசிக்கும் கணவன் வேண்டும் என்பதைத் தவிர அவளுக்கு வேறென்ன வேண்டும். காப்பு கட்டி விரத நாட்கள் ஆறும் காலையில் கோவிலுக்குப் போய் வந்து மிளகும் தண்ணீரும் மட்டுமே அருந்தினாள். முதல் இரண்டு மூன்று நாட்கள் சமாளிக்கக் கூடியதாக இருந்தது ஆனால் ஆறாம் நாள் தள்ளாடும் நிலைக்கே வந்து விட்டாள். என்றாலும் விரதம் முறிவடையாமல் சமாளித்தாள். அடுத்த நாள் பாரணை, தாயார் அதிகாலையிலேயே சமையல் வேலைகளை ஆரம்பித்தார்.

மதுரா கோவிலுக்குச் செல்ல கிளம்பும்போதே உடல் வெகுவாக தளர்ந்து போனதை உணர்ந்தாள். என்றாலும் விரதம் பங்குப்படக் கூடாது என்ற வைராக்கியத்தில் கோவிலை நோக்கி நடந்தாள். தீபாராதனை முடிந்து கற்கண்டு போட்ட பாதாம் பாலை குருக்கள் தீர்த்தமாக வழங்க, அதை வாயில் விட்டதும் அப்படியே நினைவிழந்து கீழே சரிந்தாள். யாரோ தாங்கி பிடித்து நிலத்தில் வளர்த்தியது போலிருந்தது அவளுக்கு ஆனால் அவளுக்கு அதற்கு மேலே ஒன்றுமே தெரியவில்லை. முகத்தில் குளிர் நீர் பட்டு கண் திறந்தாள். தன்னைச் சுற்றி குழுமி நின்ற பக்தர்களைப் பார்த்தாள். நடந்தது என்னவென்று ஊகித்தாள். கையை ஊன்றி எழ முயல்கையில் அவளின் தோளின் கீழே கையை வைத்துத் தாங்கி அவளை அவன் நிமிர்த்தினான். அவள் திரும்பி யாராயிருக்கும் என்று பார்த்த போது அங்கே அதே புன்சிரிப்பு, அவனேதான். அப்போது அங்கிருந்தவர்கள் பேசிக் கொள்வதும் அவள் காதில் விழுந்தது. அவன் தான் இவள் நினைவிழக்கும் போது தாங்கிப் பிடித்தவன்.

மதுரா அவனின் உதவியுடன் மெல்ல எழுந்தாள். அவன் வீடு வரை உடன் வருவதாகச் சொல்லி அவளின் பதிலுக்கு காத்திராமல் அவளைக் கைத்தாங்கலாக அணைத்தபடி தன் மோட்டார் காரினை நோக்கிக் கோவிலில் இருந்து கிளம்பினான். மதுராவுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவன் யார்? இவனுக்கு என் வீடு எப்படித் தெரியும்? ஏன் என் பின்னாலேயே இவன் சுற்றுவது போலே உணர்கிறேன் என்னறெல்லாம் யோசித்தபடி அவனுடன் சென்றாள். அப்போது அவளிருந்த நிலையில் இந்தக் கேள்விகளை அவளால் கேட்க முடியவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை ஆனதால் வீட்டில் ராமு இருந்தான். இவர்கள் வீட்டை அடைந்ததும் அவனே வாயில் கதவைத் திறந்தான். மதுராவை அணைத்தபடி தன் நண்பன் கார்த்தி நிற்பதைக் கண்டதும் அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. உள்ளே வா கார்த்தி! என் தங்கையை என்ன செய்தாய் என்று கண்ணைச் சிமிட்டியபடி கேட்டான். மதுரா மலங்க மலங்க விழித்தாள். ராமு தங்கையை ஒரு கதிரையில் இருத்தி விட்டு அவளுக்கு விளக்கம் சொல்லத் தொடங்கினான். கார்த்தியும் ராமுவும் பல்கலைக்கழக நாட்களில் இருந்தே சிநேகிதரானவர்கள். கார்த்தி இரசாயன பொறியியல் படித்து உயர் பதவியில் வேலையாக இருக்கிறான்.

மதுராவின் மெல்லிசைக் கச்சேரிகளைக் கேட்டு அவள் மீது பயித்தியமானான். நண்பன் ராமுவிடம் தன் விருப்பத்தைப் பற்றி சொன்ன போது தான் ராமு, மதுராவுக்கு பேசிச்செய்யும் திருமணத்தில் விருப்பம் இல்லை அதனால் எப்படியாவது அவளை உன்பக்கம் கவர்ந்து விடு என்றான். அதன் பின் தான் ராமுவின் தயவுடன் கார்த்தி அவள் போகுமிடம் எல்லாம் பின்னால் திரிய முடிந்தது. இதனால் மதுராவுக்கும் அவனிடம் ஓர் ஈர்ப்பு ஏற்பட்டது. புடவைக்கடையில் சேலை தேர்ந்து எடுத்ததும் நண்பர்கள் இருவரும் சேர்ந்து தான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மதுராவின் முகம் நாணத்தில் சிவந்தது. ராமு மதுராவைப் பார்த்து ‘அப்பாடா ஒரு வழியாய் என் கல்யாணத்துக்கு வழி விட்டு விட்டாய்’ என்று சொல்லிச் சிரித்தான்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button