செம்மணி மனித புதைகுழி 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிக்கு 19 மி. ரூபா ஒதுக்கீடு; நவம்பர் 3 வரை விசாரணை ஒத்திவைப்பு

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்காக நீதி அமைச்சினால் 19 மில்லியன் ரூபா நிதி விடுவிக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த மாதம் 18ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் , சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனால் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையில் நிதி ஒதுக்கப்படாத நிலையில் நேற்று 13 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் போது மேற்கொள்ளப்பட்ட ஸ்கான் நடவடிக்கைகள் , மற்றும் பேராசிரியர் சோமதேவாவின் செய்மதி மூல அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளின் அடிப்படையில் மனித புதைகுழி காணப்படும் இடங்களுக்கு அண்மையில் மேலும் மனித புதைகுழிகள் காணப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதால் , மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 8 வார கால அனுமதி வேண்டும் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மன்றில் விண்ணப்பம் செய்ததை அடுத்து , அதற்கான செலவீன மதிப்பீடு மன்றில் சமர்ப்பிக்கப்பட்டுநிதி ஒதுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நீதிவான், சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட துறைசார் பங்கேற்பாளர்கள் அரியாலை சித்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியை பார்வையிட்டனர்.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காணாமல் போனோர் பற்றிய அலுவலக சட்டத்தரணி பூரணி மரியநாயகம்,
செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் பகுதி நீர் தேங்கி இருப்பதால் அகழ்வு பணிகளை முன்னெடுக்க முடியாது. குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் மீளவும் களப்பணி நடைபெற்று அகழ்வு பணி தொடர்பான திகதி தீர்மானிக்கப்படும் – என்றார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் , முதல் கட்டமாக 9 நாட்களும் , இரண்டாம் கட்டமாக 45 நாட்களுமாக கட்டம் கட்டமாக 54 நாட்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த அகழ்வு பணிகளின் போது, 240 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் , அவற்றில் 239 எலும்புக் கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டு ,நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன .
![]()