முச்சந்தி
கலைந்து போன டிரம்பின் நோபல் கனவு… ஏழுகடல் தாண்டி ஏழு யுத்தங்களை நிறுத்தினாரா?… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(அமெரிக்காவில் டிரம்பின் ஆதரவாளர்கள் “சமாதானத்தின் ஜனாதிபதி” என்ற தலைப்பில் பல சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். எட்டு மாதங்களில் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக கூறியுள்ளனர்)உலகின் மிகவும் உயர்ந்த நோபல் 2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு (Marina Corina Machado) வழங்கப்பட்டதாக நோர்வே நோபல் குழு அறிவித்துள்ளது.
டிரம்ப் நோபல் பரிசு கனவு?
அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஆசைப்பட்டு, நான் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று அதிபர் டிரம்ப் தம்பட்டம் அடித்தாலும், இந்தாண்டுக்கான பரிசுக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை.எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு முக்கியத்துவம் பெற்றது என்றே சொல்லலாம். அதற்கு காரணம் அதிபர் டிரம்பின் கடந்த கால பேச்சும், திரும்ப திரும்ப நான் போர்களை நிறுத்திவிட்டேன் என்றும் கூறியது தான். அதுமட்டுமின்றி அவர் ஒரு படி மேலே போய், ‘எனக்கு நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் அவமானம்’ என்றும் தெரிவித்தது தான் அனைவரது கவனம் பெற்றது.
இதனால் இந்தாண்டு நோபல் அமைதிப்பரிசு யாருக்கு கிடைக்கப் போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதற்கு எல்லாம் விடை கொடுக்கும் வகையில், அமைதிக்கான நோபல் பரிசு இந்தாண்டு யாருக்கு என்பதை நோர்வே நாட்டு நோபல் குழுவினர் அறிவித்தனர். அவர்கள் டிரம்பின் கனவுகளை தவிடுபொடியாக்கினர் என்பதே இறுதியான உண்மையாகும். இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை, வெனிசுலாவை சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ வென்றாலும், டிரம்பின் அதீத ஆசைக்கனவு குறைந்தபாடில்லை.
ட்ரம்ப் கடும் கோபம்:
இந்த அறிவிப்பின் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதமையால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைந்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகை கடுமையாக எதிர்ப்பு வெளியிட ஆரம்பித்துள்ளது.
என்ன தான் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, பாரிய தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அமைதிக்கான நோபல் பரிசு குறி தவறியுள்ளது என்பதே வெளிப்படை. டிரம்ப் ஏழு போர்களை நிறுத்திவிட்டேன் என்று கூறி வந்தாலும், டிரம்புக்கு நோர்வே குழுவினர் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவில்லை என்பதே உண்மை ஆகும்.
இதனையடுத்து நோர்வே நோபல் குழு அமைதியை விட அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பதாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியுள்ளது. உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதை வெல்ல ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல மாதங்களாக முயற்சி செய்து பிரச்சாரம் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த அமைதிக்கான பரிசைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை அவர் வெளிப்படையாக
தெரிவித்ததுடன், அதற்காக கடுமையாக பாடுபட்டுள்ளார். காசாவில் இரண்டு ஆண்டுகால போர் முடிந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்த வேளையிலேயே, அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரை இக்குழு தெரிவித்தது.
தெரிவித்ததுடன், அதற்காக கடுமையாக பாடுபட்டுள்ளார். காசாவில் இரண்டு ஆண்டுகால போர் முடிந்துவிட்டதாக டிரம்ப் அறிவித்த வேளையிலேயே, அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரை இக்குழு தெரிவித்தது.அமெரிக்காவுக்கே அவமானம்:
எனக்கு நோபல் பரிசு கிடையாதா என்று கேள்வி எழுப்பிய ட்ரம்ப், அமெரிக்காவுக்கே அவமானம் என்றும் கொந்தளித்துள்ளார்.
அதிபர் டிரம்ப், உலக நாடுகளின் போர்களுக்கு தான் தீர்வு கண்டபோதும், எதுவுமே செய்யாத ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்று மிகவும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். யாரும் இதுவரை இப்படிச் செய்தது இல்லை. ஆனால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்குமா? நிச்சயமாகக் கிடைக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் நையாண்டியாக,’எதுவுமே செய்யாத சிலருக்கு நோபல் பரிசை அவர்கள் கொடுப்பார்கள். டொனால்டு டிரம்ப் போர்களை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்தார் என்பது பற்றி ஒரு புத்தகம் எழுதியவருக்கு அந்தப் பரிசைக் கொடுப்பார்கள். நோபல் பரிசு ஒரு எழுத்தாளருக்குச் செல்லும்’ என்றும் சிலாகித்துக் கூறியுள்ளார்.
