இந்தியா

திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாக வழக்கு: உதயநிதி கைதாகி விடுதலை – முழு விவரம்

தஞ்​சாவூரில் நடை​பெற்ற திமுக ஆர்ப்​பாட்​டத்​தில் ஆபாச​மாகப் பேசி​ய​தாகக் குற்​றம் சாட்​டப்​பட்ட நிலை​யில், எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் கைது செய்​யப்​பட்​டார். அவரை தஞ்​சாவூர் அழைத்து சென்று விசா​ரணை நடத்​திய போலீ​ஸார், இரவு விடு​வித்​தனர்.

காவிரி நதிநீர் விவ​காரம் தொடர்​பாகத் தஞ்​சாவூரில் நேற்​று​முன்​தினம் திமுக சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. அதில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் பேசி​னார். அப்​போது, பெண்​களை இழி​வுபடுத்​தும் வகை​யில் இரட்டை அர்த்​தத்​தில் கருத்து தெரி​வித்​த​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதுதொடர்​பாகத் தவெக மகளிரணி சார்​பில், தஞ்​சாவூர் டவுன் கிழக்கு காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது.

அதன் அடிப்​படை​யில், 9 பிரி​வு​களின் கீழ் உதயநி​திக்கு எதி​ராகப் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். இதையடுத்​து, தஞ்​சாவூர் போலீ​ஸார் நேற்று காலை 7 மணி​யள​வில் சென்னை போலீ​ஸாரின் உதவி​யுடன் நீலாங்​கரை​யில் உள்ள உதயநிதி ஸ்டா​லின் இல்​லத்​துக்​குச் சென்​ற​னர். வீட்​டைச் சுற்றி பலத்த போலீஸ் பாது​காப்​புப் போடப்​பட்​​டது.

போலீ​ஸார் வீட்​டுக்​குள் சென்று வழக்கு தொடர்​பான ஆவணங்​களை வழங்​கி, கைது செய்​வ​தாகத் தெரி​வித்​தனர். அப்​போது உதயநி​தி​யின் மனைவி கிருத்​திகா மற்​றும் முன்​னாள் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் ஆகி​யோர், “வழக்​கறிஞர்​கள் வர உள்​ளனர். அது​வரை காத்​திருங்​கள்” என்று கேட்​டுக் கொண்​டனர்.

ஆனால், போலீ​ஸார் கைது நடவடிக்கை தொடரும் என்று தெரி​வித்​தனர். இதற்​கிடை​யில், திமுக பொதுச் செய​லா​ளர் துரை​முரு​கன், முன்​னாள் அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, எ.வ.வேலு, தொழில​திபர் சபரீசன் (மு.க.ஸ்​டா​லின் மரு​மகன்), கட்​சி​யின் சட்​டத் துறை நிர்​வாகி​கள் உட்பட பலர் உதயநிதி இல்​லத்​துக்கு விரைந்து வந்​தனர்.

தொண்​டர்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் திரண்​ட​தால், போலீ​ஸார் இரும்பு தடுப்​பு​களை அமைத்து பாது​காப்​பைப் பலப்​படுத்​தினர். எனினும், திமுக​வினர் போலீ​ஸாருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டு சாலை மறியல் செய்​தனர். நீண்ட நேர பரபரப்​புக்​குப் பிறகு, காலை 10.30 மணிக்கு மேல் போலீ​ஸார் உதயநிதி ஸ்டா​லினைக் கைது செய்​து வேனில் ஏற்றினர்.

உதயநி​தியை அழைத்​துச் சென்ற போலீஸ் வாக​னத்​தைத் தடுத்து நிறுத்​திய திமுக​வினர், அரசுக்கு எதி​ராகக் கோஷங்​களை எழுப்​பினர். சிலர் போலீஸ் தடுப்​பு​களைத் தூக்கி வீசி​யதுடன், வாக​னத்​தின் முன்​பாக சாலை​யில் படுத்து மறியல் செய்​தனர். இதனால் போலீ​ஸாருக்​கும் திமுக​வினருக்​கும் இடையே கடும் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது. இந்த பரபரப்​பில் 3 பேருக்கு காயம் ஏற்​பட்​டது.

பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் சுமார் 2,000 பேரை போலீ​ஸார் கைது செய்து அப்​புறப்​படுத்​தினர். இதனால் பதற்​றம் ஏற்​பட்​டது. இதே​போல், உதயநிதி ஸ்டா​லின் பேச்​சுக்​குக் கண்​டனம் தெரி​வித்து தவெக​வினர் வடக்கு கடற்​கரை மற்​றும் பரங்​கிமலை பகு​தி​யில் போராட்​டம் நடத்​தினர்.

தவெக எம்​எல்​ஏக்​கள் பல்​லவி மற்​றும் தாமு தலை​மை​யில் 100-க்​கும் மேற்​பட்ட தவெக​வினர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் மனு அளித்​தனர்.

பின்​னர் பலத்த பாது​காப்​புடன் உதயநிதி ஸ்டா​லின் தஞ்​சாவூர் அழைத்​துச் செல்​லப்​பட்​டார். மாலை 6.30 மணி​யள​வில் திருச்சி வழி​யாக உதயநி​தியை போலீ​ஸார் தஞ்சாவூர் அழைத்து வந்தனர். ஆனால், திடீரென செங்​கிப்​பட்டி காவல் நிலை​யத்​துக்​கு உதயநிதியை அழைத்துச் சென்​ற​னர்.

அங்​கு, தனது வழக்​கறிஞர்​கள் வந்​தால்​தான் காவல் நிலை​யத்​துக்​குள் வரு​வேன் என்று கூறிய உதயநிதி வாக​னத்தை விட்டு இறங்​காமல் சுமார் அரை மணி நேரம் காத்​திருந்​தார். திமுக வழக்​கறிஞர்​கள் அங்கு வந்த பிறகு, வாக​னத்​தில் இருந்து உதயநிதி இறங்கி காவல் நிலை​யத்​துக்​குள் சென்​றார்.

அங்கு தஞ்​சாவூர் எஸ்​.பி. சுந்​தர​வதனம் முன்​னிலை​யில், தஞ்​சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்​வாளர் மணி​கண்​டன் விசா​ரணை நடத்​தி​னார். அப்​போது, போலீ​ஸாரின் கேள்வி​களுக்கு உதயநிதி பதிலளித்​தார். சுமார் ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக நடை​பெற்ற விசா​ரணைக்​குப் பிறகு 8.15 மணி​யள​வில் உதயநி​தி​யைப் போலீ​ஸார் விடு​வித்​தனர்.

முன்​ன​தாக நேற்று காலை 10.30 மணி​யள​வில் உதயநிதி ஸ்டா​லினுக்கு முன்​ஜாமீன் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் அவசர மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அந்த மனு மீது விசா​ரணை நடந்த போது, “தஞ்​சாவூரில் காவல் நிலைய விசா​ரணைக்​குப் பிறகு அவர் விடுவிக்​கப்​படு​வார். நீதி​மன்ற காவலுக்கு அனுப்​புவது எங்​கள் நோக்​கமல்ல” என்று அரசு தரப்​பில் கூறப்​பட்​டது.

அதைப் பதிவு செய்த நீதிபதி ஜி.கே.இளந்​திரையன், “உதயநி​தியை வி​சா​ரணை முடிந்​ததும்​ போலீ​ஸார்​ இன்​றே (நேற்​று) விடுவிக்​க வேண்​டும்​. உதயநி​தி ஸ்டா​லினும்​ போலீ​ஸாரின்​ வி​சா​ரணைக்​கு ஒத்​துழைக்​க வேண்​டும்​” என்​று உத்​தரவிட்​டார்​.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button