மீனவர் பிரச்சினை குறித்தும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது; இலங்கை பிரதமர் அலுவலகம் அறிக்கை

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்திய பிரதமர் நரேந்திரமோடியை புதுடில்லியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இருநாட்டு மீனவர் பிரச்சினை தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடப்பட்டதாக இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சந்திப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், கல்வி சீர்திருத்தங்கள், டிஜிட்டல் முயற்சிகள் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் .இருநாடுகளும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இலங்கை பிரதமர் அமரசூரியவை அன்புடன் வரவேற்ற பிரதமர் மோடி, அவரது வருகையைப் பாராட்டினார், இது இருதரப்பு உறவுகளுக்கும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பன்முக கூட்டாண்மைக்கும் புதிய உத்வேகத்தை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை நினைவுகூர்ந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதுமையான கல்வி நடைமுறைகளை அவதானிக்க ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பாக, டெல்லியில் உள்ள ஒரு மாதிரி கல்லூரிக்கு அவர் சென்றதன் சிறப்பம்சங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வேளையில் இலங்கையின் கல்வி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு பிரதமர் மோடி ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன், இரு நாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சிப் பயணத்தில் கூட்டாக இணைந்து பணியாற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை இரு நாடுகளினதும் மீனவர்களின் நலன் தொடர்பான விடயங்கள் தொடர்பிலும் இரு பிரதமர்களும் கலந்துரையாடியுள்ளனர். இவ்வேளையில் இரு தரப்பு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களையும் குறிப்பிட்டுள்ளார் என்றும் இலங்கை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()