பாதுகாப்புக் கோரும் எதிர்க்கட்சிகளின் சகல எம்.பி.க்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு!; சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் இணக்கம்

பாதுகாப்பு கோரும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரட்ன மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அமைய வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்வாறு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாளர் தொகுதி பிரதானி மற்றும் பிரதி பொதுச் செயலாளர் சமிந்த குணரட்ன, பாராளுமன்ற படைக்கள சேவிதர் குசான் ஜயரட்ன மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டில் நிலவும் நிலமைகளை கருத்திற்கொண்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடலொன்றுக்காக எதிர்க்கட்சியினரால் கடந்த வாரத்தில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி வெள்ளிக்கிழமை இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
இந்த கலந்துரையாடலின் போது மக்களினதும், மக்கள் பிரதிநிதிகளினதும் மற்றும் பல்வேறு அரச அதிகாரிகளினதும் பாதுகாப்பு தொடர்பில் எதிர்க்கட்சிகளினால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும். இதற்கு சபாநாயகரும், பொலிஸ்மா அதிபரும் சாதகமான பதிலை வழங்கியுள்ளனர் என்றும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொரடாவான கயந்த கருணாதிலக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த கலந்துரையாடல் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளதாவது,
சபாநாயகர் தலைமையில் பொலிஸ்மா அதிபரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போது எதிர்க்கட்சிகளின் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்போது தெரிவித்துள்ள சபாநாயகர், ஏற்கனவே பாதுகாப்பு கோரியுள்ள சகல எம்.பிக்களின் கோரிக்கைகள் தொடர்பில் தேவையான நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளேன். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கொள்கை ரீதியில் தீர்மானங்களை எடுத்துள்ள போதும். அதற்கும் அப்பால் சென்று இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எம்.பிக்கள் சிலருக்கு ஏற்கனவே பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்துள்ள பொலிஸ்மா அதிபர், இந்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
![]()