காசாப் போரில் டிரம்ப்:
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா மோதல், தனது 20 அம்ச அமைதித் திட்டத்தின் மூலம் முடிவுக்கு வந்தது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரு வருடங்களுக்கு மேலாக நடந்த போரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டம் முழுமையாக வெற்றியடைந்தால், டிரம்ப் தீர்த்து வைத்த மோதல்களின் எண்ணிக்கை எட்டாகும். “காசாவில் அமைதி வெற்றி பெற்றால், எட்டு மாதங்களில் எட்டு மோதல்களைத் தீர்த்தோம். இது மிகவும் நல்லது,” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
டிரம்பின் நோபல் பரிசு ஆசை:
நீண்ட நாட்களாக நோபல் அமைதிப் பரிசைப் பெறுவதற்காக அதிபர் டிரம்ப் உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டி வந்தார். கடந்த சில மாதங்களாக காசா போர் மற்றும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது அவருக்கு முக்கியமான இராஜதந்திர சவால்களாக இருந்தன.பல்வேறு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லிவரும் டிரம்ப், பல நாடுகளின் பரிந்துரைகளையும் பெற்றுள்ளார். பாகிஸ்தான், கம்போடியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்துள்ளன என்பதை மறுக்க முடியாது.
டிரம்ப் நோபல் பரிசு ஏன் நிராகரிப்பு?
டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்கு காரணம் குறித்த பல சர்ச்சைகள் வெளியாகியுள்ளன.
நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் காலத்திற்குப் பிறகே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிபர் டிரம்ப்பின் பெயரை பிப்ரவரி 1க்குப் பிறகு பரிந்துரை செய்துள்ளன. இதுவே அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து நோர்வே தேர்வுக்குழுவில் கருத்து தெரிவிக்கையில்,நோபல் பரிசு தேர்வு கமிட்டி, அனைத்து வகையான பிரசாரங்கள், ஊடக கவனத்தையும் பார்த்துள்ளது. அமைதிக்கு வழிவகுக்கும் காரணிகள் குறித்து ஆயிரக்கணக்கான கடிதங்களை ஆண்டுதோறும் பெறுகிறோம்.
நாங்கள் அமர்ந்திருக்கும் அறை தைரியம் மற்றும் நேர்மையால் நிரம்பியுள்ளது. எங்களின் முடிவை ஆல்பிரட் நோபலின் (நோபல் பரிசை அறிமுகப்படுத்தியவர்) செயல் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தான் வழங்க வேண்டும். நோபல் பரிசு வழங்காவிட்டால், அது அமெரிக்காவை இழிவுபடுத்தும் செயல் என்று கூறியிருந்தமை நோர்வே அரசையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
அது மாத்திரமன்று நியூயார்க் நகரில் ஐ.நா.பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் செப்டம்பரில் நடைபெற்ற போது தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்தமை பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் நோபல் பரிசு குறித்து ட்ரம்ப் கூறுகையில், “எனக்கு நோபல் பரிசு கிடைக்காமல் இருப்பது நியாயமற்றது. அவர்கள் நியாமாக வழங்கினார்கள் என்றால் எனக்கு நிறைய நடவடிக்கைகளுக்காக நோபல் அளிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு இருக்க மாட்டார்கள்.

ஒபாமா பதவிக்கு வந்த சில ஆண்டுகளிலேயே அவருக்கு நோபல் பரிசு வழங்கினார்கள். உண்மையில் அவருக்கு எதற்கு வழங்கினார்கள் என்று அவருக்கே தெரியாது. கடந்த 2009 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை கிண்டலடித்தே டிரம்ப் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
புவிசார் அரசியலில் டிரம்ப்:
கடந்த ஓர் ஆண்டில் புவிசார் அரசியலில் டிரம்ப் மக் கவனம் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவும் விரிசலை சரிசெய்ய சமீபகாலமாக அக்கறை கொண்டு இரு நாடுகளுக்கும் தூதராகச் செயல்பட்டு வருகிறார். மேலும் ஈரான், வடகொரியா விவகாரத்தில் அரசியல் ரீதியாக முக்கிய முடிவுகளை டிரம்ப் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டமை, டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை மட்டுமல்லாமல், ஜீரணிக்கவும் முடியாமல் உள்ளனர்.
தற்போது அமெரிக்காவில் டிரம்பின் ஆதரவாளர்கள் “சமாதானத்தின் ஜனாதிபதி” என்ற தலைப்பில் பல சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
எட்டு மாதங்களில் எட்டு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஜனாதிபதி டிரம்ப் தீர்த்து வைத்த போர்களில் சமீபத்திய இஸ்ரேல் – ஹமாஸுக்கும் இடையிலான இரண்டு ஆண்டு மோதல் ஆகும். மற்ற ஏழு மோதல்கள் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும், ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கும், ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜானுக்கும், எகிப்து மற்றும் எத்தியோப்பியாவுக்கும், செர்பியா மற்றும் கொசோவோவுக்கும் இடையிலானவை.
ஆனாலும் பாலஸ்தீன கைதிகளுக்காக இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாறிக் கொள்வது உட்பட, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் ஜனாதிபதி டிரம்ப் வகித்த பங்கிற்கு பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

![]()